ஜப்பானுக்கான இலங்கையின் புதிய தூதுவராக நியமிக்கப்பட்ட இ. ரொட்னி எம். பெரேரா 2022 ஒக்டோபர் 27ஆந் திகதி டோக்கியோவிலுள்ள இலங்கைத் தூதரகத்தில் கடமைகளைப் பொறுப்பேற்றார். இரு நாடுகளுக்கும் இடையிலான கடந்த 70 வருட இருதரப்பு உறவுகளின் போது நியமிக்கப்பட்டுள்ள ஜப்பானுக்கான பதினெட்டாவது இலங்கைத் தூதுவர் இவராவார்.
ஜப்பானில் உள்ள பௌத்த விகாரைகளின் தலைவர்கள் மற்றும் கிறிஸ்தவ, இந்து மற்றும் இஸ்லாமிய மதங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் மதத் தலைவர்கள் புதிதாக நியமிக்கப்பட்ட தூதுவருக்கு ஆசீர்வாதங்களைத் தெரிவித்தனர். ஜப்பானின் பிரதம சங்கநாயக்கவும், இலங்கை மகாபோதி சங்கத்தின் கௌரவத் தலைவரும், சவர லங்காஜி விகாரையின் பிரதமகுருவம், இலங்கை மகாபோதி விகாரை மற்றும் இந்தியாவின் சாஞ்சி செட்டியகிரி விகாரையின் பிரதான மடாதிபதியுமான வணக்கத்துக்குரிய பனகல உபதிஸ்ஸ தேரர் மற்றும் உதரட அமரபுர மகா நிகாய (பிரிவு) இன் பதில் பிரதம பீடாதிபதியும், ஹச்சியோஜியிலுள்ள சகமுனி சர்வதேச பௌத்த நிலையத்தின் பிரதம தலைவருமான வணக்கத்துக்குரிய யலகமுவ தம்மிஸ்ஸர நாயக்க தேரர் இந்நிகழ்வில் பிரசங்கங்களை நிகழ்த்தினர்.
ஒசாகாவில் உள்ள இலங்கையின் கௌரவத் தூதுவர் யூ அலுத்கமகே, ஒட்டாருவில் உள்ள இலங்கையின் கௌரவத் தூதுவர் கென் யமஷிதா, ஜப்பானில் உள்ள ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் நாட்டு முகாமையாளர் இந்துனில் விஜேகோன் மற்றும் ஜப்பானில் உள்ள இலங்கையுடன் தொடர்புடைய அனைத்து சங்கங்களின் பிரதிநிதிகள் மற்றும் இலங்கை சமூகத்தைச் சேர்ந்த பல நலன் விரும்பிகள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சுருக்கமான பிரசங்கங்களை நிகழ்த்தினர்.
தூதுவர் பெரேரா அவர்கள் கூட்டத்தில் உரையாற்றியதுடன், இலங்கை சமூகத்தை தூதரக அதிகாரிகளுடன் ஈடுபடுத்துமாறு அழைப்பு விடுத்ததுடன், ஜப்பானுடனான இருதரப்பு உறவுகளை மேலும் மேம்படுத்துவதற்கான இலங்கைத் தூதரகத்தின் முயற்சிகளுக்கு ஆதரவளிக்க ஒரே குழுவாக இணைந்து செயற்படுவதன் பலனையும் வெளிப்படுத்தினார். இலங்கை ஜனாதிபதி தனது ஜப்பானுக்கான விஜயத்தின் போது கூறியது போல், இந்த காலத்தால் சோதிக்கப்பட்ட பன்முகத்தன்மை கொண்ட பரஸ்பர நன்மை பயக்கும் பங்காளித்துவத்தின் முழுத் திறனை அடைந்து கொள்வதற்காக இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை மீளக் கட்டியெழுப்புவது இன்றியமையாத தேவை என்றும் அவர் விளக்கினார்.
ஜப்பானும் இலங்கையும் இணைந்து உணவுப் பாதுகாப்பு, எரிசக்திப் பாதுகாப்பு மற்றும் கடல்சார் பாதுகாப்பு போன்ற இரு நாடுகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய சில விடயங்களைத் தீர்க்க முடியும் என அவர் விரிவாகக் குறிப்பிட்டார். 1951ஆம் ஆண்டு சான்பிரான்சிஸ்கோ சமாதான மாநாட்டில் முன்னாள் ஜனாதிபதி ஜே ஆர் ஜெயவர்த்தன ஆற்றிய உரையை சுட்டிக்காட்டிய தூதுவர், ஜப்பானிடம் இருந்து கற்றுக் கொள்ள வேண்டியதன் அவசியத்தை விளக்கினார். இலங்கைக்கான இந்த இக்கட்டான தருணத்தில் ஜப்பான் ஆற்றக்கூடிய முக்கிய பங்கை நினைவு கூர்ந்த அவர், 2015ஆம் ஆண்டு இரு நாடுகளுக்கும் இடையில் இணக்கம் காணப்பட்ட விரிவான பங்காளித்துவம் மற்றும் ஜப்பான் கணிசமான அளவு நிதி ஆதாரங்களை தாராளமாக வழங்கிய பல திட்டங்களை நினைவு கூர்ந்தார். 2003ஆம் ஆண்டு டோக்கியோ நன்கொடையாளர் மாநாட்டில் ஜப்பான் இலங்கைக்கு உலகளாவிய பொருளாதார ஆதரவைத் திரட்டியதையும் அவர் நினைவு கூர்ந்தார்.
இலங்கையின் மூலோபாய இருப்பிடம், தெற்காசியா மற்றும் தென்கிழக்கு ஆசியாவுக்கான அணுகல் போன்ற வர்த்தக உடன்படிக்கைகளைப் பயன்படுத்தி நாட்டின் வர்த்தக அளவையும் வருமானத்தையும் பெருக்குவதற்கு தேவையான வெளிநாட்டு நாணயங்களை உருவாக்குவதற்கான புதுமையான வழிகளைக் கண்டறிவதன் அவசியத்தை அவர் வலியுறுத்தினார். முதலீட்டாளர்களின் நம்பிக்கையை வளர்ப்பதற்கு தயாரிப்பு பன்முகத்தன்மை மற்றும் ஜப்பானிய வணிக நிறுவனங்களுடனான ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தை குறிப்பிட்ட அவர், சாத்தியமான விநியோகச் சங்கிலிகளை உருவாக்கி, குறிப்பாக தகவல் தொழில்நுட்பம் மற்றும் வங்கித் துறைகளில் முதலீடுகளை அதிகரிக்க வேண்டும் எனக் குறிப்பிட்டார். ஜப்பானியப் பயணிகளை இலங்கைக்கு வர ஊக்குவிப்பதும், இலங்கையர்களுக்கு ஜப்பானால் கிடைத்துள்ள வேலை வாய்ப்புக்களை முழுமையாகப் பயன்படுத்துவதும் டோக்கியோவில் உள்ள தூதரகத்தின் உடனடி முன்னுரிமைகளாகும்.
கலாச்சார மற்றும் கல்வி இராஜதந்திரத்தை விரிவுபடுத்தும் தூதுவர் பெரேரா, கலாச்சார, கல்வி மற்றும் மத நிறுவனங்களுடன் ஒத்துழைப்பை விரிவுபடுத்தவும், ஆராய்ச்சி நடவடிக்கைகள் மற்றும் மாணவர் பரிமாற்றங்களை அதிகரிக்கவும் தனது விருப்பத்தை தெரிவித்தார். கடற்றொழில் மற்றும் கனிமக் கைத்தொழில் துறைகளில் இலங்கை வளர்ச்சியடைவதற்கான அளப்பரிய சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக அவர் மேலும் தெரிவித்தார். ஜப்பான் முழுவதும் இலங்கையை மேம்படுத்துவதற்கான வழிமுறையாக, 47 மாகாண அரசுகளுடனான ஈடுபாட்டை அதிகரிப்பதனை அவர் முன்மொழிந்தார். ஜப்பானில் இலங்கை குறித்த பிம்பத்தை உருவாக்குவது மற்றும் இலங்கை குறித்த ஒரு புதிய கதையை உருவாக்குவது குறித்தும் விரிவாகத் தெரிவிக்கப்பட்டது.
தூதுவர் இ. ரொட்னி எம். பெரேரா நான்கு தசாப்த கால தொழில்முறைக் கல்வி, உலகளாவிய பயணம், பேசும் வாய்ப்புக்கள் மற்றும் உலகின் ஏனைய நாடுகளுடனான இலங்கையின் உறவுகள் சார்ந்த தொடர்புகளை வைத்துள்ளார். உலகின் அனைத்துப் பகுதிகளிலும் பணிபுரிந்து, ஆராய்ச்சிகளை மேற்கொண்டுள்ள அவர், இலங்கைக்கு எதிரான சர்வதேச உறவுகளின் துறையில் தனித்துவமான உலகளாவிய முன்னோக்கைக் கொண்டுள்ளார். இலங்கை வெளிநாட்டு சேவையின் உறுப்பினரான தூதுவர் பெரேரா, வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் மேலதிக செயலாளராக செயற்பட்டதோடு, அரசியல் விவகாரங்கள், பொது, கலாச்சார மற்றும் பொருளாதார இராஜதந்திரம், நிர்வாகம் மற்றும் உலகெங்கிலும் உள்ள இலங்கை சமூகங்களுடன் உற்பத்தி ரீதியாக ஈடுபடும் வெளிநாட்டில் உள்ள இலங்கைத் தொழிலாளர்களின் நலன் தொடர்பான முக்கிய பகுதிகளை மேற்பார்வையிட்டுள்ளார்.
ஜப்பானில் உள்ள இலங்கைத் தூதரகத்தின் இரண்டாவது செயலாளராக செயற்பட்டமையே அவரது முதல் வெளிநாட்டு இராஜதந்திர பணியாகும். அதன் பின்னர், அவர் நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் சபைக்கான இலங்கையின் நிரந்தரக் தூதுக்குழுவின் முதல் செயலாளராகவும், கென்யாவிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தின் உயர்ஸ்தானிகராகவும், இத்தாலி, நோர்வே, பெல்ஜியம் (ஐரோப்பிய ஒன்றியம்) ஆகிய நாடுகளுக்கான இலங்கைத் தூதுவராகவும் மற்றும் கடைசியாக 2020 இன் இறுதியில் வொஷிங்டன் டி.சி.யில் உள்ள அமெரிக்காவுக்கான இலங்கைத் தூதுவராகவும் பணியாற்றினார். வரலாற்றுக்கு முந்தைய காலம், அரசியல் மற்றும் கலாச்சார வரலாறு மற்றும் பண்டைய காலங்களிலிருந்து இலங்கையின் சர்வதேச உறவுகளின் பரிணாமம் ஆகியவற்றை உள்ளடக்கிய ஆய்வுத் திட்டங்களை கடந்த இரண்டு ஆண்டுகளில் அவர் வழிநடத்தினார்.
முகாமைத்துவத் தகவல் முறைமையில் வணிக நிர்வாகத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றுள்ள தூதுவர் பெரேரா, பின்னர் நியூயோர்க்கில் உள்ள கொலம்பியா பல்கலைக்கழகத்தில் சர்வதேச ஆய்வுகளில் முதுகலைப் பட்டம் பெற்றார். அவர் தனது பாடசாலைக் கல்வியை கொழும்பு புனித ஜோசப் கல்லூரியில் பெற்றார்.
இலங்கைத் தூதரகம்,
டோக்கியோ
2022 நவம்பர் 23