இலங்கை வர்த்தக சபையின் தலைவர் மற்றும் பணிப்பாளர் சபை உறுப்பினர்களை, வெளிநாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் தாரக்க பாலசூரிய, தனது குறுகியதொரு விஜயத்தின் போது துபாய் மற்றும் வடக்கு எமிரேட்ஸில் வைத்து 2022 ஒக்டோபர் 11ஆந் திகதி சந்தித்தார்.
இக்கூட்டத்தில் உரையாற்றிய இராஜாங்க அமைச்சர் பாலசூரிய, நாட்டில் நிலவும் பொருளாதார நிலைமை மற்றும் நிலைமையை ஸ்திரப்படுத்துவதற்காக அரசாங்கம் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் குறித்து விளக்கமளித்தார்.
இலக்காகக் கொள்ளப்படும் குழுக்களுக்கான சமூக ஊடக பிரச்சாரங்கள் உட்பட பல்வேறு வகையான பிரச்சாரங்கள் மூலம் ஐக்கிய அரபு இராச்சியத்தின் சந்தையில் இலங்கை சுற்றுலாவை ஊக்குவிப்பதன் முக்கியத்துவத்தை இராஜாங்க அமைச்சர் வலியுறுத்தினார். பிரேரணையை உறுதிப்படுத்தும் அதே வேளையில், இலங்கை வர்த்தக சபை, அதிகபட்ச நன்மைகளைப் பெறுவதற்காக இத்தகைய நிகழ்வுகளை மூலோபாய ரீதியாக ஒழுங்கமைப்பதன் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டியது.
இலங்கையில் கிராபைட், இல்மனைட், பொஸ்பரஸ் மற்றும் தோரியம் போன்ற எளிதில் கிடைக்கக்கூடிய கனிமங்களைக் குறிப்பிட்டு, வளப் பயன்பாட்டை மேம்படுத்துவதற்காக பெறுமதி சேர்க்கப்பட்ட தொழில்களில் முதலீடு செய்வதன் முக்கியத்துவத்தை இராஜாங்க அமைச்சர் பாலசூரிய வலியுறுத்தினார்.
மருந்துகள், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் தகவல் தொழில்நுட்பம் போன்ற தொழில்களில் முதலீட்டு வாய்ப்புக்களை அதிகரிப்பதற்கான உத்திகள் குறித்து கலந்துரையாடப்பட்டது. குறிப்பாக இரத்தினம் மற்றும் ஆபரணங்கள், ஆடைகள், அழுகக்கூடிய பொருட்கள், பட்டிக் மற்றும் கைத்தறி போன்ற துறைகளில் வர்த்தகத்தை மேலும் உயர்த்துவதற்கான வழிகள் மற்றும் வழிமுறைகள் குறித்து இரு தரப்பினரும் கலந்துரையடினர்.
ஐக்கிய அரபு இராச்சியத்தின் பன்முகப்படுத்தப்பட்ட பொருளாதாரம், தற்போது பிராந்தியத்தில் வேகமாக அபிவிருத்தியடைந்து வரும் பொருளாதாரம் குறித்து குறிப்பிடுகையில், ஐக்கிய அரபு இராச்சியத்தின் அனுபவங்களிலிருந்து இலங்கை வர்த்தக சபை கற்றுக்கொள்வதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தியது.
ஐக்கிய அரபு இராச்சியத்தில் உள்ள இலங்கை சமூகத்திற்கு வழங்கப்படும் நல்லெண்ணம், நிலையான ஆதரவு மற்றும் உதவிகளுக்காக இலங்கை வர்த்தக சபைக்கு இராஜாங்க அமைச்சர் பாலசூரிய தனது பாராட்டுகளைத் தெரிவித்தார். கோவிட்-19 திருப்பி அனுப்பும் செயன்முறையின் போது அவர்களின் விலைமதிப்பற்ற ஆதரவை அவர் குறிப்பாகப் பாராட்டினார்.
துபாய் மற்றும் வடக்கு எமிரேட்ஸில் உள்ள இலங்கையின் துணைத் தூதரகத்துடன் இணைந்து 1991 இல் உருவாக்கப்பட்ட இலங்கை வர்த்தக சபை, தற்போது துபாய் வர்த்தக மற்றும் கைத்தொழில் சம்மேளனத்தின் கீழ் பதிவுசெய்யப்பட்ட ஒரு அமைப்பாகும். இது ஐக்கிய அரபு இராச்சியத்தில் உள்ள இலங்கை தொழில்முனைவோர் மற்றும் சிரேஷ்ட நிபுணர்களைக் கொண்டுள்ளதுடன், இரு நாடுகளுக்கும் இடையில் வர்த்தகம், முதலீடு, தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு, வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாவை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இராஜாங்க அமைச்சருடன் வெளிநாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சினதும், வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் பொது இராஜதந்திரப் பிரிவினதும் பதில் மேலதிக செயலாளர் சித்தாரா கான் இணைந்திருந்தார். துபாய் மற்றும் வடக்கு எமிரேட்ஸிற்கான இலங்கையின் துணைத் தூதுவர் நளிந்த விஜேரத்ன மற்றும் சான்சரியின் தலைவர் தினிதி வீரசேன ஆகியோரும் இந்த சந்திப்பில் கலந்துகொண்டனர்.
இலங்கையின் துணைத் தூதரகம்,
துபாய்
2022 அக்டோபர் 13