அவுஸ்திரேலியாவின் விக்டோரியா, தெற்கு அவுஸ்திரேலியா மற்றும் தஸ்மேனியா ஆகிய மாநிலங்களில் உளள பெருமளவிலான இலங்கையர்களுக்கு திறமையான தூதரக சேவைகளை வழங்குவதற்காக, மெல்பேர்னில் உள்ள இலங்கையின் துணைத் தூதரகம் டிஜிட்டல் தூதரக எதிர் முகாமைத்துவ அமைப்பை நடைமுறைப்படுத்தியுள்ளது. தூதரகத்தின் செயற்பாட்டு செலவ னங்களைக் குறைப்பதற்காக தொடங்கப்பட்ட இந்த 'செயலி', சிறந்த சேவையை வழங்கி, செலவீனங்களைக் குறைக்கும் அரசாங்கத்தின் கொள்கைக்கு ஏதுவானதாக அமைகின்றது.
சிறிய பணியாளர் தொகுதியைக் கொண்டுள்ள மெல்பேர்னில் உள்ள துணைத் தூதரகமானது, மாதத்திற்கு சுமார் 150 கடவுச்சீட்டு விண்ணப்பங்கள், பிறப்புப் பதிவிற்கான 50 விண்ணப்பங்கள், 100 சான்றொப்பங்கள்,100 இரட்டைக் குடியுரிமை விண்ணப்பங்கள் போன்றவற்றைப் பெற்றுக் கொள்கின்றது. இந்த புதிய முறையின் மூலம், விண்ணப்பதாரர்கள் அலுவலகத்திற்குச் செல்வதற்கான முன் நியமனங்களைப் பெற முடியும் அதே வேளை, அவர்களின் விண்ணப்பங்களின் நிலையை தாங்களாகவே சரிபார்த்துக் கொள்ளவும் முடியும். இது கைமுறையாகப் பதிவு செய்யும் பணிகளை நீக்கியுள்ளதால், விண்ணப்ப செயலாக்க நேரத்தை வெகுவாகக் குறைத்துள்ளது.
இந்த செயலி தொடங்கப்பட்டதன் மூலம், பின் அலுவலகச் செயலாக்கம் மற்றும் விண்ணப்பங்களை அனுப்புதல், அறிக்கைகளை உருவாக்குதல் மற்றும் விண்ணப்பதாரர்களுக்கு அவர்களின் விண்ணப்பங்களின் முன்னேற்றம் குறித்துத் தெரியப்படுத்துதல் ஆகியவை வேகமாகவும் திறமையாகவும் இடம்பெறுகின்றன. இந்த அமைப்பில் தபால் மூலம் சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பங்களும் அடங்கும்.
அரசாங்க கொள்முதல் நடைமுறைகளைப் பின்பற்றி, இந்த மென்பொருள் செயலியை உருவாக்குவதற்காக இலங்கையின் மென்பொருள் உருவாக்குனரான 'லூன்ஸ் லேப் (பிரைவேட்) லிமிடெட்' தெரிவு செய்யப்பட்டதுடன், இது வெளிநாடுகளில் உள்ள எந்தவொரு இலங்கைத் தூதரகத்திலும் பயன்படுத்தப்படும் முதல் வகையாகும். துணைத் தூதுவர் கபில பொன்சேகாவின் வழிகாட்டுதலின் கீழ், இந்த கடினமான டிஜிட்டல் மாற்றத்தை சாத்தியமாக்கிய அர்ப்பணிப்புள்ள ஊழியர்களுடன் இணைந்து கொன்சல் டயானா பெரேராவினால் இந்த முயற்சி முன்னெடுக்கப்பட்டது.
இலங்கையின் துணைத் தூதரகம்,
மெல்போர்ன்
2022 ஜூன் 15