இலங்கை மற்றும் இத்தாலிக்கிடையிலான தொடக்க அரசியல் ஆலோசனைகளின் வெற்றிகரமான நிறைவு

இலங்கை மற்றும் இத்தாலிக்கிடையிலான தொடக்க அரசியல் ஆலோசனைகளின் வெற்றிகரமான நிறைவு

 

வெளிநாட்டு அலுவல்கள் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர மற்றும் இத்தாலியின் வெளிநாட்டு அலுவல்கள் மற்றும் சர்வதேச ஒத்துழைப்பிற்கான பிரதி அமைச்சர் மரியா த்ரிபோடி ஆகியோரின் இணை-தலைமையில், இலங்கை மற்றும் இத்தாலி இடையேயான முதல் சுற்று அரசியல் ஆலோசனைகள், 2025 செப்டம்பர் 4 ஆம் திகதி கொழும்பில் உள்ள வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சில் வெற்றிகரமாக நிறைவடைந்தன.

அரசியல் ஆலோசனை பொறிமுறையொன்றை நிறுவுவது குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தம் இரு பிரதி அமைச்சர்களாலும் கைச்சாத்திடப்பட்டதுடன், இது இரு நாடுகளுக்கும் இடையிலான உரையாடலுக்கான முறையான, கட்டமைக்கப்பட்ட சட்டகமொன்றை வழங்குகிறது.

இத்தாலிய பிரதி அமைச்சர், பிரதமரும், கலாநிதியுமான ஹரிணி அமரசூரிய மற்றும் வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோரையும் சந்தித்து, அவர்களுடன் பயனுறுதிமிக்க கலந்துரையாடல்களை மேற்கொண்டார்.

அரசியல் ஆலோசனைகளில், இலங்கையும் இத்தாலியும் தொழிலாளர் இயக்கம், வர்த்தகம், முதலீடு, சுற்றுலா, பாதுகாப்பு, எரிசக்தி, உணவுப் பாதுகாப்பு, கலாச்சாரம் மற்றும் கல்வி தொடர்பான துறைகளில் நிறுவன ஒத்துழைப்பை அதிகரிப்பதற்கான வழிகளை அடையாளம் கண்டன. இத்தாலி-இலங்கை பாராளுமன்ற நட்புறவு சங்கத்தின் சமீபத்திய மறுமலர்ச்சி மற்றும் இரு தரப்பு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கிடையேயான ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கான வழிகள் குறித்தும் விவாதங்களில் கவனம் செலுத்தப்பட்டன.

பேச்சுவார்த்தையில் உள்ள இருதரப்பு ஆவணங்களின் காலதாமதமின்றிய இறுதிசெய்தலுக்கு முன்னுரிமை அளிக்க இரு தரப்பினரும் ஒப்புக்கொண்டனர். இரு நாடுகளுக்கும் இடையே பாதுகாப்பான, வழமையானதும், நிலையானதுமான இடம்பெயர்வை உறுதி செய்வதற்காக, இடம்பெயர்வு மற்றும் போக்குவரத்து கூட்டாண்மை குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தை முன்கூட்டியே முடிப்பதற்கும், ஓட்டுநர் உரிமங்களை பரஸ்பரரீதியில் அங்கீகரிப்பதற்கான ஒப்பந்தத்தை புதுப்பிப்பதற்கும், குறிப்பாக முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. பிரதி அமைச்சர்கள் பரஸ்பர ஆர்வமுள்ள பிராந்திய மற்றும் சர்வதேச பிரச்சினைகள் குறித்தும் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர்.

வருகை தந்த பிரதி அமைச்சருடனான சந்திப்புகளின் போது, ​​இத்தாலியில் உள்ள இலங்கை புலம்பெயர் தொழிலாளர் படைக்கு தொடர்ந்து வழங்கப்படும் உதவிகளுக்கு இலங்கைத் தரப்பு இத்தாலிக்கு நன்றி தெரிவித்தது. இத்தாலியில் தரமான மற்றும் தொழில்வாண்மைமிக்க இலங்கை புலம்பெயர் தொழிலாளர் படையின் பங்களிப்பை பிரதி அமைச்சர் த்ரிபோடி பாராட்டியதுடன், இலங்கைத் தொழிற்படையானது,  நாட்டின் 12வது, ஐரோப்பிய ஒன்றியம் அல்லாத, பெரிய புலம்பெயர் தொழிலாளர் படை என்றும், மக்களிடையேயான உறவுகளை வலுப்படுத்துவதற்கான குறிப்பிடத்தக்க ஆதாரமாக விளங்குகின்றது என்றும்  அவர் கூறினார்.

ஓட்டுநர் உரிமங்களை பரஸ்பரரீதியில் அங்கீகரிப்பதற்கான ஒப்பந்தம் மற்றும் இடம்பெயர்வு மற்றும் போக்குவரத்து கூட்டாண்மை குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தை புதுப்பிப்பதை விரைவுபடுத்துவதற்கு உயர் மட்டத்தில் தொடர்புடைய அதிகாரிகளுடன் தனிப்பட்ட முறையில் ஈடுபடுவதாகவும் பிரதி அமைச்சர் த்ரிபோடி உறுதியளித்தார்.

இவ்வருகை, 2016 ஆம் ஆண்டுக்குப் பிறகு இத்தாலியைச் சேர்ந்த உயர் மட்ட பிரமுகர் ஒருவரின் கொழும்பிற்கான வ்ருகையாக அமைகிறது.

இத்தாலியானது, இலங்கைக்கான 5வது பெரிய ஏற்றுமதி சந்தையாவதுடன், முதலீடு மற்றும் சுற்றுலாவிற்கான குறிப்பிடத்தக்க மூல சந்தையாகும்.

வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு

மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு

கொழும்பு

2025 செப்டம்பர் 04

 

Please follow and like us:

Close