2023 அக்டோபர் 08 முதல் 12 வரை மலேசியாவின் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் டத்தோ செரி டிராஜா கலாநிதி ஸம்ப்ரி அப்ட் காதிர் இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டார்.
இந்த விஜயத்தின் போது, மலேசிய வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர், இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு ஒத்துழைப்பை மேலும் ஒருங்கிணைத்து மேம்படுத்துவதற்கான உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்துவதற்காக, அரசியல், வர்த்தகம், முதலீடு, பாதுகாப்பு மற்றும் சுற்றுலா ஆகிய துறைகளில் பரஸ்பர ஆர்வமுள்ள பரந்த அளவிலான விடயங்கள் குறித்து 2023 ஒக்டோபர் 09ஆந் திகதி இலங்கையின் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் அலி சப்ரியுடன் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சில் வைத்து உத்தியோகபூர்வ கலந்துரையாடல்களில் ஈடுபட்டார். இக்கலந்துரையாடலின் போது, வர்த்தகம் மற்றும் பொருளாதார ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்காக இரு நாடுகளுக்கும் இடையில் முன்மொழியப்பட்டுள்ள சுதந்திர வர்த்தக உடன்படிக்கை மற்றும் பிராந்திய பொருளாதார பங்காளித்துவ உடன்படிக்கையில் இணைவதற்கான இலங்கையின் விண்ணப்பம் குறித்து விஷேட கவனம் செலுத்தப்பட்டது.
2023 ஒக்டோபர் 09ஆந் திகதி கொழும்பு ஷங்ரிலா ஹோட்டலில்இலங்கை வர்த்தக சபையின் கீழ் இலங்கை - மலேசியா வர்த்தக சபை ஏற்பாடு செய்திருந்த ''CEO வர்த்தக மன்றத்தில்'' இரு வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர்களும் பங்கேற்றதுடன், இருதரப்பு வர்த்தகம் மற்றும் முதலீட்டு வாய்ப்புக்களை மேம்படுத்துவதற்கான முக்கிய பகுதிகளை முன்னிலைப்படுத்தி இரு வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர்களும் உரையாற்றினர்.
மலேசிய வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் கொழும்பில் தங்கியிருந்த போது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் பிரதமர் தினேஷ் குணவர்தன ஆகியோரையும் சந்தித்து கலந்துரையாடினார்.
இருதரப்பு விஜயத்தைத் தொடர்ந்து, 2023 அக்டோபர் 11ஆந் திகதி கொழும்பில் நடைபெற்ற இந்து சமுத்திர விளிம்பு சங்கத்தின் அமைச்சர்கள் குழுவின் 23வது கூட்டத்தில் மலேசிய வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் பங்கேற்றார்.
வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு,
கொழும்பு
2023 அக்டோபர் 16