
வெளியுறவுச் செயலாளர்கள் தலைமையிலான இலங்கைக்கும் பூட்டானுக்கும் இடையிலான இருதரப்பு அரசியல் ஆலோசனைகளின் இரண்டாவது அமர்வின் உரையாடல்கள், 2025, மே 27 அன்று திம்புவில் வெற்றிகரமாக முடிவடைந்ததுடன், இது பூட்டானுடனான இலங்கையின் ஈடுபாட்டின் முக்கியமான மைல்கல்லொன்றைக் குறிக்கிறது.
2025 மே 27 முதல் 28 வரையில், பூட்டானுக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டுள்ள இலங்கையின் வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சின் செயலாளர் அருணி ரணராஜா, பூட்டான் வெளியுறவுச் செயலாளர் பெமா சோடனுடன் இருதரப்பு உரையாடலின் இரண்டாவது அமர்வுக்கு இணை-தலைமை தாங்கினார். இவ்வாலோசனைகளின் முதல் அமர்வு நவம்பர் 2015 இல் கொழும்பில் நடைபெற்றது.
திம்புவில் செவ்வாய்க்கிழமையன்று நடைபெற்ற இக்கலந்துரையாடல்கள், கல்வி மற்றும் மனிதவள அபிவிருத்தி, இடைத்தொடர்பு, வர்த்தகம் மற்றும் முதலீடு, காலநிலை மாற்றம், சுற்றுலா, கலாச்சாரம் மற்றும் மக்களிடையேயான ஈடுபாடு உள்ளிட்ட பரஸ்பர ஆர்வமுள்ள பல்வேறு துறைகளை உள்ளடக்கியிருந்தன. இரு தரப்பினரும் தற்போதுள்ள ஒத்துழைப்பின் முன்னேற்றத்தை மீளாய்வு செய்ததுடன், இருதரப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதற்கான வழிகளை ஆராய்ந்தனர்.
இரு நாடுகளும் அங்கத்துவம் வகிக்கும் பிராந்திய மற்றும் பல்தரப்பு மன்றங்களின் தற்போதைய முன்னேற்றங்கள் குறித்த கலந்துரையாடல்களும் இவ்வாலோசனைகளில் அடங்குகின்றன. பகிரப்பட்ட நலன்களை மேம்படுத்துவதற்கும், பொதுவான சவால்களை நிவர்த்தி செய்வதற்கும் இணைந்து பணியாற்றுவதற்கான தங்கள் ஈடுபாட்டை இலங்கையும் பூட்டானும் மீண்டும் உறுதிப்படுத்தின.
இவ்விஜயத்தின் போது, வெளியுறவுச் செயலாளர் ரணராஜா, பூட்டான் பிரதமர் லியோன்சென் டாஷோ ஷெரிங் டோப்கே மற்றும் வெளியுறவு மற்றும் வெளிநாட்டு வர்த்தக அமைச்சர் லியோன்போ டி.என். துங்யேல் ஆகியோரை மரியாதை நிமித்தமாக சந்தித்தார். இலங்கையில் தற்போதைய முன்னேற்றங்கள் குறித்து பூட்டான் தலைமைக்கு அவர் விளக்கியதுடன், இருதரப்பு உறவுகளை மென்மேலும் ஆழப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசித்தார்.
செயலாளர் ரணராஜா, சுகாதார அமைச்சர் டென்டின் வாங்சுக்; கல்வி மற்றும் திறன்சார் அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் ஷேவாங் சி. டோர்ஜி; மற்றும் அரச சிவில் சேவை ஆணைக்குழுவின் ஆணையாளர் பாபு ராம் ஷெர்பா ஆகியோருடன் கலந்துரையாடல்களிலும் ஈடுபட்டார். கல்வி, மனிதவளம் மற்றும் சுகாதாரத் துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துவதில் இச்சந்திப்புகள் கவனம் செலுத்தின.
இலங்கை தூதுக்குழுவில் பூட்டானுக்கான இலங்கை தூதுவர் தர்மபால வீரக்கொடி, தெற்காசியா மற்றும் சார்க் பிரிவின் பணிப்பாளர் நாயகம் நிலுக கதுருகமுவ மற்றும் அமைச்சின் தெற்காசியா மற்றும் சார்க் பிரிவின் உதவிப் பணிப்பாளர் டயானா பெரேரா ஆகியோர் அடங்குவர். வெளியுறவுச் செயலாளர் பெமா சோடன் தலைமையிலான பூட்டான் தூதுக்குழுவில் வெளியுறவு மற்றும் வெளிநாட்டு வர்த்தக அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் பல பூட்டான் அமைச்சுக்கள் மற்றும் நிறுவனங்கள் உள்ளடங்குகின்றன.
இலங்கையும் பூட்டானும் 1987 ஆம் ஆண்டு முறையான இராஜதந்திர உறவுகளை ஏற்படுத்திக் கொண்டதுடன், பௌத்த விழுமியங்கள், பரஸ்பர மரியாதை மற்றும் சிறந்த ஒத்துழைப்பு ஆகியவற்றின் அடிப்படையில் துடிப்பானதொரு உறவை வளர்த்து வந்துள்ளன. 2025, ஏப்ரல் இல் பாங்கொக்கில் நடந்த பிம்ஸ்டெக் உச்சிமாநாட்டின் போது பூட்டானிய பிரதமர் ஷெரிங் டோப்கே, பிரதமரும் பேராசிரியருமான ஹரிணி அமரசூரியாவைச் சந்தித்தார். 2015, ஏப்ரல் இல் அவர் இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டிருந்தபோது, பூட்டான் அரசாங்கத்தின் வேண்டுகோளின் பேரில், பரிசளிக்கப்பட்ட இலங்கை புனித ஸ்ரீ மகா போதிமரக்கன்று, தற்போது அரச குடும்பத்தின் முன்னோர்களின் மரபுவழி அமைவிடமான, இராச்சியத்தின் வடகிழக்கு மாவட்டத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.
வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும்
சுற்றுலாத்துறை அமைச்சு
கொழும்பு
2025 மே 28









