வெளியுறவுச் செயலாளர் அருணி விஜேவர்தனவின் சர்வதேச அபிவிருத்திக்கான கனேடிய பிரதியமைச்சருடனான சந்திப்பு

வெளியுறவுச் செயலாளர் அருணி விஜேவர்தனவின் சர்வதேச அபிவிருத்திக்கான கனேடிய பிரதியமைச்சருடனான சந்திப்பு

வெளிவிவகார செயலாளர் அருணி விஜேவர்தன, நேற்று 2024 மே 28, சர்வதேச அபிவிருத்திக்கான கனேடிய பிரதி அமைச்சர் கிறிஸ்டோபர் மெக்லெனனை வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சில் சந்தித்தார்.

வெளிவிவகாரச் செயலாளர் விஜேவர்தன, பிரதி அமைச்சர் மக்லெனனிடம் பொருளாதார ஸ்திரப்படுத்தலில் இலங்கை அடைந்துள்ள குறிப்பிடத்தக்க முன்னேற்றம் பற்றியும் வருமான உருவாக்கம் மற்றும் வளர்ச்சியை நோக்கிய  நகர்வில் பொருளாதார செயலாண்மைக்கான அணுகுமுறைகளுக்கு அரசு அளித்துள்ள முன்னுரிமை பற்றியும் குறிப்பிட்டார். இந்த முயற்சிகள் அமைதி மற்றும் நல்லிணக்கத்தை மேம்படுத்துவதற்கான அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு இணையாக இயங்குகின்றன.

சமீபத்திய ஆண்டுகளில், அரசியல் ரீதியாக, கனடாவில் வெளியிடப்பட்ட உயர்மட்ட அறிவிப்புகள்,  இலங்கையில் இடம்பெற்ற மோதல்கள்களின்போது இனப்படுகொலை இடம்பெற்றதாக தவறான கருத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் அமைந்திருந்தமை, குறித்து வெளிவிவகாரச் செயலாளர், இலங்கையின் அதிருப்தியை  வெளிப்படுத்தினார். இலங்கையுடன் ஆக்கப்பூர்வமாக ஈடுபட்டு உரையாடல் மற்றும் நல்லிணக்கத்தை எளிதாக்கவும் கனடாவிடம் வெளியுறவு செயலாளர் கோரிக்கை விடுத்தார்.

சீர்திருத்தம் மற்றும் மீட்சியில் இலங்கையின் முன்னேற்றத்தைக் குறிப்பிட்ட பிரதியமைச்சர் மக்லெனன், கனடாவின் முக்கியமான அபிவிருத்தி பங்காளிகளில் ஒன்றான இலங்கையுடன் பொருளாதார வளர்ச்சியை நோக்கிய பாதையில் இணைந்து பணியாற்றுவதற்கான கனடாவின் விருப்பத்தை வெளிப்படுத்தினார். காலநிலை மாற்றம், எரிசக்தி மாற்றம், கடன் மறுசீரமைப்பு, வர்த்தகம் மற்றும் நல்லிணக்கம் போன்ற பொதுவான ஆர்வமுள்ள துறைகளில் இலங்கையுடன் ஒத்துழைப்பதற்கான கனடாவின் ஆர்வத்தை அவர் சுட்டிக்காட்டினார்.

இனப்படுகொலை தொடர்பான குற்றச்சாட்டுகள் தொடர்பான அரசியல் அறிக்கைகள் தொடர்பில் இலங்கையின் கடுமையான ஆட்சேபனைகளை சுட்டிக்காட்டிய பிரதி அமைச்சர், இலங்கையின் இச்செய்தி கனடாவிலுள்ள உரிய அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்படும் என்று கூறினார். நல்லிணக்கத்திற்கான இலங்கையின் முயற்சிகளைப் பாராட்டிய அவர், கனடாவின் முன்னேற்றத்திற்கான நம்பிக்கையை வெளிப்படுத்தினார்.

கனடாவின் உயர்ஸ்தானிகர் எரிக் வால்ஷ், கனேடிய உயர்ஸ்தானிகராலயத்தின்  அதிகாரிகள் மற்றும் வெளிவிவகார அமைச்சின் உயர் அதிகாரிகளும் இச்சந்திப்பில் கலந்துகொண்டனர்.

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு

கொழும்பு

2024 மே 29

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close