ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் உயர் ஸ்தானிகர் வோக்கர் டர்க்கின் இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயம் நிறைவு

 ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் உயர் ஸ்தானிகர் வோக்கர் டர்க்கின் இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயம் நிறைவு

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் உயர் ஸ்தானிகர் வோக்கர் டர்க், 2025 ஜூன் 23 முதல் 26 வரையிலான, இலங்கைக்கான தனது நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை நிறைவு செய்தார்.

இவ்விஜயத்தின் போது, உயர் ஸ்தானிகர் டர்க், ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க மற்றும் பிரதமர், பேராசிரியர் ஹரிணி அமரசூரிய ஆகியோரைச் சந்தித்ததுடன், வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத், நீதி மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சர் ஹர்ஷன நாநாயக்கார, பொதுப் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால, வெளிநாட்டு அலுவல்கள் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பிரதி அமைச்சர் அருண் ஹேமசந்திர மற்றும் பாதுகாப்புப் பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர ஆகியோருடனும் ஆக்கபூர்வமான கலந்துரையாடல்களை மேற்கொண்டார். அவர் பாராளுமன்றின் சபாநாயகர், பிரதம நீதியரசர்  மற்றும் பல அரச பிரதிநிதிகளையும் சந்தித்தார்.

பொருளாதார மற்றும் சமூக உரிமைகள் உள்ளிட்ட மனித உரிமைகளை முன்னேற்றுவதற்கான நடவடிக்கைகள், தேசிய நல்லிணக்க செயன்முறைகளை வலுப்படுத்துதல் மற்றும் சமூக நீதியை உறுதி செய்தல் ஆகியவற்றில் கலந்துரையாடல்கள் கவனம் செலுத்தின. அரசானது, இந்நோக்கங்களை அடைவதற்கான தனது உண்மையான உறுதிப்பாட்டை உயர் ஸ்தானிகரிடம் மீண்டும் வலியுறுத்தியதுடன், நம்பிக்கையை வளர்க்கும் நடவடிக்கைகள், "தூய்மையான இலங்கை" திட்டம், ஊழல் எதிர்ப்பிற்கான முன்முயற்சிகள், நல்லிணக்க வழிமுறைகளை மேலும் வலுப்படுத்துதல், பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை இரத்து செய்தல், நிகழ்நிலைப் பாதுகாப்புச் சட்டத்தைச் சீர்த்திருத்துதல் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகளை மேம்படுத்துவதற்கான புதிய சட்டங்கள் உள்ளிட்ட ஏற்கனவே எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் திட்டமிடப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விளக்கியது.

கலந்துரையாடல்களின் போது, இலங்கை சமூகத்தின் அனைத்துப் பிரிவுகளிலும் தான் கண்ட மாற்றத்தின் வேகத்தை உயர் ஸ்தானிகர் எடுத்துரைத்தார். நெறிமுறை நிர்வாகம், மனித உரிமைகள் மற்றும் தேசிய ஒற்றுமையை மேம்படுத்துவதற்கான அரசாங்கத்தின் திட்டங்களை அவர் பாராட்டியதுடன், அரசாங்கத்தின் முன்முயற்சிகளை வலுப்படுத்த தனது அலுவலகத்தின் ஆதரவை வெளிப்படுத்தினார். ஊழல் மற்றும் தவறான நிர்வாகத்தை நிவர்த்தி செய்வதற்கான அரசாங்கத்தின் நடவடிக்கைகளால் தான் ஊக்குவிக்கப்பட்டதாகவும், இந்த உத்வேகம் தொடர்ந்தும் பேணப்படுமென நம்புவதாகவும் உயர் ஸ்தானிகர் டர்க் தெரிவித்தார். பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான, உண்மையானதும், வெளிப்படையானதுமான தன்மை கலந்துரையாடல்களில் பிரதிபலித்தமையைக் குறிப்பிட்ட உயர் ஆணையர், இலங்கை அதன் பன்முகத்தன்மையை பலமாக ஏற்றுக்கொண்டு அமைதியான சகவாழ்வுக்கு எடுத்துக்காட்டொன்றாக மாற முடியும் என்று கூறினார். உலகமும், பல்தரப்பு முறைமையும்  முன்னெப்போதும் இல்லாத சவால்களை எதிர்கொண்டுள்ள இத்தருணத்தில், ஆழ்ந்த நம்பிக்கையுடன் இலங்கைக்கு தாம் வருகை தந்துள்ளதாக உயர் ஸ்தானிகர் தெரிவித்தார்.

கொழும்பு, யாழ்ப்பாணம், திருகோணமலை மற்றும் கண்டியில் உள்ள மதத் தலைவர்கள், அரசியல் கட்சிகள் மற்றும் சிவில் சமூகம் உள்ளிட்ட பல அரசு சாரா தரப்புக்களையும் உயர் ஸ்தானிகர் சந்தித்தார்.

கொழும்பில், நல்லிணக்கத்தைக் கையாளும் தேசிய நிறுவனங்களான, காணாமல் போனோர் அலுவலகம், இழப்பீடுகளுக்கான அலுவலகம் மற்றும் தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்திற்கான அலுவலகம் ஆகியவற்றின் பிரதிநிதிகளுடன் அவர் ஆலோசனைகளில் ஈடுபட்டார். இப்பிரதிநிதிகள், தாம் பிரதிநிதித்துவப்படுத்தும் நிறுவனங்களின் பணிகள் மற்றும் உரிய வேலைத் திட்டங்களில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து உயர் ஸ்தானிகர் டர்க்கிடம் விளக்கினர். அவர் இலங்கை மனித உரிமைகள் ஸ்தானிகரிடம்  கலந்துரையாடியதுடன், ஆணையத்தின் நீண்டகாலப் பணிகளைப் பாராட்டினார்.

கண்டியில், உயர் ஸ்தானிகர் டர்க், புனித தலதா மாளிகைக்கு விஜயமளித்ததுடன், அங்கு அவர் பிரதம அறங்காவலரைச் சந்தித்து, "தேவாவ" நிகழ்வில் கலந்து கொண்டார். மல்வத்த பீடத்தின் அதி வணக்கத்திற்குரிய திப்பட்டுவாவே ஸ்ரீ சித்தார்த்த சுமங்கல மகாநாயக்க தேரர் மற்றும் அஸ்கிரிய பீடத்தின் அதி வணக்கத்திற்குரிய வரகாகொட ஸ்ரீ ஞானரத்ன மகாநாயக்க தேரர் ஆகியோரையும் அவர் சந்தித்தார்.

யாழ்ப்பாணத்திற்கு விஜயமளித்திருத்த உயர் ஸ்தானிகர், புனித நல்லூர் கோவிலுக்குச் சென்று மத நடவடிக்கைகளில் பங்கேற்றார்.

நாட்டின் பல்வேறு பகுதிகளுக்குச் சென்றிருந்த உயர் ஸ்தானிகர் வடக்கு மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர்கள், மாவட்டச் செயலாளர்கள் மற்றும் சிவில் சமூகப் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்களைச் சந்தித்தார். யாழ்ப்பாணத்தின் செம்மணியிலுள்ள கல்லறைப் பகுதியையும் அவர் பார்வையிட்டார்.

தனது வருகையின் முழுமையான காலப்பகுதியில், வழங்கப்பட்ட ஒத்துழைப்புக்காக இலங்கை அரசாங்கத்திற்கு தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்ட உயர் ஸ்தானிகர், தனது அலுவலகத்துடன் இலங்கை பேணிவரும், தொடர்ச்சியானதும், ஆக்கபூர்வமானதுமான ஈடுபாட்டையும் பாராட்டினார்.

2016, பெப்ரவரிக்குப் பின்னர், ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகளுக்கான உயர் ஸ்தானிகர் ஒருவர் இலங்கைக்கு வருகை தந்திருத்தமை இதுவே முதல் முறையாகும்.

வெளிநாட்டு அலுவல்கள்வெளிநாட்டு வேலைவாய்ப்பு

மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு

கொழும்பு

2025 ஜூன் 27

 

Please follow and like us:

Close