இந்தோனேசியாவிலுள்ள இலங்கைத் தூதரகம், இலங்கை சுற்றுலா ஊக்குவிப்புப் பணியகத்துடன் இணைந்து, வாரந்தோறும் 9,842 பேரும், சனிக்கிழமையில் 10,470 பேரும் பயணிக்கின்ற ஜகார்த்தா எம்.ஆர்.டி. (பாரிய விரைவுப் போக்குவரத்து) அமைப்பின் முக்கிய மையமான ஜகார்த்தாவில் உள்ள புந்தரன் எச்.ஐ. எம்.ஆர்.டி. நிலையத்தில் 2022 ஜூன் 24 - 25 வரை இலங்கை சுற்றுலா ஊக்குவிப்பு நிகழ்வை ஏற்பாடு செய்தது.
இந்தோனேசிய மக்கள் மத்தியில் ஒரு சாத்தியமான சுற்றுலாத் தலமாக இலங்கை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக தூதரகம் இந்த நிகழ்வை ஏற்பாடு செய்துள்ளது. வரலாற்று நினைவுச்சின்னங்கள், இயற்கை அதிசயங்கள், இலங்கை ஏற்றுமதிகள் மற்றும் சுவையான உணவு வகைகளை சித்தரிக்கும் ஐம்பது புகைப்படங்கள் காட்சிப்படுத்தப்பட்டதுடன் பார்வையாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் வகையில் ஊடாடும் சாவடியும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்தோனேசியாவின் சுற்றுலா மற்றும் ஆக்கப்பூர்வமான பொருளாதார அமைச்சர் சன்டியாகோ யூனோ இந்த நிகழ்விற்கு விஜயம் செய்ததுடன், இலங்கையை 'கண்டிப்பாகப் பார்க்க வேண்டிய' இடமாக அதிக அக்கறை காட்டினார்.
திறப்பு விழாவில், இந்தோனேசியா மற்றும் ஆசியானுக்கான இலங்கைத் தூதுவர் யசோஜா குணசேகர, விவேகமான பயணிகளுக்கு இலங்கை வழங்கும் அனுபவங்களின் பன்முகத்தன்மையை எடுத்துரைத்தார். பி.டி. எம்.ஆர்.டி. ஜகார்த்தாவின் செயற்பாடு மற்றும் பராமரிப்புப் பணிப்பாளர் முஹம்மது எஃபென்டி, புந்தரன் எச்.ஐ. எம்.ஆர்.டி. நிலையத்தில் நிகழ்வை ஏற்பாடு செய்தமைக்காக தூதரகத்திற்கு பாராட்டுக்களைத் தெரிவித்தார்.
இலங்கை தூதரகம்,
இந்தோனேசியா
2022 ஜூலை 04