லு போர்கெட் பிரான்ஸில் உள்ள சர்வதேச பௌத்த நிலையத்தின் பிரதம மதகுருவான வணக்கத்திற்குரிய பரவஹேர சந்திரரதன தேரரின் அனுசரணையில் 2022 ஜூலை 30ஆந் திகதி நடைபெற்ற விசேட நிகழ்வில், இலங்கையின் மிஹிந்தலை ரஜமஹா விகாரையின் பிரதமகுரு வணக்கத்துக்குரிய தம்மரதன நாயக்க தேரரிடம் இருந்து கையளிக்கப்பட்ட பௌத்த நினைவுச்சின்னங்கள் பிரான்சின் பௌசி செயின்ட் ஜோர்ஜஸில் உள்ள லாவோஸ் நாட்டின் வேலுவனாராம பௌத்த விகாரையில் கையளிக்கப்பட்டன.
பிரான்ஸ் குடியரசின் இலங்கைத் தூதுவரும் யுனெஸ்கோவிற்கான நிரந்தரப் பிரதிநிதியுமான பேராசிரியை ஷானிகா ஹிரிம்புரேகம இந்த விழாவில் உரையாற்றுகையில், இலங்கையில் இருந்து பிரான்ஸிடம் உள்ள புனித நினைவுச்சின்னங்கள் கையளிப்பதன் மூலம் இரு நாடுகளுக்கும் இடையில் நிலவும் பௌத்த மற்றும் கலாசார உறவுகள் மேலும் வலுவடையும் எனக் குறிப்பிட்டார். மேலும், கௌதம புத்தரின் போதனைகளைப் பரப்புவதற்கும், மனித குலத்திற்கு சாநதி மற்றும் அமைதியை ஏற்படுத்துவதற்கும் இலங்கை அனைத்து உதவிகளையும் செய்யும் என்றும் தூதுவர் தெரிவித்தார். இது சமூகங்களுக்கிடையில் பௌத்த ஒத்துழைப்பை மேம்படுத்தும் ஒரு வரலாற்று நிகழ்வு என வணக்கத்திற்குரிய பரவஹேர சந்திரரதன தேரர் குறிப்பிட்டார்.
லாவோஸ் நாட்டின் வேலுவனாராம பௌத்த விகாரையின் பிரதமகுரு, இலங்கை அரசாங்கத்திற்கு மிகவும் புனிதமான நினைவுச்சின்னங்களை வழங்கியமைக்காக நன்றி தெரிவித்ததோடு, லாவோஸ் பக்தர்கள் புனித நினைவுச்சின்னங்களை வழிபட ஆவலுடன் காத்திருப்பதாக உறுதியளித்தார்.
இலங்கையின் சர்வதேச பௌத்த நிலையம் மற்றும் லாவோஸின் வேலுவனாராம பௌத்த விகாரையைச் சேர்ந்த பௌத்த பிக்குகள் மற்றும் லாவோ மற்றும் இலங்கை பௌத்த பக்தர்களும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
இலங்கை தூதரகம்,
பாரிஸ்
2022 ஆகஸ்ட் 08