
2025 செப்டம்பர் 02, செவ்வாய்க்கிழமை அன்று அமைச்சில் கொழும்பைத் தளமாகக் கொண்ட இராஜதந்திரப் படையினருக்கான விளக்கமளிப்பு நிகழ்விற்கு வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் தலைமை தாங்கினார்.
இவ்விளக்கமளிப்பு நிகழ்வில், 11 மாதங்களுக்கு முன்பு பதவியேற்றதிலிருந்து அரசாங்கம் அடைந்துள்ள முன்னேற்றத்தை அமைச்சர் ஹேரத் கோடிட்டுக் காட்டினார்; அனைத்து இலங்கையர்களின் உரிமைகள் மற்றும் நல்வாழ்வைப் பாதுகாக்கவும் மேம்படுத்தவும் தொடங்கப்பட்ட மாற்றங்களுக்கான பல முக்கிய முன்முயற்சிகளை வலியுறுத்தினார். இந்நோக்கத்தை அடைவதில் அரசாங்கத்தின் உறுதியான மற்றும் உண்மையான அர்ப்பணிப்பை அவர் மீண்டும் உறுதிப்படுத்தினார்.
காணாமல் போனோர் அலுவலகம் (OMP), இழப்பீடுகளுக்கான அலுவலகம் (OR), தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்க அலுவலகம் (ONUR) உள்ளிட்ட உள்நாட்டு நல்லிணக்க வழிமுறைகளை வலுப்படுத்த அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகளையும் அமைச்சர் எடுத்துரைத்தார். மேலும், அரசாங்கத்தின் ஊழல் எதிர்ப்பு இயக்கம், தூய்மையான இலங்கைத் திட்டம், புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் மற்றும் இணையத்தளப் பாதுகாப்பு சட்டத்தில் முன்மொழியப்பட்ட திருத்தங்களை வரைவதில் ஏற்பட்டுள்ள உறுதியான முன்னேற்றம் குறித்தும் அமைச்சர் விளக்கினார்.
அரசாங்கம் மேற்கொண்டுள்ள மாற்றத்திற்கான பாதை தொடர்பாக இராஜதந்திர சமூகத்தின் தொடர்ச்சியான அங்கீகாரத்தையும் ஊக்கத்தையும் அமைச்சர் ஹேரத் கேட்டுக்கொண்டார்; மேலும் நல்லிணக்கம் மற்றும் மனித உரிமைகளை முன்னேற்றுவதற்கும், சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்துவதற்கும், சகலரையும் உள்ளடக்கிய பொருளாதார வளர்ச்சியை உறுதி செய்வதற்கும் தொடங்கப்பட்டுள்ள தேசிய செயன்முறைகளை ஆதரிக்குமாறு அவர்களை வலியுறுத்தினார்.
வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சின் செயலாளர், நீதி மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சு, சட்டமா அதிபர் திணைக்களம், காணாமல் போனோர் அலுவலகம், இழப்பீடுகளுக்கான அலுவலகம், தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்திற்கான அலுவலகம் ஆகியவற்றின் பிரதிநிதிகள், வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகள் ஆகியோர் இந்த மாநாட்டில் கலந்து கொண்டனர்.
வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும்
சுற்றுலாத்துறை அமைச்சு
கொழும்பு
2025 செப்டம்பர் 03









