ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகத்திற்கு ஆதரவளிக்கும் கூட்டுக் கடிதத்தில் இலங்கை கையொப்பமிட்டுள்ளது

 ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகத்திற்கு ஆதரவளிக்கும் கூட்டுக் கடிதத்தில் இலங்கை கையொப்பமிட்டுள்ளது

இஸ்ரேலின் வெளிவிவகார அமைச்சர், ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகத்தை "ஏற்றுக்கொள்ள முடியாத நபர்", எனக்குறிப்பிட்டததைத் தொடர்ந்து, செயலாளர் நாயகத்திற்கு ஆதரவளிப்பதற்கான கூட்டுக் கடிதத்தில் இலங்கை கையொப்பமிடவில்லை என பல ஊடகங்களில் வெளியான செய்திகள் தொடர்பில் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

2024 ஆம் ஆண்டு ஒக்டோபர் 11 எனத் திகதியிடப்பட்ட இராஜதந்திர ரீதியிலான குறிப்பின் மூலம், ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகத்திற்கு ஆதரவளிக்கும் கடிதத்தில் கையொப்பமிடுவதற்கான தனது விருப்பத்தை, நியூயோர்க்கில் உள்ள சிலியின் நிரந்தர தூதரகத்திற்கு இலங்கை தெரிவித்தது.

பலஸ்தீன பிரச்சினைக்கு இலங்கை தனது நீண்டகால மற்றும் அசைக்க முடியாத ஆதரவை தொடர்ந்து வழங்கி வருவதுடன், பல வருடங்களாக பலஸ்தீன மக்களுடன் ஒற்றுமையை வெளிப்படுத்தி வருகின்றது. காசாவின் தற்போதைய மோசமான மனிதாபிமான நிலைமை குறித்து பலதரப்பு மன்றங்களில் இலங்கை தீவிர அக்கறையைத் தெரிவித்துள்ளதுடன், உடனடி போர் நிறுத்தத்திற்கான அழைப்பையும்  ஆதரித்தது.

ஆக்கிரமிக்கப்பட்ட பலஸ்தீனப் பிரதேசங்களில் ஐக்கிய நாடுகள் சபையின் நிர்பந்திக்கப்பட்ட மற்றும் அத்தியாவசியமான மனிதாபிமான முயற்சிகளுக்கு இலங்கை தொடர்ந்து ஆதரவளித்து வருகிறது. அண்மையில் தெற்கு லெபனானின் நகோராவில் உள்ள ஐக்கிய நாடுகளின் இடைக்காலப்படைத் தலைமையகத்தில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில், இரண்டு இலங்கை அமைதி காக்கும் படையினர் காயமடைந்ததை இலங்கை வன்மையாகக் கண்டித்தது. வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் விஜித ஹேரத், ஒக்டோபர் 14ஆம் திகதி கொழும்பிலுள்ள இராஜதந்திரப் படையணிக்கு வழங்கிய அறிக்கையில், ஐக்கிய நாடுகள் சபையின் மனிதவளத்தின் பாதுகாப்பையும், ஐக்கியநாடுகளுக்குரிய வளாக எல்லைகளின் பாதுகாப்பையும்  உறுதி செய்வதற்கான கடப்பாட்டை நிலைநிறுத்த வேண்டியதன் அவசியத்தை தெரிவித்தார். 1968 இல் மேற்கொள்ளப்பட்ட, ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை தீர்மானம் 2443 மூலம் நிறுவப்பட்ட பாலஸ்தீனிய மக்கள் மற்றும் ஆக்கிரமிக்கப்பட்ட பிரதேசங்களிலுள்ள அரேபியர்களின் மனித உரிமைகளை பாதிக்கும் இஸ்ரேலிய நடைமுறைகளை ஆராய்வதற்கான ஐக்கிய நாடுகள் சபையின் சிறப்புக் குழுவிற்கு இலங்கை தலைமை தாங்குகிறது.

அதனடிப்படையில், செயலாளர் நாயகத்தை மட்டுமல்ல ஐக்கிய நாடுகள் சபையின் ஆணையையும் பாதுகாக்கும் இக்கடிதத்தை இலங்கை முழுமையாக ஆதரிக்கிறது.

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு

கொழும்பு

 2024 அக்டோபர் 21

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close