2025 செப்டம்பர் 08 அன்று இலங்கை குறித்த ஊடாடும் உரையாடலின் போது (ID) ஜெனீவாவில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் (UNHRC) 60வது அமர்வில் உரையாற்றிய வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத், நாட்டில் மாற்றத்தையும், அனைத்து இலங்கையர்களின் உரிமைகள் மற்றும் நல்வாழ்வை முன்னேற்றுவதற்காக புதியதொரு அரசியல் கலாச்சாரத்தையும் உருவாக்குவதற்கான அரசாங்கத்தின் அர்ப்பணிப்பு மற்றும் அரசியல் விருப்பத்தை அடிக்கோடிட்டுக் காட்டினார். தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்புவதற்கான உள்நாட்டு செயன்முறைகள் மூலம் குறுகிய காலத்திற்குள் ஏற்பட்ட முன்னேற்றத்தை அமைச்சர் எடுத்துரைத்த அதே வேளையில், இலங்கைக்கு இந்நோக்கத்தை அடைய உரிய நேரத்தையும், அதற்கான அவகாசத்தையும் அனுமதிக்குமாறு சபையிடம் கேட்டுக்கொண்டார்.
இந்த ஊடாடும் உரையாடலில், பஹ்ரைன், குவைத், ஓமன், கட்டார், சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளை உள்ளடக்கிய வளைகுடா ஒத்துழைப்பு மன்றத்தின் (GCC) சார்பாக குவைத், பாகிஸ்தான், எத்தியோப்பியா, ஐவரி கோஸ்ட், பிலிப்பைன்ஸ், ஜப்பான், லாவோஸ் PDR, தாய்லாந்து, வனுவாட்டு, கொரிய ஜனநாயக மக்கள் குடியரசு, எரித்திரியா, ஈரான், நேபாளம், இந்தியா, ஜிம்பாப்வே, வியட்நாம், சீனா, அஜர்பைஜான், இந்தோனேசியா, துருக்கி, பெலாரஸ், எகிப்து, வெனிசுலா, மாலத்தீவு, கியூபா, தெற்கு சூடான், சூடான், ரஷ்ய கூட்டமைப்பு மற்றும் ப்ருண்டி ஆகியவை உள்ளடங்கலாக 43 நாடுகள் பங்கேற்றன.
மேற்குறிப்பிட்ட நாடுகள் இலங்கையுடனான ஒற்றுமையை வெளிப்படுத்தியதுடன்;
- மனித உரிமைகள் பேரவையுடனான இலங்கையின் தொடர்ச்சியான ஈடுபாட்டையும், அதனுடனான நாட்டின் மேம்பட்ட ஒத்துழைப்பினதும் அடையாளமாக உயர் ஸ்தானிகரின் வருகையையும் வரவேற்றன;
- நாட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் சட்டமன்ற சீர்திருத்தங்கள் உட்பட குறிப்பிடத்தக்க அபிவிருத்திகள் மற்றும் கட்புலனாகின்றவாறான முன்னேற்றத்தை அங்கீகரித்ததுடன், தேசிய மட்டத்திலான சுயாதீன செயன்முறைகளில் இலங்கையை ஆதரிக்குமாறு, மனித உரிமைகளுக்கான பேரவை மற்றும் சர்வதேச சமூகத்தை ஊக்குவித்தன;
- வளங்கள் சார்ந்த குறைபாடுகள் காரணமாக பேரவையின் முக்கிய கட்டளைகள் நிறைவேற்றப்படாமல் போகும் அபாயத்தில் உள்ள நிலையில், இலங்கையினது, வெளிப்புற பொறிமுறைக்கு வளங்களை ஒதுக்குவது குறித்து கேள்வி எழுப்பின;
- வெளிப்புறமாக விதிக்கப்பட்ட இணையான செயன்முறைகள் துருவமுனைப்பு போன்ற அபாயத்தை ஏற்படுத்துகின்றன என்பதை வலியுறுத்தின;
- இலக்கு வைக்கப்பட்ட நாடுகளில், நாடு சார்ந்த வழிமுறைகளைத் திணிப்பது மனித உரிமைகள் பேரவையின் உலகளாவிய தன்மை, பாரபட்சமற்ற தன்மை, புறநிலை மற்றும் தேர்ந்தெடுக்காத தன்மை ஆகிய ஸ்தாபகக் கொள்கைகளை குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறது எனகுறிப்பிட்டன;
- நாடுகளின் உள்ளார்ந்த விவகாரங்களில் தலையிட இரட்டைத் தரநிலைகள், அரசியல்மயமாக்கல் மற்றும் மனித உரிமைகளை கருவியாக்குதல் குறித்து கவலைகளை வெளிப்படுத்தின;
- மனித உரிமைகளை மேம்படுத்துவதில் பயனுறுதிமிக்க பெறுபேறுகளை அடைய பேரவைக்குள் ஆக்கபூர்வமான உரையாடல் மற்றும் ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தை அடிக்கோடிட்டுக் காட்டின;
இவ்வாண்டு ஜூன் மாதம் இலங்கைக்கு வருகை தந்து, அரசியல் தளம், மதத் தலைவர்கள் மற்றும் சமூகங்கள் ஆகியவை குறித்த திறந்த பரிமாற்றங்களை மேற்கொள்ள கிடைத்த வாய்ப்பை உயர் ஸ்தானிகர் வோல்கர் டர்க் பாராட்டினார்.
ஜெனீவாவில் உள்ள 60வது மனித உரிமைகள் பேரவைக்கான இலங்கையின் தூதுக்குழுவிற்கு வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் தலைமை தாங்கியதுடன், அத்தூதுக்குழுவில் ஜெனீவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் சபைக்கான இலங்கையின் நிரந்தர பிரதிநிதி தூதுவர் ஹிமாலி அருணதிலக, வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின், ஐக்கிய நாடுகள் மற்றும் மனித உரிமைகள் பிரிவின் பணிப்பாளர் நாயகம் தயாணி மெண்டிஸ் மற்றும் ஜெனீவாவில் உள்ள நிரந்தரத் தூதரகத்தின் இராஜதந்திர அதிகாரிகள் ஆகியோர் உள்ளடங்குவர்.
வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும்
சுற்றுலாத்துறை அமைச்சு
கொழும்பு
2025 செப்டம்பர் 08


