புதுடில்லியில் உள்ள இலங்கைக்கான ஒரே நேரத்தில் அங்கீகாரம் பெற்ற இராஜதந்திரத் தூதரகங்களுடனான தொடர் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, இந்தியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட, லத்தீன் அமெரிக்க மற்றும் கரீபியன் தூதரகத் தலைவர்கள் குழுவுடன் 2022 ஜூலை 19ஆந் திகதி கலந்துரையாடி, இலங்கையின் தற்போதைய அபிவிருத்திகள் குறித்து அவர்களுக்கு விளக்கமளித்தார்.
இந்த தூதுக்குழுவின் தலைவர்கள் குழுவில், புதுடில்லியில் உள்ள இலங்கைக்கான ஒரே நேரத்தில் அங்கீகாரம் பெற்ற அல்லது நியமிக்கப்பட்ட ஏழு தூதுவர்கள், ஒரு உயர்ஸ்தானிகர் மற்றும் நான்கு தூதரகப் பொறுப்பாளர்களும் உள்ளடங்கியிருந்தனர்.
உயர்ஸ்தானிகர் மொரகொட, புதுடில்லியில் பதவியேற்ற பிறகு, ஒரே நேரத்தில் அங்கீகாரம் பெற்ற தூதரகத் தலைவர்களுடன் இந்த முறையில் உரையாடுவது இது நான்காவது முறையாகும். கடைசியாக, அவர் 2022 ஜூன் 21ஆந் திகதி பதினைந்து ஐரோப்பிய தூதரகத் தலைவர்கள் குழுவுடன் கலந்துரையாடினார்.
ஆர்ஜென்டினா, சிலி, கொலம்பியா, ஈக்வடார், எல் சால்வடார், மெக்சிகோ, உருகுவே ஆகிய நாடுகளின் தூதுவர்கள், ஜமைக்காவின் உயர்ஸ்தானிகர் மற்றும் டொமினிக்கன் குடியரசு, பெரு, சுரினாம் மற்றும் வெனிசுலா ஆகிய நாடுகளின் தூதரகப் பொறுப்பாளர்கள் இந்த சந்திப்பில் கலந்து கொண்டனர்.
தூதரகத் தலைவர்களை வரவேற்ற உயர்ஸ்தானிகர் மொரகொட, அந்தந்த நாடுகளுடனான இலங்கையின் உறவுகளை மேலும் வலுப்படுத்துவதிலான தனது ஆர்வத்தை வெளிப்படுத்தினார். அவர்களது கடமைகளை நிறைவேற்றுவதற்கு தனது அலுவலகத்தின் அனைத்து ஆதரவையும் அவர் உறுதியளித்தார்.
இலங்கையின் தற்போதைய பொருளாதார மற்றும் அரசியல் முன்னேற்றங்கள், குறிப்பாக இலங்கையின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்துதல் மற்றும் மீள்வதற்கான திட்டங்கள் குறித்து அவர் தூதுக்குழுத் தலைவர்களுக்கு விளக்கினார். உயர்ஸ்தானிகர் மொரகொடவிடம் தூதரகத் தலைவர்கள் பல கேள்விகளை முன்வைத்ததைத் தொடர்ந்து விரிவான கலந்துரையாடல் இடம்பெற்றது. இந்த ஊடாடும் அமர்வில் இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தின் இராஜதந்திர ஊழியர்களும் கலந்து கொண்டனர்.
புதுடில்லியில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம் ஒரே நேரத்தில் அங்கீகாரம் பெற்ற 94 வெளிநாட்டுத் தூதுவர்களுக்கும் இலங்கையின் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சுக்கும் இடையிலான முக்கிய ஒருங்கிணைப்புப் புள்ளியாக செயற்படுகின்றது.
இலங்கை உயர்ஸ்தானிகராலயம்,
புதுடில்லி
2022 ஜூலை 21