இந்தோனேசியக் குடியரசிற்கான நியமனம் செய்யப்பட்ட தூதுவர் ஜயநாத் கொலம்பகே கடமைகளை பொறுப்பேற்பு

இந்தோனேசியக் குடியரசிற்கான நியமனம் செய்யப்பட்ட தூதுவர் ஜயநாத் கொலம்பகே கடமைகளை பொறுப்பேற்பு

இந்தோனேசியக் குடியரசின் நியமனம் செய்யப்பட்ட தூதுவர் அட்மிரல் பேராசிரியர் ஜயநாத் கொலம்பகே 2023 ஜனவரி 30ஆந் திகதி ஜகார்த்தாவில் உள்ள இலங்கைத் தூதரகத்தில் கடமைகளைப் பொறுப்பேற்றார்.

தூதரகத்தை வந்தடைந்ததும், நியமனம் செய்யப்பட்ட தூதுவர் அட்மிரல் பேராசிரியர் ஜயநாத் கொலம்பகேவை தூதரக ஊழியர்கள் வரவேற்றனர். தூதுவர் மற்றும் ஏனைய பணியாளர்கள் எண்ணெய் விளக்கு ஏற்றிக் கொண்டாடிய எளிமையான விழாவின் மூலம் அவர் தனது கடமைகளைப் பொறுப்பேற்றார்.

தூதரக ஊழியர்களிடம் உரையாற்றிய தூதுவர், இந்தோனேசியக் குடியரசின் பொருளாதாரம், அரசியல் மற்றும் பாதுகாப்புத் துறைகளில் அதன் முக்கிய சாதனைகளைக் கருத்தில் கொண்டு இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவதன் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார். 2023 ஆம் ஆண்டிற்கான ஆசியான் தலைவராக, இந்தோனேசியா ஒரு முக்கிய பங்கை வகிப்பதாகவும், முழுமையான பிராந்தியத்தையும் சென்றடைய இலங்கைக்கு ஒரு முக்கிய பங்காளியாக இருப்பதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார். இந்தோனேசியாவும் இலங்கையும் கடல்சார் அண்டை நாடுகளாவதுடன், கடல்சார் வர்த்தகத்தின் காவலையும் பாதுகாப்பையும் உறுதி செய்வதற்கான கூட்டுப் பொறிமுறைகளை உருவாக்குவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதாகவும் அவர் வலியுறுத்தினார்.

நியமனம் செய்யப்பட்ட தூதுவர் கொலம்பகே, முன்னர் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் செயலாளராகவும், இலங்கையில் உள்ள தேசிய பாதுகாப்பு கற்கைகள் நிறுவகத்தின் பணிப்பாளர் நாயகமாகவும் செயற்பட்டார். இலங்கை கடற்படையில் 36 வருடங்கள் சேவையாற்றிய இவர், இலங்கை கடற்படையின் முன்னாள் தளபதியாகவும் இருந்துள்ளார்.

நியமனம் செய்யப்பட்ட தூதுவர் கொலம்பகே இலங்கை, பங்களாதேஷ், சீனா, இந்தியா, ஜப்பான் மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் உள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் பயிற்சி நிறுவனங்களில் விருந்தினர் விரிவுரையாளராகப் பணியாற்றியுள்ளார். அவர் ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவெல பல்கலைக்கழகத்தில் கலாநிதிப் பட்டமும், மெட்ராஸ் பல்கலைக்கழகத்தில் பாதுகாப்பு மற்றும் மூலோபாய ஆய்வுகள் விஞ்ஞான முதுமாணிப் பட்டமும், லண்டனில் உள்ள கிங்ஸ் கல்லூரியில் சர்வதேச ஆய்வுகளில் கலை முதுமாணிப் பட்டமும் பெற்றுள்ளார்.

இலங்கைத் தூதரகம்

ஜகார்த்தா

2023 ஜனவரி 31

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close