2022 அக்டோபர் 19ஆந் திகதி வொஷிங்டன் டி.சி.யில் உள்ள மெக்சிகன் கலாச்சார மையத்தில் நடைபெற்ற முறையான விழாவில், வொஷிங்டன் டி.சி.யில் வதியும் மெக்சிகோவிற்கான இலங்கைத் தூதுவராக தன்னை நியமனம் செய்யும் நற்சான்றிதழ் கடிதத்தின் பிரதியை தூதுவர் மகிந்த சமரசிங்க அமெரிக்காவிற்கான மெக்சிகோ தூதுவர் எஸ்டெபான் மொக்டேசுமாவிடம் கையளித்தார்.
கையளிப்பு வைபவத்தின் பின்னர் நடைபெற்ற சந்திப்பில், தூதுவர் சமரசிங்க, பரஸ்பர நலனுக்காக இரு நாடுகளுக்கிடையிலான உறவுகளை மேலும் உயரத்திற்கு கொண்டு செல்வதற்கான கடின உழைப்பிற்கும், அவ்வுறவுகளை புத்துயிர் பெறச் செய்வதற்குமான தனது உறுதியான உறுதிப்பாட்டை வெளிப்படுத்தினார். தற்போது, இலங்கைக்கு சாதகமான வர்த்தக சமநிலையுடன் இலங்கை உற்பத்திகளுக்கான 15வது ஏற்றுமதி இடமாக மெக்சிகோ திகழ்வதாகவும், எதிர்காலத்தில் இரு நாடுகளுக்கும் இடையிலான முதலீடு மற்றும் வர்த்தக வாய்ப்புக்களை மேலும் விரிவுபடுத்துவதில் அதிக கவனம் செலுத்தப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார். இலங்கையில் நிலவும் நிதித் தடைகள் மற்றும் அது தொடர்பான அபிவிருத்திகளை விளக்கிய தூதுவர் சமரசிங்க, மெக்சிகோ உட்பட அதன் நம்பகமான இருதரப்பு மற்றும் சர்வதேசப் பங்காளிகளின் ஆதரவுடன் தற்போதைய சவால்களை வெற்றிகொள்வதற்கான இலங்கை அரசாங்கத்தின் அர்ப்பணிப்பை வலியுறுத்தினார். மேலும், ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் மெக்சிகோ அங்கத்துவம் பெற்றுள்ள நிலையில், மனித உரிமைகளை மேம்படுத்துதல் மற்றும் பாதுகாத்தல் மற்றும் இலங்கையில் நல்லிணக்கத்தை நோக்கி எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அண்மைய முன்னேற்றங்கள் குறித்து தூதுவர் விளக்கினார்.
தூதுவர் சமரசிங்க மெக்சிகோ ஜனாதிபதியிடம் தனது நற்சான்றிதழ்களை சமர்ப்பிக்கும் முறையான வைபவம் விரைவில் ஏற்பாடு செய்யப்படும் என்றும், இதற்கிடையில், இன்று முதல், தூதுவர் சமரசிங்க மெக்சிகோவிற்கான இலங்கைத் தூதுவராக தனது கடமைகளை நிறைவேற்றுவதில் சுதந்திரமாக செயற்பட முடியும் என்றும் தூதுவர் மொக்டேசுமா தெரிவித்தார். மெக்ஸிகோ, வலுவான விநியோகச் சங்கிலியுடன், அமெரிக்காவுடனும், பிராந்தியத்தில் உள்ள பல முக்கிய பொருளாதாரங்களுடனும் வலுவான பொருளாதார பங்காளித்துவத்தைப் பேணி வருவதாகக் குறிப்பிட்ட அவர், பிராந்தியத்தில் தனது இருப்பை விரிவுபடுத்துவதற்கு மெக்சிகோவின் இருதரப்பு மற்றும் பல்தரப்பு வர்த்தகத் தளங்களைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு இலங்கையைக் கேட்டுக்கொண்டார்.
வொஷிங்டன் டி.சி. யில் உள்ள இலங்கை மற்றும் மெக்சிகோ தூதரகங்களின் சிரேஷ்ட இராஜதந்திர ஊழியர்களும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.
இலங்கைத் தூதரகம்,
வொஷிங்டன் டி.சி.
2022 அக்டோபர் 21