2024 ஜூலை 30 ஆம் திகதி இஸ்லாமாபாத்தில் நடைபெறவுள்ள இலங்கைக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான ஏழாவது சுற்று இருதரப்பு அரசியல் ஆலோசனைக் கூட்டத்திற்கு வெளிவிவகார செயலாளர் அருணி விஜேவர்தன இலங்கையின் தூதுக்குழுவிற்கு தலைமை தாங்குவார்.
ஏழாவது சுற்று இருதரப்பு அரசியல் ஆலோசனைகள் வெளியுறவுச் செயலாளர் அருணி விஜேவர்தன மற்றும் பாகிஸ்தான் வெளியுறவுச் செயலாளர் முஹம்மது சைரஸ் சஜ்ஜாத் க்வாஸீ ஆகியோரின் இணைத்தலைமையில் இடம்பெறும்.
இவ்வாலோசனைகள், இருதரப்பு உறவுகளின் தற்போதைய நிலை, பொருளாதாரம் மற்றும் வர்த்தகம், தற்காப்பு மற்றும் பாதுகாப்பு, கல்வி, கலாச்சாரம், ஊடகம் மற்றும் விளையாட்டு, தூதரக விஷயங்கள், விவசாயம் மற்றும் தொழில்நுட்பம் போன்ற ஒத்துழைப்பின் முன்னேற்றம் ஆகியவற்றை மதிப்பாய்வு செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆலோசனைகளின் ஒருபுறம், வெளியுறவு செயலாளர் பாகிஸ்தான் துணைப் பிரதமரும் வெளியுறவு அமைச்சருமான முஹம்மது இஷாக் தாரை சந்திக்கவுள்ளார்.
இலங்கையின் தூதுக்குழுவில் பாகிஸ்தானுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் அட்மிரல் ரவீந்திர சி. விஜேகுணரத்ன மற்றும் வெளிநாட்டலுவல்கள் அமைச்சு மற்றும் இஸ்லாமாபாத்திலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தின் சிரேஷ்ட அதிகாரிகளும் உள்ளடங்குவார்கள்.
இலங்கைக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான இருதரப்பு அரசியல் ஆலோசனைகளின் முன்னைய சுற்று (6ஆவது) 2020 டிசம்பரில் மெய்நிகர்நிலையில் நடைபெற்றது.
வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு
கொழும்பு
2024 ஜூலை 26