வெளிநாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் தாரக்க பாலசூரிய மற்றும் ருமேனியாவின் இராஜாங்க செயலாளர் ட்ரேயன் ஹிரிஸ்டீயா ஆகியோரின் தலைமையில் இடம்பெற்ற இலங்கை - ருமேனியாவின் ஐந்தாவது சுற்று இருதரப்பு அரசியல் ஆலோசனைகள் 2023 ஜூன் 26ஆந் திகதி கொழும்பில் உள்ள வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சில் வெற்றிகரமாக நிறைவடைந்தன.
இலங்கையும் ருமேனியாவும் தொழிலாளர், வர்த்தகம் மற்றும் முதலீடு, தகவல் தொழில்நுட்பம், இணையப் பாதுகாப்பு, கல்வி மற்றும் திறன் அபிவிருத்தி தொடர்பான துறைகளில் நிறுவன ஒத்துழைப்பை அதிகரிப்பதற்கான புதிய வழிகளை அடையாளம் கண்டுள்ளன. இரு நாடுகளின் மூலோபாய அமைவிடங்களைப் பயன்படுத்தி, துறைமுக ஒத்துழைப்பில், குறிப்பாக கப்பல் சரக்குப் போக்குவரத்துத் துறை சார்ந்த ஒரு கூட்டாண்மைக்குள் நுழைவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்வதிலான தமது ஆர்வத்தை ருமேனியத் தரப்பினர் சுட்டிக்காட்டினர்.
தொழிலாளர் துறையில் இருதரப்புக் கூட்டுறவை வலுப்படுத்துவது இக் கலந்துரையாடலின் முக்கிய பகுதிகளில் ஒன்றாக அமைந்திருந்தது. ருமேனியாவில் தேவைப்படும் தொழில் வகைகளில் வருங்கால இலங்கை ஊழியர்களுக்கு பயிற்சி அளிப்பதற்காக, இலங்கையின் தொழிற்பயிற்சி மற்றும் தொழில்நுட்பப் பயிற்சி நிறுவனங்களை ருமேனிய நிறுவனங்களுடன் இணைத்தல், ருமேனியாவில் இருந்து இலங்கைக்கான ஜி2ஜி தொழிலாளர் ஒதுக்கீட்டைப் பெறுவதற்கான சாத்தியக்கூறுகள் ஆகியன குறித்து அரசியல் ஆலோசனைகளில் கலந்துரையாடப்பட்டன.
புலம்பெயர் தொழிலாளர்கள் தொடர்பான நிறுவனப் பொறிமுறையை வலுப்படுத்துவதற்கான இருதரப்பு ஒப்பந்தம் கைச்சாத்திடப்படுவது குறித்தும் கலந்துரையாடப்பட்டது. முன்மொழியப்பட்ட ஒப்பந்தம் இரு நாடுகளுக்கும் இடையே கட்டமைக்கப்பட்ட ஒத்துழைப்புக்கு அடித்தளம் அமைப்பதாக அமையும்.
பரஸ்பர நலன் சார்ந்த பிராந்திய மற்றும் சர்வதேசப் பிரச்சினைகள் குறித்தும் இராஜாங்க அமைச்சர் பாலசூரிய மற்றும் அரச செயலாளர் ஹிரிஸ்டியா ஆகியோர் தமது கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர்.
கடந்த 34 வருடங்களில் ருமேனியாவின் வெளிவிவகார அமைச்சின் உயர்மட்ட அதிகாரியொருவர் கொழும்புக்கு விஜயம் செய்வதில், அரச செயலாளர் ஹிரிஸ்டியா மேற்கொண்டுள்ள விஜயம் முதலாவதாகும். ஆலோசனைகளுக்கு முன்னதாக, இராஜாங்க அமைச்சர் பாலசூரிய 2023 ஜூன் 16ஆந் திகதி புக்கரெஸ்டில் ருமேனியாவின் தொழிலாளர் மற்றும் சமூக ஒற்றுமைக்கான ருமேனிய இராஜாங்க செயலாளர் மதலின் கிறிஸ்டியன் வசில்கோயுவுடன், ருமேனியாவில் உள்ள இலங்கையர்களுக்கான ஆதாயமான வேலை வாய்ப்புக்கள், அப்பகுதியில் உருவாகி வரும் சவால்கள் உட்பட ஆக்கப்பூர்வமான கலந்துரையாடல்களில் ஈடுபட்டார். ருமேனியாவிற்கான தனது விஜயத்தின் போது, புக்கரெஸ்டில் தொழிலாளர் வணிக மன்றத்திலும் இராஜாங்க அமைச்சர் உரையாற்றினார்.
நீடித்து வரும் இருதரப்புப் பங்காளித்துவத்தை பலப்படுத்துவதற்கும், நாட்டில் உள்ள பலம் வாய்ந்த இலங்கை சமூகத்திற்கு சேவை செய்வதற்குமான தனது உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தும் வகையில், ருமேனியாவில் ஒரு இராஜதந்திரத் தூதரகத்தைத் திறக்கும் நடவடிக்கையில் இலங்கை ஈடுபட்டுள்ளது.
வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு,
கொழும்பு
2023 ஜூன் 30