புதிய உலகளாவிய நிதியுதவி ஒப்பந்தத்திற்கான உச்சிமாநாட்டில் உரையாற்றுவதற்காக இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பாரிஸ் விஜயம்

புதிய உலகளாவிய நிதியுதவி ஒப்பந்தத்திற்கான உச்சிமாநாட்டில் உரையாற்றுவதற்காக இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பாரிஸ் விஜயம்

ஜூன் 22 முதல் 23 வரை நடைபெறவுள்ள புதிய உலகளாவிய நிதியுதவி ஒப்பந்தத்திற்கான உலகத் தலைவர்களின் உச்சிமாநாட்டில் உரையாற்றுவதற்காக, பிரெஞ்சுக் குடியரசின் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோனின் அழைப்பின் பேரில், இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, 2023 ஜூன் 21, புதன்கிழமை பாரிஸை சென்றடைந்தார். இந்த உச்சிமாநாடு சர்வதேச சமூகத்தினரிடையே குறுக்குப் பிராந்திய ரீதியான ஒருமித்த கருத்தைப் பெறுவதற்கு முயற்சிப்பதுடன், பலமான விநியோகங்களுடன் கூடிய உள்ளடக்கமான, சமமான சர்வதேச நிதிக் கட்டமைப்பை உருவாக்குகின்றது.

ஒரு நடுத்தர வருமானம் கொண்ட நாடாக இலங்கையின் அனுபவம் மற்றும் கடுமையான பொருளாதார நெருக்கடியுடன் சர்வதேச  நிதி நிறுவனங்களைக் கையாள்வதில் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து ஜனாதிபதி விக்கிரமசிங்க உச்சிமாநாட்டில் உரையாற்றவுள்ளார். குறிப்பாக சர்வதேச நாணய நிதியத்துடனான கடன் சார்ந்த கலந்துரையாடல்களிலும், பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் மீட்சிக்கான பாதையில் முன்னேறிச் செல்வதில் இலங்கையின் அனுபவம், உச்சிமாநாட்டின் முடிவுகளுக்கு குறிப்பாகப் பொருத்தமானதாகக் கருதப்படுகின்றது.

துனிசியாவின் தலைவர் கைஸ் சையத், ருவாண்டா பிரதமர் எட்வர்ட் என்கிரெண்டே, சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவா, ஆபிரிக்க அபிவிருத்தி வங்கியின் தலைவர் கலாநிதி. அகின்வுமி ஏ. அடெசினா மற்றும் முன்னாள் ஜனாதிபதி சாட் மகாமத் இட்ரிஸ் டெபி ஆகியோர் இந்த குறிப்பிட்ட கருப்பொருளின் கீழ் உரையாற்றவுள்ள வட்ட மேசையின் ஏனைய தலைவர்களாவர்.

சர்வதேச அமைப்புக்களின் தலைவர்கள், பலதரப்பு நிதி நிறுவனங்கள் மற்றும் ஏனைய முக்கிய பங்குதாரர்கள் தவிர, ஐரோப்பா, ஆசியா, ஆபிரிக்கா மற்றும் தென் அமெரிக்கா முழுவதும் உள்ள நாடுகளின் அரச தலைவர்கள் மற்றும் அரசாங்கத் தலைவர்களும் இந்த உச்சிமாநாட்டில் பங்கேற்கவுள்ளனர். பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன், ஐ.நா. பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரஸ், சீனப் பிரதமர் லி கியாங், ஜேர்மன் ஜனாதிபதி ஓலாஃப் ஸ்கோல்ஸ், தென்னாபிரிக்க ஜனாதிபதி சிரில் ராமபோசா, பிரேசில் ஜனாதிபதி லுலா டா சில்வா, பார்படாஸ் பிரதமர் மியா மோட்லி, கென்ய ஜனாதிபதி வில்லியம் ரூட்டோ ஆகிய உலகத் தலைவர்கள் இந்த உச்சி மாநாட்டில் உரையாற்றவுள்ளனர்.

உச்சிமாநாட்டின் பக்க அம்சமாக, ஜனாதிபதி விக்கிரமசிங்க பல அரச தலைவர்கள் மற்றும் பலதரப்பு நிறுவனங்களின் தலைவர்களை சந்தித்து பொருத்தமான விடயங்கள் குறித்து கலந்துரையாடவுள்ளார். ஜூன் 22ஆந் திகதி எலிசீயில் நடைபெறும் உச்சிமாநாட்டில் பங்கேற்கும் அரச மற்றும் அரசாங்கத் தலைவர்களுக்கு ஜனாதிபதி மக்ரோன் வழங்கும் உத்தியோகபூர்வ இரவு விருந்தில் ஜனாதிபதி மற்றும்  முதல் பெண்மணி பேராசிரியர் மைத்ரீ விக்கிரமசிங்க கலந்துகொள்ளவுள்ளனர். 2023 ஜூன் 23ஆந் திகதி பிரெஞ்சுக் குடியரசின் முதல் பெண்மணி பிரிஜிட் மக்ரோன் நடாத்தும் நிகழ்வில் முதல் பெண்மணி விக்கிரமசிங்கவும் பங்கேற்க உள்ளார்.

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு,

கொழும்பு

2023 ஜூன் 22

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close