சென்னையில் உள்ள இலங்கையின் பிரதி உயர்ஸ்தானிகராலயத்தால் 'இலங்கைக்கு ஆதரவளிக்கவும்' நிகழ்வு ஏற்பாடு

 சென்னையில் உள்ள இலங்கையின் பிரதி உயர்ஸ்தானிகராலயத்தால் ‘இலங்கைக்கு ஆதரவளிக்கவும்’ நிகழ்வு ஏற்பாடு

சென்னையில் உள்ள இலங்கையின் பிரதி உயர் ஸ்தானிகராலயம் இலங்கைக்கு உணவு மற்றும் மருந்துகள் போன்ற அத்தியாவசியப் பொருட்களின் விநியோகத்தை உறுதி செய்வதற்காக நிதியுதவி மூலம் இலங்கையின்  உணவு மற்றும் சுகாதார பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கத்துடன் 'இலங்கைக்கு ஆதரவளிக்கவும்' என்ற திட்டத்தை ஏற்பாடு செய்தது.

2022 மே 27ஆந் திகதி சான்சரி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியானது, இலங்கையின் வணிகப் பிரமுகர்கள், சமூக சேவையாளர்கள் மற்றும் நலன் விரும்பிகளுக்காக நடாத்தப்பட்டது. இலங்கை எதிர்கொள்ளும் தற்போதைய நெருக்கடி தற்காலிகமானது எனவும், இந்த பின்னடைவுகளை கடந்து நாடு இயல்பு நிலைக்கு திரும்பும் எனவும் பிரதி உயர்ஸ்தானிகர் கலாநிதி டி. வெங்கடேஸ்வரன் தெரிவித்தார். சார்க் மற்றும் உலகெங்கிலும் உள்ள ஏனைய நட்பு நாடுகளின் உதவியை குறிப்பிட்ட அவர், இலங்கை விரைவாக மீட்கப்படும் என நம்பிக்கை வெளியிட்டார். இலங்கைக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்வதாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அளித்த உறுதிமொழி குறித்து மேலும் பேசிய துணைத் தூதுவர், இந்திய அரசாங்கத்திற்கும், தமிழக அரசாங்கத்திற்கும், மாநில மக்களுக்கும் தனது பாராட்டுகளைத் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி அறக்கட்டளையின் பரசுராமன் ஒளிவண்ணன், முன்னாள் ரோட்டரி ஆளுநர் எம்.எஸ். மதிவாணன், தொழிலதிபர் வி.ஜி. சந்தோஷம், தொழிலதிபர் சுதாகர் ஜெயராஜ், மருந்து நிறுவன உரிமையாளர் வீரமணி, கொடைக்கானலைச் சேர்ந்த ஹோட்டல் அதிபர் ஸ்ரீஹரன் பாலன் மற்றும் கருவுறுதல் கிளினிக்கின் பணிப்பாளர் வைத்தியர். முத்துக்குமார் உட்பட ஏராளமானோர் கலந்துகொண்ட   அதே வேளை, வள்ளலார் சபையின் உறுப்பினர்கள் (அருட்பெருஞ்ஜோதி, வடலூர்) இலங்கைக்கு சாத்தியமான அனைத்து ஆதரவையும் வழங்க ஒப்புக்கொண்டனர்.

பிரதி உயர்ஸ்தானிகர், பங்கேற்பாளர்களுக்கு நன்றி தெரிவிக்கையில், இலங்கையில் புதிய ஏற்றுமதி சார்ந்த தொழில்களை ஆரம்பிப்பது உள்ளிட்ட இலங்கையின் தற்போதைய தேவைகளை விளக்கினார். சுற்றுலா மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பைச் சார்ந்து இருக்கும் நாட்டின் வருமானம் ஈஸ்டர் தாக்குதல்கள் மற்றும் அதைத் தொடர்ந்து ஏற்பட்ட கோவிட்-19 உலகளாவிய தொற்றுநோயைத் தொடர்ந்து பொருளாதாரத்திற்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியதாகக் குறிப்பிட்டார். தொற்றுநோய் காரணமாக பல இலங்கையர்கள் வெளிநாட்டு வேலைகளை இழந்துள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார். புராணங்களில் 'குபேர பூமி' (செல்வத்தின் தேசம்) என்று குறிப்பிடப்படும் இலங்கை மீண்டும் எழுச்சி பெற்று அதன் மகிமையுடன் வாழும் என்று துணை உயர்ஸ்தானிகர் குறிப்பிட்டார்.

இலங்கையின் பிரதி உயர்ஸ்தானிகராலயம்,

சென்னை

2022  ஜூன் 10

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close