இராஜாங்க அமைச்சர் தாரக்க பாலசூரிய துபாயில் உள்ள இலங்கையின் துணைத்   தூதரக ஊழியர்களுடன் சந்திப்பு

இராஜாங்க அமைச்சர் தாரக்க பாலசூரிய துபாயில் உள்ள இலங்கையின் துணைத்   தூதரக ஊழியர்களுடன் சந்திப்பு

வெளிநாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் தாரக்க பாலசூரிய, தனது குறுகிய பயணத்தின் போது துபாயில் உள்ள இலங்கையின் துணைத் தூதரகத்தின் ஊழியர்களை 2022 ஒக்டோபர் 11 ஆந் திகதி சந்தித்தார்.

துபாயில் உள்ள துணைத் தூதரகத்தை வந்தடைந்தவுடன், இராஜாங்க அமைச்சர்  பாலசூரியவை, துணைத் தூதுவர் மற்றும் பணியாளர்கள் அன்புடன் வரவேற்றனர்.

துணைத் தூதரகத்தின் அதிகாரிகளிடம் உரையாற்றிய இராஜாங்க அமைச்சர் பாலசூரிய, துபாய் மற்றும் வடக்கு எமிரேட்ஸில் வசிக்கும் இலங்கையர்களுக்கு திறமையான சேவையை வழங்குவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். துணைத் தூதரகத்தின் சேவைகளுக்கு  தனது பாராட்டுகளைத் தெரிவித்த அவர், தாய்நாட்டிற்கு அர்ப்பணிப்புடனும் உறுதியுடனும் சேவையாற்றுமாறு ஊழியர்களிடம் கேட்டுக்கொண்டார்.

ஐக்கிய அரபு இராச்சியத்தில் இலங்கையர்களுக்கான வேலை வாய்ப்புக்களை அதிகரிப்பதற்கான வழிகளை ஆராய்வதன் முக்கியத்துவத்தை இராஜாங்க அமைச்சர் பாலசூரிய எடுத்துரைத்தார். ஐக்கிய அரபு இராச்சியத்தில் வேலை வாய்ப்புகளைத் தேடும் இலங்கையர்கள் எதிர்கொள்ளும் சவால்களை எதிர்கொள்வதற்காக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து  விரைவான நடவடிக்கை எடுப்பதன் முக்கியத்துவத்தையும் அவர் சுட்டிக் காட்டினார்.

தற்போதைய இலங்கைப் பொருளாதாரத்தை புத்துயிர் பெறச் செய்வதற்கான சாத்தியமான உத்திகள் குறித்து கவனத்தை ஈர்த்த இராஜாங்க அமைச்சர் பாலசூரிய, ஐக்கிய அரபு இராச்சிய சந்தையில் இலங்கை சுற்றுலாவை ஊக்குவிப்பதன் முக்கியத்துவத்தையும், இருதரப்பு  வர்த்தகம் மற்றும் படைப்பாற்றல் தொழில்துறை, தகவல் தொழில்நுட்பத் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் முதலீடுகளை வலுப்படுத்துவது குறித்தும் விரிவாகக் குறிப்பிட்டார்.

 

இலங்கையின் துணைத் தூதரகம்,

துபாய்

2022 அக்டோபர் 13

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close