05வது சுற்று இலங்கை - தாய்லாந்து இருதரப்பு அரசியல் ஆலோசனைகள் 2023 ஆகஸ்ட் 28ஆந் திகதி கொழும்பில் உள்ள வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சில் நடைபெற்றது.
இலங்கை பிரதிநிதிகள் குழுவிற்கு வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் செயலாளர் அருணி விஜேவர்தன தலைமை தாங்கிய அதே வேளை, தாய்லாந்து பிரதிநிதிகள் குழுவிற்கு தாய்லாந்தின் வெளிநாட்டு அலுவல்களுக்கான நிரந்தர செயலாளர் சருன் சரோன்சுவான் தலைமை தாங்கினார்.
கலந்துரையாடலின் போது, மேலதிக முன்னேற்றத்திற்காக, வர்த்தகம், முதலீடு, பாதுகாப்பு, கலாச்சாரம், மீன்பிடி மற்றும் சுற்றுலா ஆகிய துறைகளிலான பரஸ்பர ஒத்துழைப்பிற்கான பரந்த அளவிலான பகுதிகள் குறித்து மீளாய்வு செய்யப்பட்டது. இலங்கை தனது பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்துவதற்காக முன்னோக்கி நகர்ந்ததன் காரணமாக, தாய்லாந்து மற்றும் பரந்த ஆசியான் பிராந்தியத்துடன் மேம்படுத்தப்பட்ட இருதரப்பு உறவுகளுக்கு அதிக முன்னுரிமை அளித்ததாக வெளிவிவகார செயலாளர் விஜேவர்தன தாய்லாந்து தரப்புக்கு அறிவித்தார். தாய்லாந்து - இலங்கை சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை நிறைவு செய்வதற்கு இலங்கை முன்னுரிமை அளித்துள்ளது. மேலும், 2022 ஜனவரி 01 முதல் நடைமுறைக்கு வந்த உலகின் மிகப்பெரிய சுதந்திர வர்த்தகப் பகுதியான விரிவான பிராந்தியப் பொருளாதாரப் பங்காளித்துவ உடன்படிக்கையில் இலங்கை இணைவதற்கு உத்தேசித்துள்ளது. இலங்கையின் விண்ணப்பத்திற்காக, விரிவான பிராந்தியப் பொருளாதாரப் பங்காளித்துவத்தின் 15 ஸ்தாபக உறுப்பினர்களில் ஒருவர் என்ற வகையில், தாய்லாந்தின் ஆதரவை வெளிவிவகார செயலாளர் விஜேவர்தன கோரினார்.
தாய்லாந்தின் தற்போதைய தலைமையின் கீழ், 2030 க்குள் ஒரு செழிப்பான மீள்திறனுடைய மற்றும் திறந்த பிம்ஸ்டெக்கின் தொலைநோக்குப் பார்வையைத் தொடங்குவதல் உட்பட பிம்ஸ்டெக்கின் முன்னேற்றத்திற்காக தாய்லாந்துக்கு வெளிவிவகார செயலாளர் விஜேவர்தன வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.
தாய்லாந்தின் புதிய பிரதமராக ஸ்ரேத்தா தவிசின் நியமிக்கப்பட்டமை உட்பட தாய்லாந்தின் சமீபத்திய முன்னேற்றங்கள் குறித்து தாய்லாந்தின் வெளிநாட்டு அலுவல்களுக்கான நிரந்தர செயலாளர் இலங்கைக்கு தகவல் தெரிவித்தார். நிரந்தரச் செயலாளர் சரோன்சுவான், கடந்த ஆண்டு முதல் இலங்கையின் மீட்சியை வரவேற்றதுடன், இரண்டு வருட நடைமுறையாக்கல் திட்டத்தின் கீழ் தாய்லாந்தின் தொழில்நுட்ப உதவிகள் இலங்கையின் பல்வேறு முயற்சிகளுக்கு தொடர்ந்தும் வழங்கப்படும் எனத் தெரிவித்தார்.
ஆசியான், பிம்ஸ்டெக், ஐயோரா மற்றும் ஐக்கிய நாடுகள் சபை உட்பட பிராந்திய மற்றும் பல்தரப்பு சூழல்களில் நடைபெற்று வரும் முன்னேற்றங்களையும் இரு தரப்பும் மீளாய்வு செய்தன.
இருதரப்பு அரசியல் ஆலோசனைகளுக்கு இணையாக, இரு நாடுகளினதும் முன்னணி தனியார் துறை நிறுவனங்களுக்கு இடையேயான பேச்சுவார்த்தை மற்றும் வணிகப் பொருத்தம் சார்ந்த அமர்வு சியாம் நிவசவில் காலை வேளையில் நடைபெற்றது.
பிரதமர் தினேஷ் குணவர்தன மற்றும் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் அலி சப்ரி ஆகியோரை தாய்லாந்தின் வெளிநாட்டு அலுவல்களுக்கான நிரந்தர செயலாளர் பிற்பகல் வேளையில் சந்தித்தார்.
வெளிவிவகார செயலாளர் விஜேவர்தனவுடன் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகள், பாதுகாப்பு மற்றும் மீன்பிடி அமைச்சுக்கள் மற்றும் வெளிவிவகாரத் திணைக்களத்தின் அதிகாரிகள் இணைந்திருந்தனர். தாய்லாந்து தரப்பில் இலங்கைக்கான தாய்லாந்து தூதுவர் போஜ் ஹர்ன்போல் மற்றும் தாய்லாந்து வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.
வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு,
கொழும்பு
2023 ஆகஸ்ட் 28