
23வது ஆசியான் பிராந்திய மன்றத்தின் (ARF) பேரிடர் நிவாரணம் குறித்த இடை-அமர்வுக் கூட்டமானது, பங்களாதேஷ், இலங்கை மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளின் இணை தலைமையில் இலங்கையால் 2025, ஜூன் 5 அன்று நடாத்தப்பட்டது; ஆசியான் பிராந்திய மன்றத்தின் 27 உறுப்பு நாடுகளைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்கள் இதில் கலந்து கொண்டனர்.
ஒருங்கிணைந்ததும், சிறந்த தயார்நிலையிலுள்ள வகையிலுமான பேரிடர் நிவாரணத்தை வழங்குவதன் முக்கியத்துவத்தையும், பேரிடரினால் ஏற்படும் தாக்கத்தைக் குறைப்பதற்கு நிலைபேறானதொரு மீட்சியை உறுதி செய்வதற்கும் பேரிடர் நிலைமையை எதிர்கொள்வதனைத் திட்டமிடல் மற்றும் செயற்படுத்தலின் முக்கியத்துவத்தையும் இணைத் தலைமை வகித்த இலங்கை, அடிக்கோடிட்டுக் காட்டியது. இம்மன்றம் 'உலக சுற்றாடல் தினம்' கொண்டாடப்படும் அதே நாளில் அமைந்ததால், நிலைபேறான சுற்றுச்சூழல் பாதுகாப்பு நடைமுறைகள், தேசிய கொள்கைகள் மற்றும் பேரிடர் நிவாரண வழிமுறைகளை வலுப்படுத்துவதற்கான முன்முயற்சிகளைக் கடைப்பிடிப்பதற்கான இலங்கையின் அர்ப்பணிப்பு மேற்கோடிட்டுக் காட்டப்பட்டது. 'இலங்கையின் மனிதாபிமான ரீதியிலான இடர் நிவாரண உதவிக்குழு'வின் தலைவர் சமீபத்திய நிலநடுக்கத்தைத் தொடர்ந்து மியான்மருக்கு இலங்கை ஆயுதப்படைகளால் மேற்கொள்ளப்பட்ட மனிதாபிமான உதவிப் பணியில் இலங்கையின் அனுபவத்தை, பங்கேற்பாளர்களுடன் பகிர்ந்து கொண்டார். இலங்கைத் தூதுக்குழுவானது, வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சின் தென்கிழக்கு ஆசியா மற்றும் மத்திய ஆசியப் பிரிவின் பணிப்பாளர் நாயகம் திருமதி சாமரி ரொட்ரிகோ தலைமையில் வழிநடத்தப்பட்டதுடன், பேரிடர் முகாமைத்துவ மையம் மற்றும் பாதுகாப்பு அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகளையும் உள்ளடக்கியிருந்தது.
கூட்டத்தில் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளில், சிறந்த நடைமுறைகளைப் பரிமாறிக்கொள்ளல், திறன் மேம்பாட்டு வழிமுறைகளை மேம்படுத்துதல், பிராந்திய மற்றும் சர்வதேச ஒத்துழைப்பு மற்றும் பேரிடர் நிவாரண முயற்சிகளில் சிவில்-இராணுவ ஒருங்கிணைப்பை வலுப்படுத்துதல் ஆகியவற்றில் கவனம் செலுத்தப்பட்டன.
மன்றத்தில் இளைஞர் பிரதிநிதிகளால் நடத்தப்பட்ட குழு விவாதங்கள், நிலைபேறான சுற்றாடல் பாதுகாப்பு உத்திகள் மற்றும் பேரிடர் நிவாரணம் ஆகியவற்றுக்கு இடையேயான தொடர்பை அடிக்கோடிட்டுக் காட்டும் வகையில், எதிர்காலத்திற்கான தயார்நிலை சார்ந்த புதிய கண்ணோட்டங்களை வழங்கின.
பேரிடர் நிவாரணம் 2024 – 2027க்கான ஆசியான் பிராந்திய மன்றத்தின் பணித்திட்டம் மற்றும் ஹனோய் செயற்திட்டம் II ஆகியவற்றின் முன்னேற்றத்தை இக்கூட்டம் மதிப்பாய்வு செய்தது.
கூட்டத்திற்கு முன்னதாக, வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சின் செயலாளர் திருமதி அருணி ரணராஜா அவர்களால், ஆசியான் பிராந்திய மன்ற உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகளை வரவேற்க 2025 ஜூன் 04 அன்று நடாத்தப்பட்ட வரவேற்பு நிகழ்ச்சியில் இலங்கை விமானப்படையினரால் வழங்கப்பட்ட கலாச்சார நிகழ்ச்சிகளும் அடங்கியிருந்தன.
ஆசியான் பிராந்திய மன்றம் என்பது ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் பாதுகாப்பு உரையாடலுக்கான ஆசியான் தலைமையிலான ஒரு பொறிமுறையாவதுடன், பிராந்தியத்தில் நம்பிக்கையை வளர்க்கும் நடவடிக்கைகளையும், முரண்பாட்டுத் தடுப்புக்கான இராஜதந்திரத்தையும் ஊக்குவிப்பதற்கான ஆக்கபூர்வமான உரையாடல் மற்றும் ஆலோசனையை வளர்ப்பதற்கான மன்றமாக விளங்குகிறது. இலங்கை 2007 முதல் ஆசியான் பிராந்திய மன்றத்தில் அங்கத்துவம் வகிப்பதுடன், பேரிடர் நிவாரணம் தொடர்பான தற்போதைய இடைக்கால கூட்டத்திற்கு இணைத் தலைமை தாங்குகிறது.
வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும்
சுற்றுலாத்துறை அமைச்சு
கொழும்பு
2025 ஜூன் 05





