ஜெனிவாவில் நடைபெற்ற மனித உரிமைகள் பேரவையின் 57வது அமர்வில் ஐக்கிய நாடுகள் சபைக்கான இலங்கையின் நிரந்தரப் பிரதிநிதியினால் வெளியிடப்பட்ட அறிக்கை  9 அக்டோபர் 2024

ஜெனிவாவில் நடைபெற்ற மனித உரிமைகள் பேரவையின் 57வது அமர்வில் ஐக்கிய நாடுகள் சபைக்கான இலங்கையின் நிரந்தரப் பிரதிநிதியினால் வெளியிடப்பட்ட அறிக்கை  9 அக்டோபர் 2024

கௌரவத் தலைவர் அவர்களே,

இலங்கையில் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, அங்கீகரிக்கப்பட்ட அரசாங்கத்தால், பரிந்துரை 57/ L.1 இன் வரைவு தொடர்பாக சம்பந்தப்பட்ட நாடு என்ற வகையில், நாட்டின் சமீபத்திய அபிவிருத்திகள் குறித்து சபைக்கு விளக்குவதற்காக தங்களின் அனுமதியை வேண்டுகிறேன்.

சுதந்திரமானதும், நியாயமானதும் மற்றும் அமைதியானதுமான தேர்தல் மாதிரி நடத்தை நெறிமுறையைப் பின்பற்றி, எமது பல தசாப்த கால ஜனநாயக நடைமுறைக்கு ஏற்ப கண்ணியமானதொரு மாற்றமாக, இலங்கையின் 9ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக, மேதகு அனுரகுமார திஸாநாயக்க செப்டம்பர் 23ஆம் திகதி பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.

எதிர்வரும் மாதம், இலங்கை மக்கள் புதிய பாராளுமன்றத்தை தெரிவு செய்வதற்காக தமது வாக்குரிமையை மீண்டும் ஒருமுறை பயன்படுத்துவதன் மூலம் நாட்டில் புதிய அரசியல் கலாசாரத்திற்கான மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதற்கு, பலப்படுத்தப்பட்ட அரசொன்றின் ஆணையொன்றுடான முன்னேற்றம் சாத்தியமாகும். நமது குடிமக்கள் அனைவரினதும் நீடித்த பொருளாதார வளர்ச்சி மற்றும் சமூக நல்வாழ்வை உறுதி செய்வதற்காக சட்டத்தின் ஆட்சி, வெளிப்படைத்தன்மை, பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கம் ஆகியவற்றில் சீரான தன்மை நிலவுவதற்கு ஏதுவானதொரு வழி வகுக்கப்படும்.

மக்களின் அபிலாஷைகளுக்கு இணங்க, அரசாங்கமானது, பொருளாதாரச் சரிவின் மூல காரணமான சீரற்ற முகாமைத்துவம் மற்றும் ஊழல் பிரச்சினைகளுக்கு தீர்வு காணல் உட்பட, நேர்மை மற்றும் நெறிமுறை நிர்வாகத்திற்கு முன்னுரிமை அளிக்கும்.

கடந்த கால பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது உட்பட அனைத்து குடிமக்களின் ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகளை அரசாங்கம் பாதுகாக்கும். நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் நீதி ஆகியவற்றைக் கையாளும் உள்நாட்டு பொறிமுறைகள் மற்றும் செயல்முறைகள் அரசியலமைப்புச்  சட்டகத்திற்குள் நம்பகமானதாகவும் சுயாதீனமாகவும் நிலவுவதுடன், மக்களின் நம்பிக்கையுடன்கூடிய உண்மை மற்றும் நல்லிணக்கமானதொரு செயல்முறை செயல்படுத்தப்படும். அதிமேதகு ஜனாதிபதியின் கூற்றுப்படி, 'உள்நாட்டு பொறிமுறைகளை நம்பகத்தன்மையுடனும்உறுதியானதாகவும் மாற்றுவதே எங்கள் நோக்கம்...'

அதிமேதகு ஜனாதிபதியின் அறிவுறுத்தலின்படி, புலனாய்வு அதிகாரிகள் ஏற்கனவே நிலுவையில் உள்ள தெளிவாக அடையாளம் காணப்பட்ட பல பொறுப்புக்கூறல் வழக்குகள் மீதான விசாரணையை இரட்டிப்பாக்குவதாக அறிவித்துள்ளனர்.

உயிர்த்தெழுந்த ஞாயிறு அன்று இடம்பெற்ற உணர்வுபூர்வமற்ற தொடர் குண்டுத்தாக்குதல்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்கப்படும்.

எமது அரசியலமைப்பு மற்றும் உடன்படிக்கைகளில் ஒப்புக்கொள்ளப்பட்ட உறுதிமொழிகளுக்கு இணங்க பாரபட்சமின்றி அனைவருக்கும் சமமான குடியுரிமையை உறுதிப்படுத்துவதுடன், பன்முகத்தன்மையை மதிக்கும் இலங்கை தேசமொன்றிற்கு அரசாங்கமானது, அர்ப்பணிப்புடன் செயற்படுகின்றது. இந்நோக்கத்திற்கமைவாகவே அரசின் நிர்வாக, அரசியல் மற்றும் தேர்தல் செயல்முறைகள் செயல்படுத்தப்படும்.

அரசாங்கமானது, இம்முனைப்புகளில் முன்னோக்கிச் செல்வதற்கான மக்களின் ஆணையையும் சர்வதேச சமூகத்தின் ஊக்குவிப்பையும் பெற்றுள்ளது.

கௌரவத் தலைவர் அவர்களே,

இவ்வரைவுப்பரிந்துரை தொடர்பில் கவனம் செலுத்துகையில்:

57/L.1 வரைவுப்பரிந்துரையானது, மனித உரிமைகள் பெரவையின் பரிந்துரை 51/1 இல் உள்ள நிர்ப்பந்தங்களை நீட்டிக்கிறது.

மனித உரிமைகளுக்கான உயர் ஆணையாளர் அலுவலகத்திற்குள் வெளிப்புற ஆதாரங்களை சேகரிக்கும் பொறிமுறை நிறுவப்படுவதற்கு ஏதுவாயமைந்த, மனித உரிமைகள் பேரவையின் 51/1 பரிந்துரை மற்றும் அதற்கு முந்தைய மனித உரிமைகள் பேரவையின் 46/1 பரிந்துரை ஆகியவற்றை இலங்கை எதிர்த்துள்ளது.

A/HRC/57/G/1 ஆவணத்திலுள்ள இப்பேரவைக்கான எங்கள் விரிவான பதிலில் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ள காரணங்களுக்காக, உயர் ஆணையரின் அறிக்கையிலிருந்தும் நாங்கள் விலகினோம்.

51/1 பரிந்துரையானது, சம்பந்தப்பட்ட நாடு என்றபோதிலும், இலங்கையின் அனுமதியின்றி முன்வைக்கப்பட்டு, பிளவுபட்ட வாக்குகளால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், இப்பரிந்துரையால் நிறுவப்பட்ட நிர்பந்தங்களை நீட்டிக்கும் எந்தவொரு அடுத்தடுத்த தீர்மானமும்  சபையில் ஒருமித்த கருத்தைக் கொண்டிருக்கவில்லை.

இச்சபைக்கு நாங்கள் மீண்டும் மீண்டும்  நினைவூட்டியபடி, மனித உரிமைகளுக்கான உயர் ஆணையாளர் அலுவலகத்திற்குள் இவ்வெளிப்புற ஆதாரங்களைச் சேகரிக்கும் பொறிமுறையொன்றை அமைப்பது என்பது பேரவையின் நிர்பந்தத்தின் முன்னோடியில்லாத மற்றும் தற்காலிகமானதொரு விரிவாக்கமாகும். மேலும் இது, சபையின் ஸ்தாபகக் கொள்கைகளான பாரபட்சமற்ற தன்மை, புறநிலை மற்றும் தேர்ந்தெடுக்காத தன்மைக்கு முரணானது.

எந்தவொரு இறையாண்மையுள்ள அரசும் அதன் அரசியலமைப்பிற்கு முரணாக இயங்கும் மற்றும் அதன் உள்நாட்டு சட்ட செயல்முறைகளின் அர்ப்பணிப்பை முன்கூட்டியே தீர்மானிக்கும் வெளிப்புற பொறிமுறையின் மேலெழுதலை ஏற்காது. மேலும், இப்பொறிமுறையின் பாதீட்டுத் தாக்கங்கள் குறித்து பல நாடுகள் ஏற்கனவே தமது தீவிர அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளன.

மேற்கூறிய காரணங்களுக்காக, 51/1 பரிந்துரையின் நிர்பந்தத்தை நீட்டிக்கக் கோரி இன்று இச்சபையில் முன்வைக்கப்பட்டுள்ள வரைவுப் பரிந்துரையை நிராகரிக்க நாங்கள் கடமைப்பட்டுள்ளோம்.

கௌரவத் தலைவர் அவர்களே,

நாங்கள் இப்பரிந்துரையை நிராகரித்த போதிலும், இலங்கையானது, வழக்கமான மனித உரிமைகள் அமைப்புக்கள் மற்றும் அனைத்து முக்கிய மனித உரிமைகள் உடன்படிக்கைகளுடன் மட்டுமல்லாது, உலகளாவிய கால ஆய்வுச் செயல்முறையின் கீழ் தனது தொடர்ச்சியான வாக்குறுதிகள் மற்றும் நீண்டகால ஆக்கபூர்வமான ஈடுபாட்டை இச்சபையுடன் தொடரும். நாம் அடையும் முன்னேற்றம் குறித்து சபைக்கு அவ்வப்போதைய இற்றைப்படுத்தல்களை வழங்குவோம்.

எமது நாட்டில் புதிய அத்தியாயமொன்றில் நாம் பிரவேசிக்கும் இவ்வேளையில் இலங்கைக்கு ஆதரவாக பல நாடுகள் இச்சபையில் கொள்கை ரீதியான நிலைப்பாடுகளை எடுத்துள்ளமையை நான் பாராட்டுகின்றேன்.

மனித உரிமைகள் மற்றும் மனிதாபிமான சூழ்நிலைகளில் பலதரப்பு அரங்கில் ஏற்படுத்தப்படும், தீவிர நம்பிக்கையின்மை  மற்றும் துருவபடுத்தல்களுடன், அடிப்படைத்தன்மையற்ற செயல்முறைகள் நடைபெறும் இச்சூழ்நிலையில், எமது எதிர்ப்பைத்தெரிவிப்பதுடன், இவ்வரசியல்மயமாக்கப்பட்ட வரைவுப்பரிந்துரையின் இணை அனுசரணையாளர்களிடம், உள்நாட்டு செயல்முறைகள் மூலம் மனித உரிமைகள் மற்றும் நல்லிணக்கத்தை நிவர்த்தி செய்வதற்கான அரசாங்கத்தின் தெளிவான நோக்கம் மற்றும் நமது சர்வதேச கடமைகளைக் கருத்திற்கொண்டு, எமது இந்நிலைப்பாட்டிற்கு ஆதரவையும், ஊக்குவிப்பையும் வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

கௌரவத் தலைவருக்கு எனது நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close