வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் மற்றும் அமைச்சர்கள் பேரவையின் தலைவர் மாண்புமிகு கலாநிதி ஏ.கே. அப்துல் மொமன் அவர்களே,
ஐயோரா உறுப்பு நாடுகளின் மாண்புமிகு வெளிவிவகார அமைச்சர்களே,
ஐயோராவின் பொதுச் செயலாளர் மாண்புமிகு திரு. சல்மான் அல் ஃபாரிசி அவர்களே,
மேன்மை தங்கியவர்களே,
மதிப்பிற்குரிய பிரதிநிதிகளே,
கனவாட்டிகளே மற்றும் கனவான்களே,
இன்று நடைபெற்ற இந்து சமுத்திர விளிம்பு சங்கத்தின் (ஐயோரா) 22வது அமைச்சர்கள் பேரவைக் கூட்டத்தில், ஐயோராவின் துணைத் தலைவர் என்ற வகையிலும், இலங்கைப் பிரதிநிதிகள் குழுவின் தலைவர் என்ற வகையிலும் நான் அறிக்கையை வெளியிடுவதில் பெரு மகிழ்ச்சியும், கௌரவமும் அடைகின்றேன். தலைவர் அவர்களே, இந்தக் கூட்டத்தை வழிநடத்துவதில் தங்களது திறமையான தலைமைத்துவத்திற்கும், வழிகாட்டுதலுக்கும், எதிர்வரும் நோக்கங்கள் மற்றும் பணிகளை நிறைவு செய்வதற்கான தங்களது வழிகாட்டுதலுக்கும் முதலில் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன். பங்களாதேஷ் அரசாங்கம் வழங்கிய அதி சிறந்த விருந்தோம்பலுக்காக எனது தூதுக்குழுவினரின் ஆழ்ந்த பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றேன். கடந்த ஆண்டு கோவிட்-19 தொற்றுநோயால் முன்வைக்கப்பட்ட சவால்களுக்கு மத்தியில், இந்தக் கூட்டத்தை ஒழுங்கமைப்பதிலும், தொடர்ச்சியான ஐயோரா கூட்டங்களை நடாத்துவதிலுமான தங்களது பொறுப்புணர்வு, இந்த 23 உறுப்பினர்களைக் கொண்ட துடிப்பான அமைப்புக்கான பங்களாதேஷ் அரசாங்கத்தின் அர்ப்பணிப்புக்கான சிறந்த சான்றாகும். இந்தக் கூட்டத்திற்கு ஐயோரா செயலகத்தால் வழங்கப்பட்ட ஆவணங்கள் மற்றும் நிறுவன ஆதரவுகளுக்கும், தங்களது வழிகாட்டுதலுக்காக மாண்புமிகு பொதுச் செயலாளர் அவர்களுக்கும் எமது மனப்பூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
மேன்மை தங்கியவர்களே,
கனவாட்டிகளே மற்றும் கனவான்களே,
ஒரு தீவு நாடாக இருப்பதால், சமுத்திரம் ஒருபோதும் இலங்கையிலிருந்து வெகு தொலைவில் இருந்ததில்லை. உலகின் பரபரப்பான சமுத்திரப் பாதைகளின் மையத்தில் அமைந்துள்ளமையானது, புவியியல் ரீதியாக இலங்கையை இந்து சமுத்திரத்துடன் இணைக்கின்ற அதே வேளை, அதன் விதி இந்த மூலோபாய நீர்நிலையுடன் ஒன்றோடொன்று இணைக்கப்பட்டுள்ளது. பல நூற்றாண்டுகளாக, இந்து சமுத்திரம் இலங்கையின் மூலோபாய, பாதுகாப்பு மற்றும் அரசியல் வரலாற்றின் ஒரு பகுதியாக இருந்து வருகின்றது. பண்டைய காலத்திலிருந்து நவீன காலம் வரை, இந்து சமுத்திரத்தில் அமைந்திருக்கும் இலங்கையின் முக்கிய வரலாற்றுப் பாடம், உலகளாவிய வர்த்தகம், வர்த்தக மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் பெருக்கத்திற்கு மிகவும் முக்கியமானதாகும். இந்து சமுத்திரத்தில் அமைந்துள்ள நாடுகளுடனான இலங்கையின் பாரம்பரிய மற்றும் பழமையான தொடர்புகள் கி.மு. இரண்டாம் மில்லினியம் வரை செல்கின்றன. இலங்கையின் மூலோபாய புவியியல் மையமானது, வர்த்தகம் மற்றும் கலாச்சாரப் பரிமாற்றங்கள் ஆகிய இரண்டிலும் கடல்சார் பரிவர்த்தனைகளை செயற்படுத்தியமைக்காக குறைந்தபட்சம் கி.மு. 2ஆம் நூற்றாண்டுக்கு முன்பிருந்தே பல வகையான சான்றுகள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. இலங்கையின் பண்டைய கடல் வணிகம் குறித்த பல முக்கிய ஆய்வுகள், ஐரோப்பியர்கள், அரேபியர்கள், இந்தியர்கள் மற்றும் சீனர்களை இணைக்கும் 'கடல் பட்டுப் பாதை' அடிப்படையில் செழிப்பான வர்த்தகத்தை வெளிப்படுத்தியுள்ளன.
வர்த்தகத்தில் குறிப்பிடத்தக்க வெளிப்படைத்தன்மையை வெளிப்படுத்திய ஒரு நாடாக கடந்த காலத்திலிருந்து கட்டியெழுப்பப்பட்டு, இன்று நாம் இந்து சமுத்திரத்தின் முக்கிய வர்த்தக மையங்களில் ஒன்றாகத் தயாராகி நிலைநிறுத்தப்பட்டுள்ளோம். எனவே, இந்து சமுத்திரம் தொடர்பான விடயங்களில் இலங்கையின் அர்ப்பணிப்பு இலங்கையின் தற்போதைய பொருளாதார மற்றும் வெளிநாட்டுக் கொள்கையின் மையமாக உள்ளது. இந்து சமுத்திரத்தின் மையம் என்ற வகையில், உலகின் 2/3 எண்ணெய் மற்றும் கொள்கலன் ஏற்றுமதியில் அரைவாசிப் பகுதி தெற்காசியப் பிராந்தியத்திலிருந்து செல்வதால், மிக முக்கியமான கப்பல் பாதைகள் மற்றும் மையங்களில் ஒன்றாக இலங்கையின் தென் பகுதி உருவெடுத்துள்ளது. இலங்கையானது, கடல்வழித் தொடர்புகளின் பாதுகாப்பிற்கும், இந்து சமுத்திரத்தில் கடற்பயணச் சுதந்திரத்தைப் பேணுவதற்கும் முக்கியமானதாக மாறியுள்ளது. இலங்கையின் புவியியல் இருப்பிடம் மற்றும் பிராந்திய சந்தைகளுக்கான அதன் அணுகல் ஆகியன, அதன் பொருளாதார மற்றும் வர்த்தக நலன்களுக்கு அளப்பரிய அளவில் நன்மை சேர்க்கின்ற அதே வேளை, இப்பிராந்தியமானது சக்திவாய்ந்த முக்கியஸ்தர்களால் அதிகாரத்தை முன்னிறுத்துவதற்கான ஒரு தளமாகவும் உருவாகியுள்ளது.
மேன்மை தங்கியவர்களே, கனவாட்டிகளே மற்றும் கனவான்களே,
மேலும், இன்னும் முழுமையாக ஆராயப்படாமலும், தோண்டப்படாமலும், அகழ்வாராய்ச்சி செய்யப்படாமலும் உள்ள வளங்களைக் கொண்டுள்ள இந்து சமுத்திரம் இன்றும் கடலில் உள்ள கனிமங்கள், மீன்வளம் மற்றும் ஏனைய கடல் வளங்களுக்கான ஆராய்ச்சித் தளங்களில் ஒன்றாகத் திகழ்கின்றது. இப்பகுதி வேகமாக அபிவிருத்தியடைந்து வரும் பல பொருளாதாரங்களுக்குத் தாயகமாக இருப்பதால், இந்த வளர்ச்சியைத் தூண்டுவதற்கு ஆற்றல் மற்றும் ஏனைய தேவைகள் தேவைப்படுவதன் காரணமாக, சமீப காலங்களில் வளர்ந்து வரும் போக்காக இந்த 'நீர் வலயத்தில்' உலகளாவிய கவனம் அதிகரித்து வருவதை நாங்கள் காண்கின்றோம்.
இந்து சமுத்திரத்தைப் பாதுகாப்பதற்கும், அதன் கடல் வளங்களை நிலையான முறையில் பயன்படுத்துவதற்கும் இலங்கை உறுதியாக உள்ளது. பாரிய கடல் மாசுபாடு சவால்களை எதிர்கொள்வதில் எமது முயற்சிகள் எக்ஸ்-பிரஸ் பேர்ல் கப்பல் பேரழிவு போன்ற விபத்துகளின் விளைவாக உருவாவதுடன், துரதிர்ஷ்டவசமாக இது மிகப்பெரிய அளவில் இப்பகுதியை சீர்குலைத்தது. எக்ஸ்-பிரஸ் பேர்ல் கப்பல் சம்பவம் நவீன காலத்தில் இலங்கை எதிர்கொண்ட மிக மோசமான கடல்சார் பேரழிவாகும். கப்பலில் சுமார் 325 மெட்ரிக் தொன் எரிபொருளைத் தவிர, அபாயகரமான பொருட்களுடன் கூடிய சரக்குகள் உட்பட கிட்டத்தட்ட 1,500 கொள்கலன்கள் இருந்தன. குறித்த பேரழிவானது, பிளாஸ்டிக் துகள்கள், அபாயகரமான மற்றும் தீங்கு விளைவிக்கும் பொருட்களை உள்ளடக்கிய உலகின் மிகப்பெரிய கப்பல் பேரழிவாக கருதப்படுகின்றது. சம்பவத்தின் புவியியல் எல்லை அதன் வளரும் தன்மையைக் கொண்டு அறியப்படவில்லை. பிளாஸ்டிக் துகள் மாசுபாட்டின் கணிசமான விகிதம் பல தசாப்தங்களுக்கு கடலில் திரட்டப்படும். இந்தத் துகள்கள் இந்து சமுத்திரத்தின் கடற்கரையோரங்களில் நிலச்சரிவை ஏற்படுத்தும் என மாதிரி ஆய்வுகள் கூறுகின்றன. இச்சம்பவத்தைத் தொடர்ந்து எமது கடல் மாசுபடாமல் தூய்மையாக இருப்பதை உறுதிசெய்வதற்காக, கணிசமான எண்ணிக்கையிலான திட்டங்களை செயற்படுத்தியுள்ளோம். இந்தப் பேரழிவின் எதிர்மறையான தாக்கத்தைக் குறைப்பதற்காக கடல் மாசுபாட்டைக் கையாளும் மற்றும் நிவர்த்தி செய்யும் பல நாடுகள் மற்றும் சர்வதேச நிறுவனங்களுடன் நாங்கள் பணியாற்றி வருகின்றோம்.
தலைவர் அவர்களே, மேன்மை தங்கியவர்களே, கனவாட்டிகளே மற்றும் கனவான்களே,
ஐயோரா மற்றும் இந்து சமுத்திரத்தின் பிராந்தியம் ஆகியவற்றிலான இலங்கையின் நலன்கள் நாட்டிற்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை என்பதை நான் வலியுறுத்த விரும்புகின்றேன். இந்து சமுத்திரத்தின் உயரும் முக்கியத்துவத்திற்கு மிகவும் பொருத்தமானதாகவும் பொருந்தக்கூடியதாகவும் இருக்கும் வகையில் அமைப்பின் நோக்கத்தை மேலும் விரிவுபடுத்துவதற்கும் உயர்த்துவதற்குமான உறுதியான நம்பிக்கையுடன் அடுத்த ஆண்டு ஐயோராவின் தலைமைப் பதவியை ஏற்றுக் கொள்வதற்கு முயற்சிக்கின்றோம். ஐயோரா ஒரு அமைப்பாக நீண்ட தூரம் வந்துள்ளது. இந்து சமுத்திரம் மற்றும் இந்து சமுத்திரத்தின் நிலையான பயன்பாடு தொடர்பான அனைத்து விடயங்களையும் கலந்துரையாடுவதற்காக பல்வேறு நாடுகளின் கூட்டத்தை ஒரே மேடையின் கீழ் கொண்டு வருவதற்கான அதன் திறனை ஐயோரா நிரூபித்துள்ளது. இந்த அமைப்பின் செயலில் அங்கம் வகிக்கும் இலங்கை, அனைத்து உறுப்பு நாடுகளுடனும் மேலும் தொடர்பு கொள்வதற்கும், இந்த அமைப்பின் மேம்பாடு மற்றும் வெற்றிக்காக திறம்பட பங்களிப்பதற்கும் ஆவலுடன் எதிர்பார்க்கின்றது.
மேன்மை தங்கியவர்களே, கனவாட்டிகளே மற்றும் கனவான்களே,
இன்று, உலகம் இணையற்ற அளவிலான பொருளாதார சிக்கல்களுக்கு உட்பட்டுள்ளது. அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவு மற்றும் எரிசக்தி செலவுகள் மற்றும் நாடுகளிடையேயான கடன் நெருக்கடி ஆகியவை இலங்கை போன்ற நாடுகளை முன்னெப்போதும் இல்லாத பொருளாதார அபாயங்களுக்கும் சவால்களுக்கும் தள்ளியுள்ளன. இந்த அடிப்படையில், தற்போதைய உலகப் பொருளாதார நெருக்கடிக்கு ஒரு தீர்வாக, நாடுகளுக்கிடையேயான பொருளாதார ஒத்துழைப்புக்கு ஏற்றவாறு ஐயோரா தனது பணிகளின் நிகழ்ச்சி நிரலை மீள் வரையறை செய்து கொள்ளலாம். இந்து சமுத்திரத்தைப் பொருளாதார ஒத்துழைப்புக்கு மையமாக மாற்றும் அதே வேளையில், நாடுகளுக்கிடையேயான பொருளாதார ஒத்துழைப்பில் அதன் செயற்பாடுகளை விரைவுபடுத்துவதற்கான கட்டமைப்பை ஐயோரா உருவாக்க முடியும். இந்த வலயத்தில் எமது பொதுவான நிகழ்ச்சி நிரலை மேம்படுத்துவதற்காக வர்த்தகம் மற்றும் பொருளாதார ஒத்துழைப்புக்கான நாடுகளுடன் இணைந்து பணியாற்ற ஆர்வத்துடன் காத்திருக்கின்றோம்.
நிறைவாக, சமூக, கலாச்சார, புவியியல், பொருளாதாரம் மற்றும் அரசியல் ரீதியாக பலதரப்பட்ட நாடுகளின் குழுக்களை ஐயோரா ஒரே தளத்தின் கீழ் ஒன்றிணைக்கின்றது என்பதை மீண்டும் ஒருமுறை வலியுறுத்த விரும்புகின்றேன். எமது நாடுகளின் அபிவிருத்தி மற்றும் முன்னேற்றத்திற்காக திறம்பட செயற்படும முகமாக, எமது அனைத்து யோசனைகளையும் தரிசனங்களையும் ஒருங்கிணைத்தால், இந்த தனித்துவமான மற்றும் விமர்சன ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த தளம் இந்து சமுத்திரத்தின் எதிர்காலத்தை மாற்றியமைக்கும். தலைமைச் செயலகத்தில் பங்களாதேஷின் திறமையான தலைமைத்துவம் மற்றும் வழிகாட்டுதலில், பொதுச் செயலாளரின் கீழ், இந்த முயற்சிகள் மற்றும் அபிலாஷைகள் நனவாகி அடையப்படும் என்பதிலும், இதன் மூலம் 2.7 பில்லியனுக்கும் அதிகமான மக்கள்தொகை கொண்ட 23 உறுப்பினர் நாடுகளின் அனைத்து மக்களும் பரஸ்பரம் பயனடைவார்கள் என்பதிலும் நான் உறுதியாகவும், நம்பிக்கையுடனும் இருக்கின்றேன்.
உங்கள் அன்பான கவனத்திற்காக நான் எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.