ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்கவின் ஜெர்மனியின் பெர்லினுக்கான உத்தியோகபூர்வ விஜயம்

ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்கவின் ஜெர்மனியின் பெர்லினுக்கான உத்தியோகபூர்வ விஜயம்

ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க, ஜெர்மனியின் ஜனாதிபதி பிராங்க்-வால்டர் ஸ்டெய்ன்மியரின் அழைப்பின் பேரில் 2025 ஜூன் 11 முதல் 13 வரையில், ஜெர்மனியக் கூட்டாட்சி குடியரசிற்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார்.

இவ்விஜயத்தின் போது, அரசாங்க முன்னுரிமைகளின் அடிப்படையில் வர்த்தகம், இலத்திரனியல் பொருளாதாரம், முதலீடு மற்றும் தொழில் பயிற்சி வாய்ப்புகள் உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைப்புக்கான புதிய வழிகள் குறித்து ஆலோசிக்க ஜனாதிபதி திஸாநாயக்க ஜெர்மனியின் ஜனாதிபதி, கூட்டாட்சி அரசாங்கத்தின் முக்கிய அமைச்சர்கள் மற்றும் பிற பிரமுகர்களுடன் இருதரப்பு கலந்துரையாடல்களில் ஈடுபடுவார்.

இலங்கையின் பொருளாதார மாற்றம், உருவாகிவரும் முதலீட்டு வாய்ப்புகள், நாட்டின் வளர்ச்சித் திறன் மற்றும் இரு நாடுகளுக்கும் இடையில் புதிய வர்த்தக உறவுகளை உருவாக்குவதற்கான வாய்ப்புகள் ஆகியவற்றை எடுத்துக்காட்டும் வகையில், ஜெர்மனியில் உள்ள முக்கிய தொழிற்துறைகளுடன், ஜெர்மன் வர்த்தக மற்றும் தொழிற்துறை சபை (DIHK) ஏற்பாடு செய்யும் வணிக மன்றத்திற்கு ஜனாதிபதி திஸாநாயக்க தலைமை தாங்கவுள்ளார்.

மேலும், இவ்விஜயத்தின் போது ஜனாதிபதி ஜெர்மனியின் சுற்றுலா மற்றும் பயணத்துறைசார் தொழிற்சங்கங்களை சந்திப்பார்.

இவ்விஜயத்தில், ஜனாதிபதியுடன் வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் மற்றும் சிரேஷ்ட அரச அதிகாரிகள் கலந்து கொள்ளவுள்ளார்கள்.

வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும்

சுற்றுலாத்துறை அமைச்சு

கொழும்பு

2025 ஜூன் 09

Please follow and like us:

Close