ஐக்கிய அரபு இராச்சியத்தின் தூதுவர் காலித் நாசர் அல்-அமெரி வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் அலி சப்ரியை இன்று வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சில் வைத்து சந்தித்தார்.
இலங்கையின் தற்போதைய பொருளாதார நிலைமை மற்றும் இலங்கைப் பொருளாதாரத்தின் ஸ்திரத்தன்மையை அதிகரிப்பதற்காக அரசாங்கம் இதுவரை மேற்கொண்ட உறுதியான நடவடிக்கைகள் குறித்து வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் அலி சப்ரி தூதுவருக்கு விளக்கமளித்தார். விவசாயம், வர்த்தகம் மற்றும் முதலீடு ஆகிய துறைகளில் இலங்கையுடன் பரந்த ஒத்துழைப்பில் ஈடுபடுமாறு ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் அழைப்பு விடுத்தார்.
இலங்கையின் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சராக நியமிக்கப்பட்டமைக்காக வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சருக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்த தூதுவர், இலங்கை - ஐக்கிய அரபு இராச்சிய இருதரப்பு உறவின் முக்கியத்துவத்தை வலியுறுத்தியதுடன், இந்த நேரத்தில் இலங்கைக்கு சாத்தியமான அனைத்து ஆதரவையும் வழங்குவதாக உறுதியளித்தார்.
வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு
கொழும்பு
2022 ஆகஸ்ட் 10