உயர்ஸ்தானிகர் சித்ராங்கனி வாகீஸ்வர, அவுஸ்திரேலியாவின் துணைப் பிரதமரும் பாதுகாப்பு அமைச்சருமான ரிச்சர்ட் மார்லஸை, 2023 செப்டம்பர் 11 அன்று, பெடரல் பாராளுமன்றத்தில் உள்ள அவரது அலுவலகத்தில் மரியாதை நிமித்தமாகச் சந்தித்தார். அவருடன் பிரதி உயர்ஸ்தானிகர் சமரி ரொட்ரிகோ மற்றும் பாதுகாப்பு ஆலோசகர் கொமடோர் எஸ்.பி. கத்ரியாராச்சி ஆகியோரும் இணைந்து கொண்டனர்.
துணைப் பிரதமர், உயர்ஸ்தானிகர் மற்றும் குழுவினரை வரவேற்கையில், அவுஸ்திரேலியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் நீண்டகாலமாக பேணப்படும் நெருங்கிய உறவை எடுத்துக்காட்டியதுடன், தெற்காசியாவில் இலங்கை ஒரு முக்கியமான நாடாக காணப்படுவதால், இலங்கையுடன் நெருங்கிய தொடர்புகளை மேம்படுத்துவதற்கு அவுஸ்திரேலியா ஆர்வமாக உள்ளதாகவும் தெரிவித்தார். பல ஆண்டுகளாக அவுஸ்திரேலியாவிற்கு புலம்பெயர்ந்து வரும் இலங்கையர்களின் கணிசமான எண்ணிக்கையைக் கருத்தில் கொண்டு, மக்கள் தொடர்புகளை மேம்படுத்துவதன் முக்கியத்துவம் குறிப்பிடப்பட்டது.
துணைப் பிரதமர், இலங்கையின் அண்டை நாடுகளுடனான உறவுகள், குறிப்பாக வர்த்தக தொடர்புகள் குறித்து ஆர்வம் காட்டினார். உயர்ஸ்தானிகர், இலங்கை தனது, உடனடி அயல் நாடுகள் மற்றும் பிற பிராந்திய நாடுகளுடன் பேணும் பலதரப்பட்ட உறவுகள் குறித்து விரிவாகக் கூறினார். இலங்கையின் தற்போதைய சமூக-பொருளாதார முன்னேற்றங்கள் மற்றும் பொருளாதார மீட்சி மற்றும் ஸ்திரத்தன்மைக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் அவர் பேசியதுடன், குறிப்பாக பொருளாதார நெருக்கடியின் போது இலங்கைக்கு வழங்கிய ஆதரவு மற்றும் உதவிக்கு அவுஸ்திரேலிய அரசாங்கத்திற்கு நன்றி தெரிவித்தார்.
ஆட்கடத்தல் விவகாரம் மற்றும் நாடுகடந்த சர்வதேச குற்றங்கள் உட்பட்ட பாதுகாப்புத் துறையில், அவுஸ்திரேலியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் பேணப்பட்டு வரும் நெருக்கமான ஒத்துழைப்பு குறித்து கலந்துரையாடப்பட்டதுடன், இலங்கை இராணுவத்திற்கு பல துறைகளில் வழங்கப்பட்ட உதவி மற்றும் ஆதரவுக்காக உயர்ஸ்தானிகர், அவுஸ்திரேலியாவுக்கு நன்றி தெரிவித்தார்.
அக்டோபரில் நடைபெறவுள்ள, IORA - இந்து சமுத்திர எல்லை நாடுகள்ளின் சங்கத்தின், அமைச்சர்கள் கூட்டத்தில் ஆஸ்திரேலியா உயர் மட்டத்தில் பிரதிநிதித்துவப்படுத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
பிராந்தியத்தின் தற்போதைய அபிவிருத்திகள் மற்றும் ஆஸ்திரேலியா மற்றும் இலங்கை காட்டும், அதீத ஆர்வத்தினால், வளர்ந்து வரும் புவிசார் அரசியல் முன்னோக்குகள் குறித்தும் இரு தரப்பும் கருத்துகளை பரிமாறிக் கொண்டனர்.
இலங்கை உயர்ஸ்தானிகராலயம்
கான்பெரா
13 செப்டம்பர் 2023