பிரிக்ஸ் உறுப்புரிமைக்கான இலங்கையின் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதாக சில உள்ளூர் ஊடகங்களில் வெளியான தவறான மற்றும் பொய்யான செய்திகள் குறித்து வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
2024, அக்டோபர் 07 அன்று அமைச்சரவை அங்கீகாரத்தின்படி, இலங்கையானது பிரிக்ஸ் மற்றும் புதிய அபிவிருத்தி வங்கி (NDB) ஆகியவற்றின் அங்கத்துவத்திற்கு விண்ணப்பித்தது. வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் விஜித ஹேரத் பிரிக்ஸ் உறுப்பு நாடுகளில் உள்ள தனது சகாக்களுக்கு கடிதம் மூலம் பிரிக்ஸில் இணைந்து கொள்ளவதற்கான இலங்கையின் விருப்பத்தைத் தெரிவித்தார். இது தொடர்பில் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவும் ரஷ்ய ஜனாதிபதிக்கு கடிதமொன்றை எழுதியுள்ளார்.
2024 ஒக்டோபர் 22 முதல் 24 வரையான திகதிகளில் ரஷ்யாவின் கசானில் நடைபெற்ற பிரிக்ஸ் அவுட்ரீச் உச்சி மாநாட்டில், இலங்கையின் தூதுக்குழுவிற்கான தலைவராக வெளியுறவுச் செயலாளர் அருணி விஜேவர்தன இலங்கையின் ஆர்வத்தை அறிவித்தார். இவ்வுச்சிமாநாட்டில், பிரிக்ஸ் உறுப்பு நாடுகள் ஒரு புதிய வகை பங்காளித்துவ நாடுகளுக்கு ஒப்புதல் அளித்த அதேவேளை, பிரிக்ஸானது, உலகளாவிய தெற்கு நாடுகள் பிரிக்ஸில் இணைந்துகொள்வதற்கு காட்டும் கணிசமான ஆர்வத்தையும் வரவேற்றது (கசான் பிரகடனம்).
இலங்கை உட்பட பல நாடுகளின் பிரிக்ஸ் உறுப்புரிமைக்கான நிலுவையிலுள்ள கோரிக்கைகள், பிரிக்ஸ் உறுப்பு நாடுகளால் உரிய காலத்தில் பரிசீலிக்கப்படும்.
புதிய அபிவிருத்தி வங்கியில் இணைவதற்கான இலங்கையின் நோக்கத்தை புதிய அபிவிருத்தி வங்கியின் தலைவர் வரவேற்றார். வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சானது, தொடர்புபட்ட அரசு நிறுவனங்களுடன் இணைந்து, புதிய அபிவிருத்தி வங்கியில் இணைவது தொடர்பிலான நடைமுறைகள் மற்றும் அதற்கான நேரம் ஆகியவற்றை மதிப்பாய்வு செய்யும்.
"இலங்கையின் பிரிக்ஸ் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளது", என சில உள்ளூர் ஊடகங்களில் வெளியிடப்பட்ட அறிக்கைகள் உண்மையற்றவை.
2024, நவம்பர் 06 அன்று, அமைச்சரவை அமர்வுக்குப் பின்னரான ஊடகவியலாளர் சந்திப்பில், வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் தெரிவித்த கருத்துக்கள் தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளமை வருத்தமளிக்கிறது.
வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு
கொழும்பு
2024, நவம்பர் 10