கராச்சியிலுள்ள இலங்கை துணைத் தூதரகம், ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸின் உதவியுடன், இலங்கை மேடை நாடக குழுவின், 'Ken B Eniwan's Story’ நாடக நிகழ்வை,பாகிஸ்தான் சர்வதேச நாடக விழாவில் மேடையேற்றியது. இந்த விழாவை பாகிஸ்தானின் கலை மன்றம் ஏற்பாடு செய்திருந்தது.
பாகிஸ்தானுக்கும் இலங்கைக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளின் 75 வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, இரு நாடுகளுக்கும் இடையிலான கலாச்சார உறவுகளை வெளிப்படுத்தும் வகையில் இந்நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
2023, செப்டம்பர் 21 மற்றும் 22 ஆகிய இரண்டு தினங்களில், மேடையேற்றப்பட்ட இந்நாடகம், பல்வேறு நிலைகளில் மனித வாழ்க்கையை சித்தரித்ததுடன், பார்வையாளர்களிடமிருந்து பெரும் வரவேற்பைப் பெற்றிருந்தது.
பாகிஸ்தானிலுள்ள இலங்கையின் துணைத்தூதுவர், ஜகத் அபேவர்ண, கராச்சியிலுள்ள பாகிஸ்தான் கலை மன்றத்தலைவர் மொஹமட் அஹமட் ஷா, இலங்கை மேடை நாடக குழுவின் பணிப்பாளர் ருவன்தி டி சிக்கேரா, கராச்சியைச் சேர்ந்த துணைத் தூதுவர்கள், ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் இலங்கை முகாமையாளர் சமன் ரத்நாயக்க, ஜனாதிபதி மற்றும் பாகிஸ்தானிலுள்ள ஆங்கிலம் பேசும் சமூகத்திற்கான பிரதிநிதிகள் ஆகியோர், பார்வையாளர்கள் மத்தியில் இருந்தனர்.
'Ken B Eniwan's Story' இன் வெற்றியானது, இலங்கையின் நாடகத்துறைக்கு ஒரு சாதகமான ஏறுமுகத்தை குறிப்பது மட்டுமன்றி, இலங்கைக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான கலாசார உறவுகளை வலுப்படுத்துவதுடன் நல்லுறவையும் வளர்க்கிறது.
இலங்கை துணைத் தூதரகம்
கராச்சி
2023, அக்டோபர் 18