நியூசிலாந்தின் துணைப் பிரதமரும் வெளியுறவு அமைச்சருமான வின்ஸ்டன் பீட்டர்ஸுடனான இருதரப்புப் பேச்சுவார்த்தைகளின் முடிவில் வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் கௌரவ எச்.எம். விஜித ஹேரத் ஊடகங்களுக்கு அளித்த அறிக்கை

நியூசிலாந்தின் துணைப் பிரதமரும் வெளியுறவு அமைச்சருமான வின்ஸ்டன் பீட்டர்ஸுடனான இருதரப்புப் பேச்சுவார்த்தைகளின் முடிவில் வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் கௌரவ எச்.எம். விஜித ஹேரத் ஊடகங்களுக்கு அளித்த அறிக்கை

நியூசிலாந்தின் துணைப் பிரதமரும் வெளியுறவு அமைச்சருமான வின்ஸ்டன் பீட்டர்ஸ் அவர்களே,

நியூசிலாந்து மற்றும் இலங்கை பிரதிநிதிகளின் சிறப்பு அதிதிகளே,

ஊடக நண்பர்களே,

உயர் மட்டப்பிரதிநிதிகள் குழுவை வழிநடத்தி, இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்தின் துணைப் பிரதமரும், வெளியுறவு அமைச்சருமான வின்ஸ்டன் பீட்டர்ஸை வரவேற்பது பெருமிதமளிக்கிறது.

2021 ஆம் ஆண்டு கொழும்பில் வதிவிட இராஜதந்திர தூதர்ப் பணியகம் நிறுவப்பட்டதும், அதனைத்தொடர்ந்து இவ்வாண்டு தொடக்கத்தில் வெலிங்டனில் இலங்கை உயர் ஸ்தானிகராலயம் திறக்கப்பட்டதன் பின்னர், இடம்பெற்ற இவ்வுத்தியோகபூர்வ வருகையானது, சமீபத்திய காலங்களில் நியூசிலாந்தின் உயர்மட்ட ஈடுபாட்டைக் குறிக்கிறது.

நமது இரு நாடுகளுக்கும் இடையே வளர்ந்து வரும் கூட்டாண்மையில் இது குறிப்பிடத்தக்கதொரு  மைல்கல்லாக விளங்குகின்றது.

நம்மிரு நாடுகளும் இரு நாடுகளுக்கிடையிலான உறவுகளை மேலும் ஆழப்படுத்தவும் விரிவுபடுத்தவும் நெருக்கமாக பணியாற்றியுள்ளன என்பதையும், இதன் விளைவாக, இலங்கை-நியூசிலாந்து இருதரப்பு உறவு மேலும் திடப்பட்டுள்ளது என்பதையும் குறிப்பிடுவதில் நான் பெருமகிழ்ச்சியடைகிறேன்.

எமது உறவுகளை துடிப்பானதும், பன்முகத்தன்மை கொண்டதுமான கூட்டாண்மையாக மாற்றியமைக்கும் பொருட்டு, நியூசிலாந்து அரசுடன் நெருக்கமாகப் பணியாற்ற நான் மிகுந்த ஆவலாயுள்ளேன்.

ஊடக நண்பர்களே,

இன்று நானும், அமைச்சர் பீட்டர்ஸும் விரிவான மற்றும் பயனுறுதிமிக்கக் கலந்துரையாடல்களை மேற்கொண்டோம்; முக்கியமாக வர்த்தகம் மற்றும் முதலீடு, விவசாயம், கல்வி, சுற்றுலா மற்றும் விளையாட்டு ஆகிய துறைகளில் எமது நலன்களை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தினோம். எமதிரு நாடுகளுக்கிடையில், இதுவரை நடைபெற்ற பேச்சுவார்த்தைகளை நாங்கள் வரவேற்றதுடன், நியூசிலாந்துடனான வர்த்தக மற்றும் பொருளாதார உரையாடல் அமர்வொன்றை நிறுவுவதை நோக்கிச் செயற்படுவது குறித்து ஆலோசித்தோம்; இதன் மூலம் பல துறைகளில் ஒத்துழைப்பை நெறிப்படுத்தவும், இலங்கை மற்றும் நியூசிலாந்தின் வளர்ச்சி மற்றும் செழுமையை மேம்படுத்தவும் நாங்கள் நம்பிக்கை கொண்டுள்ளோம்.

குறிப்பாக பாலுற்பத்திகள், பதப்படுத்தப்பட்ட உணவு மற்றும் புத்தம் புதிய உற்பத்திகள் போன்ற உயர் இயற்திறன் கொண்ட துறைகளில் வர்த்தக தொடர்புகளை விரிவுபடுத்துவது குறித்தும் நாம் ஆராய்ந்ததுடன், இலங்கை உற்பத்திகளுக்கான சந்தை அணுகலை மேம்படுத்துவதையும் ஆலோசித்தோம்.

பாலுற்பத்தி குறித்த சிறப்புப் பயிற்சி முன்னெடுப்பு (DETI) போன்ற முன்முயற்சிகள் உட்பட இலங்கையின் பாலுற்பத்தித் தொழிற்துறையில் நியூசிலாந்து வழங்கி வரும் நீண்டகால ஆதரவானது, கிராமப்புற வாழ்வாதாரங்களில் அளப்பரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. பாலுற்பத்தித் துறையில் இப்பெறுமதிமிக்க கூட்டாண்மையைத் தொடரவும், மென்மேலும் ஆழப்படுத்தவும் நாங்கள் இணங்கினோம்.

சுற்றுலாத் துறையில், பயன்படுத்தப்படாத ஆற்றலை நாங்கள் இனங்கண்டதுடன், கூட்டு ஊக்குவிப்புகளையும், முதலீடுகளையும் பரிசீலிக்கவும் ஒப்புக்கொண்டோம். சுற்றுலாத்துறை மற்றும் மக்களுக்கிடையேயான தொடர்புகளை மேம்படுத்துவதற்கான மேலதிக முன்னெடுப்புக்களையும் நாங்கள் அங்கீகரித்தோம்.

கல்வி, சமூக ஒற்றுமை, உணவுப் பாதுகாப்பு மற்றும் காலநிலை மீள்தகவாற்றல் போன்ற பல துறைகளில் நியூசிலாந்தின் முக்கிய அபிவிருத்தி உதவியை நாங்கள் அங்கீகரித்தோம். இளைஞர்களுக்கான தொழிற்துறைசார் திறன்மேம்பாட்டில் கவனம் செலுத்தி, தொழிற்பயிற்சிக்கான ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதில் நாங்கள் மிகுந்த ஆர்வத்தை வெளிப்படுத்தினோம்.

1,200 க்கும் மேற்பட்ட இலங்கை மாணவர்கள் நியூசிலாந்தில் கல்விகற்கும் நிலையில், வலுவான கல்வி இணைப்புகளை உருவாக்குவதிலும், கல்வி மற்றும் நிறுவன ரீதியிலான கூட்டாண்மைகளை மேம்படுத்துவதிலும் எமது ஆர்வத்தை மீண்டும் வலியுறுத்தினோம்.

ஊடக நண்பர்களே,

புலம்பெயர்வு நிர்வாகத்தில், குறிப்பாக மட்டக்களப்பில் உள்ள புலம்பெயர்ந்தோர் தகவல் மையத்தில், பெறப்பட்ட ஒத்துழைப்பை நாங்கள் பாராட்டினோம்; மேலும் பாதுகாப்பான மற்றும் வழக்கமான இடம்பெயர்வு வழிகளில் தொடர்ச்சியான ஒத்துழைப்பை வரவேற்றோம்.

நிறுவன ஒருமைப்பாட்டை வலுப்படுத்துவது ஒரு தேசிய முன்னுரிமையாகும். இலங்கையின் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சாத்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு (CIABOC) மற்றும் நியூசிலாந்தின் ஊழல் எதிர்ப்பு முகவர் அமைப்புகள் ஆகியவற்றிற்கு இடையே நேரடி ஒத்துழைப்பை ஏற்படுத்துவதில் நாம் ஆர்வத்தை வெளிப்படுத்தினோம்.

நியூசிலாந்தில் உள்ள 23,000 க்கும் மேற்பட்ட வெளிநாட்டு இலங்கையர்களின் பெறுமதிமிக்க பங்களிப்பையும், எமது உறவை வலுப்படுத்துவதில் அவர்கள் வகிக்கும் நேர்மறையான பங்கையும் எங்கள் கலந்துரையாடல்கள் அங்கீகரித்தன.

இலங்கையின் இளம் விளையாட்டு வீரர்களுக்கான கிரிக்கெட் மற்றும் ரக்பியில் பயிற்சி வாய்ப்புகள் மற்றும் பெண்கள் வலுவூட்டற்திட்டங்கள், குறிப்பாக நிதி முகாமைத்துவம், முயற்சியாண்மை மற்றும் இராஜதந்திரம் ஆகியவற்றில் கவனம் செலுத்துதல் உள்ளிட்ட ஆழமான விளையாட்டுத்துறைசார் ஒத்துழைப்பை நாம் ஆராய்ந்தோம்.

இன்றைய கலந்துரையாடல்கள் இலங்கை-நியூசிலாந்து கூட்டாண்மையின் ஆழத்தையும் பன்முகத்தன்மையையும் மீண்டும் உறுதிப்படுத்தியத்துடன், அனைத்துத் துறைகளிலும் எங்கள் ஒத்துழைப்பை மேம்படுத்த நாங்கள் உறுதிபூண்டுள்ளோம்.

நியூசிலாந்துடனான தனது கூட்டாண்மையை இலங்கை பெரிதும் மதிக்கிறது; மேலும் பகிரப்பட்ட மதிப்பு மற்றும் பிராந்திய ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கும், அமைதியானதும், விதிகள் சார்ந்ததுமான சர்வதேச ஒழுங்கை வளர்ப்பதற்கும், நியூஸிலாந்துடன் நெருக்கமாகவும், இருதரப்பு ரீதியாகவும், பிராந்திய மற்றும் பல்தரப்பு ரீதியாகவும் தொடர்ந்தும் பணியாற்றும்.

நியூசிலாந்தின் துணைப் பிரதமர் மற்றும் வெளியுறவு அமைச்சர் மற்றும் அவரது குழுவினரின் ஆக்கபூர்வமான ஈடுபாடு மற்றும் நட்புக்காக நான் நன்றி கூறுகிறேன். நமது உறவுகளை மேலும் ஆழப்படுத்தவும், நம்மிரு நாட்டு மக்களுக்குக் கட்புலனாவல்லதும்,  பயனுறுதிமிக்கதுமான விளைவுகளை வழங்கவும் நியூசிலாந்துடன் நெருக்கமாகப் பணியாற்ற இலங்கை ஆவலாயுள்ளது.

நன்றி.

தற்போது அமைச்சர் பீட்டர்ஸ் அவர்களுக்கு வாய்ப்பளிக்கிறேன்.

2025 மே 26

Please follow and like us:

Close