சமீபத்தில், தாய்லாந்து இராச்சியத்தின் தேசிய சட்டமன்றத்தின் முடியாட்சியை நிலைநிறுத்துவதற்கான செனட் குழு மற்றும் வெளியுறவு விவகாரங்களுக்கான செனட் நிலைக்குழுவின் தலைவரின் அழைப்பின் பேரில், இலங்கையின் தூதுவரும் நிரந்தரப் பிரதிநிதியுமான சி.ஏ. சமிந்த ஐ. கொலொன்ன மற்றும் அவரின் கணவர் ஸ்டீபன் சேனாநாயக்க ஆகியோர் தாய்லாந்து, ஃபிரா நகோன் சி அயுத்தயா மாகாணத்தில் உள்ள அயுத்தயா வரலாற்று ஆய்வு மையத்தில் 'அயுத்தயாவின் வெளிநாட்டு உறவுகளை மீண்டும் புத்துயிர் பெறச் செய்தல்' பற்றிய தொடக்க விழாவில் இணைந்து கொண்டனர். ஈரான், இந்தோனேசியா வியட்நாம், இந்தியா, சீனா மற்றும் ஜப்பான் ஆகிய அயுத்யாவுடன் வரலாற்று உறவுகளை அனுபவிக்கும் ஆறு நாடுகளின் தூதுவர்கள் மற்றும் பிரதிநிதிகளும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
பணிக்குழுவின் தலைவர் ஃபிரா நகோன் சி, அயுத்தயா மாகாண ஆளுநர் ஃபிரா நகோன் சி, அயுத்தயா ராஜாபட் பல்கலைக்கழகத்தின் தலைவர் மற்றும் செனட்டர் விதயா பியூபாங் ஆகியோர் விழாவிற்கு தூதுவர்கள் மற்றும் அவர்களது வாழ்க்கைத் துணைவர்களை வரவேற்றனர். தொடக்க உரையின் போது, முடியாட்சியை நிலைநிறுத்துவதற்கான செனட் குழுவின் தலைவர் சுவாபன் தன்யுவர்தன மற்றும் செனட்டின் தலைவர் பேராசிரியர் போர்ன்பெட்ச் விச்சிச்சோல்சாய் ஆகியோர் அயுத்யாவின் வரலாற்று சர்வதேச உறவுகளை எடுத்துரைத்தனர்.
கண்காட்சியின் இலங்கைக் கூடத்தில், தூதுவர் சமிந்த கொலொன்ன, தாய்லாந்துடனான இலங்கையின் வரலாற்று உறவுகளை சுட்டிக் காட்டினார்.
தாய்லாந்திற்கும் இலங்கைக்கும் இடையே சுமுகமான உறவுகள் இருப்பதுடன், குறிப்பாக மதம், கலை மற்றும் கலாச்சாரம் ஆகியவற்றில் ஏழு நூற்றாண்டுகளுக்கு மேலாக விரிவடைகின்றது. தாய்லாந்தின் அயுத்தயாவும் இலங்கையின் கண்டியும் இந்த வரலாற்று உறவுகளின் மையங்களாகும். இரு நாடுகளும் வரலாற்றில் முக்கியமான தருணங்களில் ஒருவருக்கொருவர் ஆதரவளித்துள்ளன. இதன் விளைவாக இன்று வரை இரு நாடுகளிலும் பௌத்தம் உறுதியாக நிலைநிறுத்தப்பட்டுள்ளது.
அயுத்யாவுடன் வரலாற்று உறவுகளைக் கொண்ட ஏழு நாடுகளும் தமது தேசிய அடையாளத்தைக் குறிக்கும் நினைவுப் பொருட்களைக் காட்சிப்படுத்திய கண்காட்சியில் பங்கேற்றன. சுவையூட்டிகள் மற்றும் அதனுடன் தொடர்புடைய பொருட்கள் சந்தைப்படுத்தல் சபையின் தயாரிப்புக்கள் மற்றும் தேசிய கைவினைப் பேரவையின் கலைப்பொருட்கள் இலங்கைக் கூடத்தில் காட்சிப்படுத்தப்பட்டதுடன், கூடத்திற்கு வந்த பார்வையாளர்களுக்கு சிலோன் தேநீரும் வழங்கப்பட்டது.
இலங்கைத் தூதரகம் மற்றும் நிரந்தரப் பணிமனை,
பேங்கொக்
2022 டிசம்பர் 28