வெனிசுவேலா பொலிவேரியக் குடியரசின் தூதுவராக ஒரே நேரத்தில் அங்கீகாரம் பெற்ற கியூபா குடியரசின் இலங்கைத் தூதுவர், 2023 ஜனவரி 10ஆந் திகதி கராகஸில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் வெனிசுவேலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ மோரோஸிடம் தனது நற்சான்றிதழ் கடிதங்களைக் கையளித்தார்.
நற்சான்றிதழ்கள் வழங்கும் விழாவைத் தொடர்ந்து நடைபெற்ற சுருக்கமான உரையாடலின் போது, புதிய தூதுவரை அன்புடன் வரவேற்ற ஜனாதிபதி, வெனிசுவேலாவின் பொலிவேரியன் குடியரசின் தூதுவராக அவர் பதவியேற்றமைக்காக தனது வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.
எதிர்காலத்தில் உலகளாவிய அரசியல் மற்றும் பொருளாதார சவால்களை எதிர்கொள்ள இரு நாடுகளுக்கு இடையே வலுவான உறவுகளை ஏற்படுத்த வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி மதுரோ வலியுறுத்தினார். பெற்றோலியம், இயற்கை எரிவாயு, தங்கம் போன்ற துறைகளில் முதலீட்டு வாய்ப்புக்களை ஆராய்வதற்கான வழிகளை இலங்கையர்களுக்கு திறக்க தமது நாடு ஆர்வமாக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தூதுவர் ரத்நாயக்க ஜனாதிபதிக்குத் தெரிவித்தார். இரு நாடுகளின் பரஸ்பர நலனுக்காக குறிப்பாக சர்வதேச தொடர்புகள், சுகாதாரப் பாதுகாப்பு, தகவல் தொழில்நுட்பம், விவசாயம் மற்றும் கடல்சார் ஆகிய துறைகளில் நெருக்கமான பொருளாதார உறவுகளை ஏற்படுத்தவும், இருதரப்பு ஒத்துழைப்பின் அளவை விரிவுபடுத்தவும் அனைத்து வழிகளையும் ஆராய்வதாக அவர் ஜனாதிபதியிடம் உறுதியளித்தார்.
இந்த விஜயத்தின் போது, தூதுவர் ரத்நாயக்க, ஆசியா, ஓசியானியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளின் பிரதி அமைச்சர் கபயா ரொட்ரிக்ஸ் மற்றும் பலதரப்பு விவகாரங்களுக்கான பிரதி அமைச்சர் ரூபன் டாரியோ மொலினா ஆகியோரை சந்தித்தார்.
தூதுவர் ரத்நாயக்க 1998ஆம் ஆண்டு முதல் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சில் பணிபுரிந்து வருவதுடன், ஹவானாவிற்கு நியமிக்கப்படுவதற்கு முன்னர் அவர் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் சொத்து முகாமைத்துவ மற்றும் அபிவிருத்திப் பணிப்பாளர் நாயகமாக பணியாற்றினார்.
இலங்கைத் தூதரகம்,
ஹவானா
2023 ஜனவரி 17