இலங்கை வெளிநாட்டு சேவைக்கு புதிதாக இணைத்துக் கொள்ளப்பட்ட 20 அதிகாரிகள் இன்று (ஜூன் 11 அன்று) வெளிவிவகாரச் செயலாளர் அருணி விஜேவர்தனவினால் அமைச்சுக்கு வரவேற்கப்பட்டனர். இலங்கை வெளிநாட்டு சேவையின் (SLFS) முக்கியப் பங்கு மற்றும் அரச ஊழியர்கள் என்ற வகையில் அனைத்து அதிகாரிகளின் சிறப்புப் பொறுப்புக்கள் ஆகியவற்றை வெளிவிவகாரச் செயலாளர் எடுத்துரைத்தார். பொருளாதார இராஜதந்திரத்திற்கு வழங்கப்படும் முன்னுரிமை உட்பட நவீன இராஜதந்திர உலகில் தேவைப்படும் திறன்களை அவர் குறிப்பிட்டார்.
இப்புதிய 20 அதிகாரிகள், பொதுச் சேவை ஆணைக்குழுவினால் நடாத்தப்பட்ட, திறந்த போட்டிப் பரீட்சை மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் இலங்கை வெளிநாட்டு சேவைக்கு இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளனர்.
புதிதாக இணைத்துக்கொள்ளப்பட்டுள்ள அதிகாரிகள், வெளிநாட்டலுவல்கள் அமைச்சில் கடமைகளை பொறுப்பேற்பதற்கு முன்னர் பண்டாரநாயக்க சர்வதேச இராஜதந்திர பயிற்சி நிறுவனத்தினால் (BIDTI) நடாத்தும் பயிற்சித் திட்டத்தில் பங்கேற்கவுள்ளனர்.
வெளிநாட்டலுவல்கள் அமைச்சு
கொழும்பு
2024 ஜூன் 11