
இம்மாத இறுதியில், தனது கடமைகளிலிருந்து உத்தியோகபூர்வமாக பதவி விலகவுள்ள, இந்தியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொடவிற்கான பிரியாவிடை நிகழ்வு இந்தியாவின் இரண்டு முன்னணி நிறுவன தலைவர்களால் நடத்தப்பட்டது.
செப்டம்பர் 05 அன்று, அதானி குழுமத்தின் தலைவர் கௌதம் அதானி, உயர்ஸ்தானிகர் மொரகொடவிற்கு அவரது இல்லத்தில், இரவு விருந்துடனான பிரியாவிடை நிகழ்வொன்றை ஏற்பாடு செய்திருந்தார். இவ்வார முற்பகுதியில், உயர்ஸ்தானிகருக்கு ஐரோப்பாவின் இந்துஜா குழு- தலைவர், பிரகாஷ் ஹிந்துஜா மதிய உணவு விருந்துடனான பிரியாவிடை வழங்கினார்.
இரு நிகழ்வுகளின் போதும், உயர் ஸ்தானிகர் டெல்லியில் தனது பதவிக்காலத்தில், இரு முன்னணி நிறுவன தலைவர்களுடனான நெருங்கிய தொடர்புகளை நினைவுகூர்ந்து, அவர்களிடமிருந்து கிடைக்கப்பெற்ற ஆதரவுக்கும், ஒத்துழைப்புக்கும், நன்றிகளை தெரிவித்தார்.
1988 இல் கௌதம் அதானியால் நிறுவப்பட்ட அதானி குழுமம் இந்தியாவிலுள்ள மிகப்பெரிய நிறுவனங்களில் ஒன்றாகும். இந்நிறுவனம், இந்தியாவில் துறைமுக முகாமைத்துவம், மின் உற்பத்தி மற்றும் பரிமாற்றம், மீளுருவாக்க சக்தி, விமானநிலைய செயற்பாடுகள், சுரங்க அகழ்வு கைத்தொழில், இயற்கை எரிவாயு உற்பத்தி, உணவு பதப்படுத்தல் செயல்முறை மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் போன்ற துறைகளில் தனது வணிக செயற்பாடுகளை மேற்கொண்டு வருகிறது.
இந்துஜா குழுமமானது, இந்தியாவின் முன்னணி பன்னாட்டு- கூட்டு நிறுவனங்களில் ஒன்றாகும். இந்நிறுவனம் தன்னியக்க வாகன உற்பத்தி, எண்ணெய் மற்றும் சிறப்பு இரசாயனப்பொருட்கள், வங்கி மற்றும் நிதி, மற்றும் சக்தி ஆகிய துறைகள் உட்பட்ட பதினோரு துறைகளில் வணிகங்களை நடாத்தி வருகின்றது. அசோக் லீலன்ட் எனப்படும் பெயர்பெற்ற வாகன உற்பத்தி நிறுவனமும் இவர்களுக்கு சொந்தமானதொன்றாகும். இவ்விரு நிறுவனங்களும் இலங்கையில் கணிசமானதொரு முதலீட்டை மேற்கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
இலங்கை உயர் ஸ்தானிகராலயம்
புது டில்லி
08 செப்டம்பர் 2023



