இந்தியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட, இந்தியாவின் நிதி மற்றும் பெருநிறுவன விவகார அமைச்சர் ஸ்ரீமதி நிர்மலா சீதாராமனை 2022 டிசம்பர் 06ஆந் திகதி புது தில்லியில் உள்ள நோர்த் பிளாக்கில் உள்ள அவரது அலுவலகத்தில் வைத்து சந்தித்தார்.
தற்போதைய நெருக்கடியின் பின்னணியில் இந்திய பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் இலங்கைக்கான உதவிகள் தொடர்பாக கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல் அமைச்சர் சீதாராமனுடன் உயர்ஸ்தானிகர் மொரகொட நடாத்திய தொடர்ச்சியான சந்திப்புக்களில் மிகவும் சமீபத்தில் இடம்பெற்ற சநதிப்பு இதுவாகும்.
ஆரம்பத்தில், உயர்ஸ்தானிகர் மொரகொட, சர்வதேச நாணய நிதியத்துடனான இலங்கையின் தற்போதைய கலந்துரையாடல்கள் மற்றும் நாட்டின் கடன் மறுசீரமைப்பு செயன்முறையின் தற்போதைய நிலை குறித்து அமைச்சர் சீதாராமனிடம் விளக்கினார். தற்போதைய பொருளாதாரச் சுருக்கம் இலங்கையின் மக்கள்தொகையில் ஏழை மற்றும் பாதிக்கப்படக்கூடிய பிரிவினர் மீது ஏற்படுத்தும் கடுமையான தாக்கம் குறித்தும் அவர் விளக்கினார்.
இந்த சவாலான மற்றும் கடினமான காலக்கட்டத்தில் இலங்கைக்கு இந்தியா வழங்கிய அவசர உதவி மற்றும் இருதரப்பு, பலதரப்பு பங்காளிகளுடனான தனிப்பட்ட தலையீடுகளுக்காக உயர்ஸ்தானிகர் அமைச்சர் சீதாராமனுக்கு மீண்டும் ஒருமுறை நன்றிகளைத் தெரிவித்தார்.
உயர்ஸ்தானிகர் மொரகொட மற்றும் அமைச்சர் சீதாராமன் ஆகியோர் இருதரப்பு பொருளாதார ஒத்துழைப்பின் நிலையை மீளாய்வு செய்ததுடன், முதலீடுகள், சுற்றுலா மற்றும் வர்த்தகத்தை மேம்படுத்துவதன் மூலம் இரு நாடுகளுக்கும் இடையிலான பன்முக பொருளாதார ஒருங்கிணைப்பின் மூலம் இலங்கையின் பொருளாதார மறுமலர்ச்சியில் இந்தியா முக்கிய பங்கை வகிக்க முடியும் என உயர்ஸ்தானிகர் வலியுறுத்தினார்.
இலங்கை உயர்ஸ்தானிகராலயம்,
புது தில்லி
2022 டிசம்பர் 06