தற்போது இலங்கைக்கு விஜயம் செய்துள்ள யுனிசெஃப்பின் தெற்காசியாவிற்கான பிராந்தியப் பணிப்பாளர் திரு. ஜோர்ஜ் லாரியா-அட்ஜீ, 2022 ஆகஸ்ட் 24 ஆந் திகதி வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் அலி சப்ரியை மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.
இலங்கைக்கு யுனிசெஃப் வழங்கிய ஒத்துழைப்பு மற்றும் உதவிகளை வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் சப்ரி பாராட்டினார். குழந்தைப் பருவ வளர்ச்சி, உடல்நலம் மற்றும் ஊட்டச்சத்து, நோய்த்தடுப்பு, பாதுகாப்பான நீர் மற்றும் சுத்திகரிப்பு, கல்வி மற்றும் திறன்களை மேம்படுத்துதல், சமூக நலக் கொள்கைகள் மற்றும் கோவிட்-19 க்கு பிரதிபலித்தல் தொடர்பான திட்டங்களுக்கு இதன்போது குறிப்பாக கவனம் செலுத்தப்பட்டது. நாட்டிலுள்ள யுனிசெஃப் திட்டங்கள், குறிப்பாக தற்போதைய சவால்களின் போது இலங்கைக்கு உதவுவதற்காக மேற்கொள்ளப்படும் முயற்சிகள் குறித்து பிராந்தியப் பணிப்பாளர் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் சப்ரிக்கு விளக்கமளித்தார்.
2023ஆம் ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ள புதிய யுனிசெஃப் வேலைத்திட்டத்தை அமைச்சர் வரவேற்றார். இலங்கைக்கான மனித அபிவிருத்திச் சுட்டெண் பிராந்திய சராசரியை விடஅதிகமாக இருப்பதால், இலவச சுகாதாரம், கல்வி மற்றும் ஏனைய சமூகப் பாதுகாப்பு நடவடிக்கைகளை வழங்குவதில் இலங்கை ஒரு அளவுகோலாக உள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்தார். இலங்கையில் உள்ள சிறுவர்களின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வுக்காக இலங்கை அரசாங்கம் எடுத்துள்ள முயற்சிகளைப் பாராட்டிய பிராந்தியப் பணிப்பாளர், இலங்கைக்கான யுனிசெஃப்பின் தொடர்ச்சியான ஒத்துழைப்பையும் உதவியையும் உறுதியளித்தார்.
வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு,
கொழும்பு
2022 ஆகஸ்ட் 26