நாடு அனுபவித்து வரும் தற்போதைய பொருளாதார வழிவகைகள் குறித்து கலந்துரையாடி, வெளிநாடுகளிலுள்ள தூதரகங்களின் மூலமாக தீர்வுகளை நாடும் வகையில், வெளிநாட்டு அலுவல்கள் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ், மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க, வெளிவிவகார செயலாளர் திருமதி. அருணி விஜேவர்தன மற்றும் அனைத்து வெளிநாட்டு தூதரகங்களின் தலைவர்களும் இன்று வெபினாரில் கலந்துகொண்டனர்.
கூட்டத்திற்கு தலைமை தாங்கிய கௌரவ. அமைச்சர், இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடி மற்றும் அரசாங்கம் எதிர்கொள்ளும் சிரமங்களை எடுத்துரைத்ததுடன், முதலீடுகள், வர்த்தகம் மற்றும் சுற்றுலாவை ஊக்குவிப்பதற்கான விரிவான பணிகளுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் அனைத்து வெளிநாட்டுத் தூதரகங்களினதும் பிரதான செயற்பாடுகள் பொருளாதார இராஜதந்திரத்தை ஊக்குவிப்பதாக அமைய வேண்டும் எனக் குறிப்பிட்டார்.
இந்நிகழ்வில் பேசிய மத்திய வங்கியின் ஆளுநர், பொருளாதார இராஜதந்திரத்தை மேம்படுத்துவதற்கான முன்னோக்கிச் செல்லும் வழிகள் மற்றும் வெளிநாட்டுத் தூதரகங்கள் இது தொடர்பான தமது முயற்சிகளை தொடர்ந்து ஊக்குவிக்கக்கூடிய பகுதிகள் குறித்து விரிவாக விளக்கினார்.
வெளிநாட்டு தூதரகங்களால் முன்மொழியப்பட்ட பொருளாதார இராஜதந்திர முயற்சிகள் குறித்து மத்திய வங்கி, நிதி அமைச்சு மற்றும் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு ஆகியவற்றுக்கு இடையே ஒரு உரையாடலை உருவாக்குவதற்கு இன்றைய கலந்துரையாடல் முயற்சி அமைச்சினால் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார செயலாளர் தெரிவித்தார்.
கொழும்பில் உள்ள குழுவிற்கும் அனைத்து வெளிநாட்டுத் தூதரகங்களின் தலைவர்களுக்கும் இடையில் விரிவான மற்றும் பயனுள்ள கருத்துப் பரிமாற்றம் நடைபெற்றது.
வெளிநாட்டுத் தூதரகங்கள் பொருளாதார இராஜதந்திரத்தை மேம்படுத்துவதற்கு எடுத்துள்ள அனைத்து முயற்சிகளையும் நடவடிக்கைகளையும் பாராட்டிய வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் பீரிஸ், இலங்கை மத்திய வங்கிக்கும் நிதியமைச்சுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைக்கு அமைச்சு தொடர்ந்தும் உதவுவதாகத் தெரிவித்தார்.
வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு,
கொழும்பு.
2022 ஜூன் 07