2023 ஜூலை 28 - 29 வரை இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டிருந்த ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர் ஹயாஷி யோஷிமாசாவுடன் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் அலி சப்ரி இன்று விரிவான இருதரப்புக் கலந்துரையாடலில் ஈடுபட்டார்.
கலந்துரையாடலைத் தொடர்ந்து உடனடியாக ஊடகவியலாளர் சந்திப்பொன்று இடம்பெற்றதுடன், இலங்கையின் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சரின் அறிக்கை பின்வருமாறு.
வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு,
கொழும்பு
2023 ஜூலை 29
.................................................
ஜப்பானின் வெளிவிவகார அமைச்சர் கௌரவ ஹயாஷி யோஷிமாசாவின் இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயத்தின் போது இலங்கையின் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் கௌரவ அலி சப்ரியின் ஊடக அறிக்கை - 2023 ஜூலை 29, கொழும்பு
என் அன்பு நண்பர் அமைச்சர் ஹயாஷி அவர்களே,
கொன்னிச்சிவா, ஆயுபோவன் மற்றும் உங்களை இலங்கைக்கு வரவேற்கின்றோம்,
ஊடக நண்பர்களே,
உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு நேற்று இலங்கைக்கு வருகை தந்த அமைச்சர் ஹயாஷி யோஷிமாசாவை வரவேற்பதில் நாம் பெருமையும் பெரும் மகிழ்ச்சியும் அடைகின்றோம். ஜப்பானின் வெளிவிவகார அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் ஏனைய அதிகாரிகளைக் கொண்ட உயர்மட்டக் குழுவை கௌரவ ஹயாஷி வழிநடத்துகின்றார். இது இலங்கையும் ஜப்பானும் பரஸ்பரம் சிறந்த உறவுகளுக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தை வெளிப்படுத்துகின்றது.
இன்று காலை கௌரவ ஹயாஷி அவர்கள் அதிமேதகு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களை சந்தித்ததுடன், பின்னர் இன்று கௌரவ பிரதமர் தினேஷ் குணவர்தன அவர்களை சந்திக்கவுள்ளார். சற்று முன்னர், அமைச்சர் ஹயாஷிக்கும் எனக்கும் பரந்த அளவிலான விடயங்கள் தொடர்பாக விரிவான இருதரப்புக் கலந்துரையாடல்களில் ஈடுபடுவதற்கான வாய்ப்பு கிடைத்தது.
ஜப்பானுக்கும் இலங்கைக்கும் இடையிலான ஆழமான வேரூன்றிய நட்புறவு, சமீபத்திய உயர்மட்ட விஜயங்களின் பரிமாற்றத்தின் மூலம் மேலும் பலப்படுத்தப்பட்டுள்ளது. அதிமேதகு ஜனாதிபதி விக்கிரமசிங்க அவர்கள் சமீப காலங்களில் இரண்டு தடவைகள் ஜப்பானுக்கு விஜயம் செய்து, பிரதமர் ஃபுமியோ கிஷிடாவுடன் பயனுள்ள கலந்துரையாடல்களில் ஈடுபட்டதுடன், மாட்சிமை பொருந்திய பேரரசரை சந்திக்கும் வாய்ப்பையும் பெற்றார்.
பெப்ரவரி 2023 இல் இலங்கையின் 75வது சுதந்திர தினக் கொண்டாட்டத்திற்காக ஜப்பானின் வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் கௌரவ டேக்கெய் ஷுன்சுகே அவர்களை வரவேற்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகின்றோம்.
கடந்த வருடம் இலங்கைக்கும் ஜப்பானுக்கும் இடையிலான 70 வருட இராஜதந்திர உறவுகளை நினைவுகூரும் வகையில் நாம் நடாத்திய பல நிகழ்வுகளை நினைவு கூருவதில் நானும் அமைச்சர் ஹயாஷியும் மகிழ்ச்சியடைந்தோம்.
ஊடக நண்பர்களே,
நாடு முன்னெப்போதும் இல்லாத வகையில் பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டிருந்த கடந்த வருடத்தில் இலங்கைக்கு ஜப்பான் வழங்கிய கணிசமான உதவிகள் மற்றும் ஒற்றுமைக்காக இலங்கை ஆழ்ந்த பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கின்றது. இந்த சவாலான காலங்களில் இலங்கைக்கு வழங்கப்பட்ட தளராத ஆதரவு, மானிய உதவிகள் மற்றும் இலங்கை மீதான ஜப்பானின் நம்பிக்கைக்காக நாங்கள் ஜப்பானுக்கு நன்றியுடையவர்களாக இருக்கின்றோம்.
நீங்கள் அனைவரும் அறிந்தது போல், சர்வதேச நாணய நிதியத்துடனான இலங்கையின் சமீபத்திய பேச்சுவார்த்தைகளின் போது, சர்வதேச நாணய நிதியத்துடனான கலந்துரையாடல்களின் வெற்றிகரமான முடிவுகளிலும் அதன் பின்னர் எமது கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தைகளுக்கான தனித்துவமான நன்கொடையாளர் தளத்தை எளிதாக்குவதிலும் ஜப்பான் ஒரு முக்கிய ஆதரவை ஆற்றியது.
எமது இருதரப்பு ஒத்துழைப்பை முன்னெடுத்துச் செல்வது தொடர்பாக, இன்று காலை அதிமேதகு ஜனாதிபதி முன்னிலையிலும், எமது இருதரப்புக் கலந்துரையாடலின் போதும் பல முக்கிய முயற்சிகள் குறித்து கலந்துரையாடப்பட்டன. ஜப்பான் இலங்கையின் நம்பகமான பங்காளியாவதுடன், இலங்கையின் படிப்படியான பொருளாதார மீட்சியின் தெளிவான குறிகாட்டிகளுடன், ஜனாதிபதியும் நானும் ஜப்பானிய முதலீட்டுத் திட்டங்களை மீண்டும் தொடங்குவதற்கு ஜப்பானுக்கு அழைப்பு விடுத்ததுடன், மின்சாரம், துறைமுகம் மற்றும் நெடுஞ்சாலைகள் உள்ளிட்ட உட்கட்டமைப்பு, அர்ப்பணிப்பு முதலீட்டு வலயங்கள் மற்றும் பசுமை மற்றும் டிஜிட்டல் பொருளாதாரம் போன்ற பல துறைகளில் ஜப்பானிடமிருந்து புதிய முதலீடுகளுக்கு அழைப்பு விடுத்தோம். இலங்கையின் முக்கிய அபிவிருத்திப் பங்காளிகளில் ஒன்றாக ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு முகவர் நிலையத்தின் ஊடாக இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ள ஜப்பானின் உத்தியோகபூர்வ அபிவிருத்தி உதவியும் இதன்போது சுட்டிக்காட்டப்பட்டது.
எமது சமூகத்தின் பாதிக்கப்படக்கூடிய பிரிவினருக்கான போதியளவு ஆதரவு நடவடிக்கைகள் உட்பட பொருளாதார மீட்சி மற்றும் நிலையான அபிவிருத்திக்கு இலங்கை வழங்கும் மிக உயர்ந்த முன்னுரிமை குறித்தும் இலங்கைத் தரப்பு ஜப்பானிய தூதுக்குழுவிடம் சுட்டிக் காட்டியது. 13வது திருத்தத்தின் கீழ் அதிகாரப் பகிர்வு தொடர்பாக அதிமேதகு ஜனாதிபதி அவர்களால் அண்மையில் முன்வைக்கப்பட்ட முன்மொழிவுகள் உட்பட நாட்டின் அனைத்து பகுதிகளிலும் உள்ள அனைத்துப் பிரிவினருக்கும் தேசிய நல்லிணக்கம் மற்றும் ஐக்கியத்தை மேம்படுத்துவதற்கான சமீபத்திய நடவடிக்கைகள் குறித்தும் அமைச்சர் ஹயாஷிக்கு விளக்கினேன். எமது முயற்சிகளுக்கு ஜப்பான் இலங்கையை ஊக்கப்படுத்தியுள்ளது.
இன்று பிற்பகல் இடம்பெறவுள்ள எமது தொடர்ச்சியான கலந்துரையாடலல், தொற்றுநோய் மீட்பு, உணவுப் பாதுகாப்பை உறுதி செய்தல், உலகளாவிய கடன் நெருக்கடிக்கு நியாயமான மற்றும் சமமான தீர்வு, காலநிலை மாற்றத்தை நிவர்த்தி செய்தல் மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றலாக மாற்றுவதனை எளிதாக்குதல் மற்றும் உலகளாவிய பாதுகாப்பு தொடர்பான விடயங்களான ஆயுதப் பரவலாக்கல் தடை மற்றும் பேரழிவுகரமான ஆயுதங்களைக் களைதல் உள்ளிட்ட பல உலகளாவிய விடயங்கள் குறித்து ஜப்பானும் இலங்கையும் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளவுள்ளன. விரிவான அணுவாயுதப் பரிசோதனைக்கான தடை ஒப்பந்தத்தை அங்கீகரிக்கும் வகையில் அண்மையில் இலங்கை வழங்கிய உலகளாவிய பாதுகாப்பை மேம்படுத்துவதற்கான முக்கிய பங்களிப்பை ஜப்பான் சாதகமாக ஏற்றுக்கொண்டது. பிராந்திய விவகாரங்களில், இந்து சமுத்திர விளிம்பு சங்கத்திற்கான இலங்கையின் எதிர்வரும் தலைமைத்துவம் மற்றும் சர்வதேச சட்டத்தின் கட்டமைப்பிற்குள் அனைத்து அரசுகளினதும் செழுமைக்காக இநது சமுத்திர எல்லைப் பிராந்தியத்தில் சமாதானம், காவல், பாதுகாப்பு மற்றும் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான எமது அர்ப்பணிப்பு குறித்தும் அமைச்சர் ஹயாஷியுடன் கலந்துரையாடவுள்ளோம்.
மக்களுக்கு இடையேயான இணைப்புப் பகுதியில் எமது நல்லுறவு ஆழமடைந்துள்ளது. தற்போதுள்ள சுற்றுலா மற்றும் கல்வி ஒத்துழைப்பை வலுப்படுத்தும் அதே வேளையில் ஜப்பானியப் பொருளாதாரத்திற்கான திறமையான மனிதவளத் தேவைகளுக்கு இலங்கை ஆதாரமாக இருக்கக்கூடிய புதிய துறைகளிலான வாய்ப்புக்களும் இதில் அடங்கும். நம்பிக்கைக்குரிய தொடக்கத்தை ஏற்படுத்தியுள்ள இலங்கையின் பொருளாதார மீட்சி மற்றும் எதிர்கால அபிவிருத்தி வாய்ப்புக்கள் அனைத்து அம்சங்களிலும் ஜப்பான் - இலங்கை உறவை மேம்படுத்துவதற்கான அதிகமான வாய்ப்புக்களை எமக்கு வழங்குகின்றது என நாங்கள் நம்புகின்றோம்.
கௌரவ ஹயாஷி அவர்களே, இலங்கைக்கு விஜயம் செய்தமைக்காகவும், எனது நாட்டிற்கு ஜப்பான் தொடர்ந்தும் வழங்கி வரும் அனைத்து ஆதரவு மற்றும் நல்லெண்ணத்திற்காகவும் உங்களுக்கும் உங்கள் பிரதிநிதிகளுக்கும் மீண்டும் ஒருமுறை நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.