2024 ஜூலை 26 முதல் 27 வரை லாவோஸ் சோஷலிச மக்கள் குடியரசின், வியாஞ்சான் நகரில் நடைபெறும் ஆசியான் பிராந்திய மன்றத்தின் 31வது அமைச்சர்கள் கூட்டத்திற்கான இலங்கையின் பிரதிநிதிகள் குழுவை வெளியுறவு இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய வழிநடத்துவார். இச்சந்திப்பானது, ஆசியானின் தற்போதைய தலைமைத்துவத்தை வகிக்கும் லாவோஸ் சோஷலிச மக்கள் குடியரசினால் நடத்தப்படுகிறது.
பிராந்திய மற்றும் பூகோள பாதுகாப்பு பிரச்சினைகள் தொடர்பாக சுமுகமான சூழ்நிலையில் உறுப்பு நாடுகளுடன் கருத்துக்களை பரிமாறிக்கொள்ள இலங்கைக்கு ஆசியான் பிராந்திய மன்றமானது, ஒரு பயனுறுதிமிக்க தளத்தை வழங்குகிறது. ஆசியான் பிராந்திய மன்றத்துடனான இலங்கையின் தொடர்பு 2007 இல் தென்கிழக்கு ஆசிய ஒத்துழைப்பிற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. 1994 இல், தாய்லாந்தில் தொடங்கப்பட்ட இம்மன்றம் ஆசிய-பசிபிக் பிராந்தியத்தின் பொதுவான அக்கறை கொண்ட அரசியல் மற்றும் பாதுகாப்பு பிரச்சினைகளில் ஆக்கபூர்வமான உரையாடலை வளர்க்க முற்படுகிறது.
இராஜாங்க அமைச்சர் பாலசூரிய தனது விஜயத்தின் போது, ஆசியான் பிராந்திய மன்ற அங்கத்துவம் வகிக்கும் பிரதிநிதிகளான பல தலைவர்களுடன் இருதரப்பு கலந்துரையாடல்களில் ஈடுபடவுள்ளார். இலங்கை ஆசியான் மற்றும் கிழக்காசிய நாடுகளுடன் நீண்டகால, வரலாற்று உறவுகளை பேணி வருகிறது. இராஜாங்க அமைச்சரின் இருதரப்பு கலந்துரையாடல்கள், இருதரப்பு ஈடுபாடுகளை மேலும் வலுப்படுத்துவதற்கான வழிகளை ஆராயவுள்ளது.
வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு
கொழும்பு
2024 ஜூலை 25