இலங்கைக்கும் அவுஸ்திரேலியாவுக்கும் இடையிலான 4வது சுற்று வெளிவிவகார அலுவலக இருதரப்பு ஆலோசனைகள், இரண்டாவது மூலோபாய கடல்சார் உரையாடல் மற்றும் மூன்றாவது கூட்டு வர்த்தக மற்றும் முதலீட்டுக் குழு கூட்டம் 2023 ஜூலை 12ஆந் திகதி கொழும்பில் உள்ள வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சில் இடம்பெற்றது.
இந்தக் கூட்டங்களுக்கு அவுஸ்திரேலியாவின் வெளிவிவகார மற்றும் வர்த்தகத் திணைக்களத்தின் முதலாவது உதவிச் செயலாளர் கேரி கோவன், மேலதிக செயலாளர் (இருதரப்பு கிழக்கு) யசோஜா குணசேகர, வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் மேலதிக செயலாளர் (பொருளாதார விவகாரங்கள்) ஷானிகா திஸாநாயக்க மற்றும் வணிக, வர்த்தக மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஏ.எம்.பி.எம்.பி. அத்தபத்து ஆகியோர் தலைமை தாங்கினர்.
கலந்துரையாடலின் போது, பாதுகாப்பு, விவசாயம், இணையப் பாதுகாப்பு மற்றும் கல்வித் துறைகளில் நிறுவன ஒத்துழைப்பை அதிகரிப்பதற்கான புதிய வழிகள் கண்டறியப்பட்டன. இந்து சமுத்திர விளிம்பு சங்கம் (ஐயோரா) உட்பட பிராந்திய ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்காக இரு தரப்பும் இணைந்து செயற்படுவதற்கு ஒப்புக்கொண்டன. வர்த்தகம் மற்றும் முதலீட்டு உறவுகளை வலுப்படுத்துவது குறித்தும் கலந்துரையாடப்பட்டது.
வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு,
கொழும்பு
2023 ஜூலை 15