இலங்கை மற்றும் ஐக்கிய இராச்சியத்திற்கு இடையிலான மூலோபாய உரையாடல் ஏப்ரல் 18ஆம் திகதி லண்டனில் நடைபெறும்

இலங்கை மற்றும் ஐக்கிய இராச்சியத்திற்கு இடையிலான மூலோபாய உரையாடல் ஏப்ரல் 18ஆம் திகதி லண்டனில் நடைபெறும்

2023 ஏப்ரல் 18ஆந் திகதி லண்டனில் உள்ள வெளிவிவகார பொதுநலவாய மற்றும் அபிவிருத்தி அலுவலகத்தில் வெளிவிவகார செயலாளர் மட்டத்தில் ஆரம்பமாகவுள்ள ஐக்கிய இராச்சிய - இலங்கை மூலோபாய உரையாடலில் வெளிவிவகார செயலாளர் அருணி விஜேவர்தன பங்கேற்கவுள்ளார். வெளிவிவகார பொதுநலவாய மற்றும் அபிவிருத்தி அலுவலகத்தின் ஐக்கிய இராச்சிய வெளியுறவு அமைச்சர் அன்னே மேரி ட்ரெவெல்யன் அவர்களால் அங்குரார்ப்பணம் செய்து வைக்கவுள்ள  இந்த உரையாடல், வெளிவிவகார பொதுநலவாய மற்றும் அபிவிருத்தி அலுவலகத்தின் நிரந்தர துணைச் செயலாளர் சேர் பிலிப் பார்டன் அவர்களின் பங்கேற்புடன் நடாத்தப்படும்.

இந்த ஆண்டு இலங்கைக்கும் ஐக்கிய இராச்சியத்திற்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளின் 75வது ஆண்டு நிறைவை எய்தியுள்ளதொரு முக்கிய  தருணத்தில், வெளிவிவகார பொதுநலவாய மற்றும் அபிவிருத்தி அலுவலகத்தின் அழைப்பின் பேரில் ஆரம்ப மூலோபாய உரையாடல் கூட்டப்பட்டுள்ளது.

இரு நாடுகளுக்கும் இடையிலான பன்முக உறவுகள் குறித்து கலந்துரையாடுவதற்கானதொரு மன்றத்தை மூலோபாய உரையாடல் இரு தரப்புக்கும் வழங்கும்.

உரையாடலின் பக்க அம்சமாக, வெளிவிவகார செயலாளர் விஜேவர்தன, பொதுநலவாய அமைப்பின் உதவிச் செயலாளர் நாயகம் பேராசிரியர் லூயிஸ்  ஜி.  பிரான்சிச்சியுடன் இருதரப்பு சந்திப்பில் ஈடுபடவுள்ளதுடன், சர்வ கட்சி நாடாளுமன்றக் குழு உறுப்பினர்களுடனும் கலந்துரையாடுவார்.

 வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு,

கொழும்பு

2023 ஏப்ரல் 17

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close