2022 டிசம்பர் 01 முதல் 03 வரை ஹோ சி மின் நகரில் உள்ள சாய் கோன் கண்காட்சி மற்றும் மாநாட்டு மையத்தில் நடைபெற்ற வியட்நாம் எக்ஸ்போவில் முதன்முறையாக இலங்கை வணிக நிறுவனங்கள் பங்கேற்பதை ஏற்றுமதி அபிவிருத்தி சபையுடன் இணைந்து இலங்கைத் தூதரகம் ஏற்பாடு செய்தது,இது வியட்நாம் எக்ஸ்போவின் 20வது பதிப்பாகும்.
இலங்கை வணிக நிறுவனங்களை பிரதிநிதித்துவப்படுத்தி, ஹேமாஸ் மெனுபெக்ச்சரிங் (பிரைவேட்) லிமிடெட், சிலோன் ஃப்ரெஷ் டீஸ் பிரைவேட் லிமிடெட், சிலோன் பிஸ்கட்ஸ் லிமிடெட், களனி கேபிள்ஸ் பிஎல்சி, ஒரெல் கோர்ப்பரேஷன் பிரைவேட் லிமிடெட் மற்றும் சிறிய நடுத்தர தொழில்முனைவோர் நிறுவனங்களான ஹெல்தி ஃபுட்ஸ் லங்கா எக்ஸ்போர்ட்ஸ் (பிரைவேட்) லிமிடெட், கொண்ட்ரிக் டீ பீவரேஜஸ் லங்கா (பிரைவேட்) லிமிடெட், டெஹாமி புராடக்ட்ஸ் அண்ட் சக்சஸ் ஹோல்டிங்ஸ் (பிரைவேட்) லிமிடெட் ஆகியன இந்த எக்ஸ்போவில் பங்கேற்றன.
இலங்கை வணிகங்கள் 100 க்கும் மேற்பட்ட வர்த்தக விசாரணைகளைப் பெற்றதுடன், ஆர்வமுள்ள தரப்பினருடன் அதிக எண்ணிக்கையிலான வணிக சந்திப்புக்களையும் நடாத்தியது. முக்கியமாக மின்சார கேபிள்கள், தொழில்துறை மின்சாரப் பொருட்கள், கறுவா உற்பத்திகள் மற்றும் பல்வேறு வகையான தேநீர் போன்ற பகுதிகளில், 20 க்கும் மேற்பட்ட பொருட்களை வாங்கக்கூடிய சாத்தியமானவர்களுடன் அவர்கள் தொடர்பு கொண்டனர்.
வியட்நாமின் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சின் தென்னிலங்கை விவகாரங்களுக்கான முகவர் நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகம் நுயென் வான் ங்கா, ஹோ சி மின் நகரில் உள்ள வியட்நாம் வர்த்தக ஊக்குவிப்பு முகவரமைப்பின் துணைப் பிரதிநிதி புய் ஹோங் யென் மற்றும் தலைவர் - வினெக்சாட் விளம்பரம் மற்றும் வர்த்தக கண்காட்சி கூட்டுப் பங்கு நிறுவனத்தின் பொதுப் பணிப்பாளர் நுயென் காக் லுவான் ஆகியோரால் இலங்கைக் கூடம் சம்பிரதாயபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.
இயந்திரங்கள் மற்றும் மின்னணுவியல், வன்பொருள் மற்றும் கைக் கருவிகள், உணவு மற்றும் ப்ரோபெக், தோட்டம் மற்றும் நிலப்பரப்பு போன்ற பல்வேறு தயாரிப்புத் துறைகளைக் காண்பிப்பதற்காக எக்ஸ்போ ஒரு சிறந்த தளத்தை வழங்கியது. மிகப்பெரிய வர்த்தகக் கண்காட்சியாக, வியட்நாம் எக்ஸ்போ, 20 நாடுகளின் பிரதிநிதித்துவம் மற்றும் 13,000 பார்வையாளர்களுடன் அண்ணளவாக 550 கூடங்களைக் கொண்டிருந்தது.
ஏற்றுமதி அபிவிருத்தி சபை மற்றும் வர்த்தக நிறுவனங்களுடன் இணைந்து, தூதரகத்தின் அமைச்சர் ஆலோசகர் (வணிகம்) கிஷானி விக்கிரமசிங்க நிகழ்வில் இலங்கையின் வெற்றிகரமான பங்கேற்பை ஒருங்கிணைத்தார்.
இலங்கைத் தூதரகம்,
ஹா நொய்
2022 டிசம்பர் 06