உயர்ஸ்தானிகர் எயார் சீஃப் மார்ஷல் தாபரே லியனகே சுமங்கல டயஸ் அவர்கள் நற்சான்றிதழ் கடிதங்களை மலேசியாவின் அதி மேதகு யாங் டி-பெர்துவான் அகோங் அல்-சுல்தான் அப்துல்லா ரியாதுதீன் அல்-முஸ்தபா பில்லா ஷா இப்னி அல்மர்ஹூம் சுல்தான் ஹாஜி அஹ்மத் ஷா அல்-முஸ்தாயின் பில்லாவிடம் 2022 ஏப்ரல் 25ஆந் திகதி இஸ்தானா நெகாரா, கோலாலம்பூரில் வைத்து கையளித்தார்.
நற்சான்றிதழ் வழங்கும் நிகழ்வில் கௌரவ அணிவகுப்பு வழங்கப்பட்டு, இலங்கையின் தேசிய கீதம் இசைக்கப்பட்டது. கௌரவ அணிவகுப்பைத் தொடர்ந்து நற்சான்றிதழ்களை கையளித்ததன் பின்னர் மன்னரை மரியாதை நிமித்தமாகச் சந்தித்தார். புதிய உயர்ஸ்தானிகரின் பணிகள் வெற்றியடைய வாழ்த்திய மன்னர் யாங் டி-பெர்டுவான் அகோங் XVI, மலேஷியா மற்றும் இலங்கை ஆகிய இருதரப்பு உறவுகளை சோதித்திருந்த காலத்தை அன்புடன் நினைவு கூர்ந்தார். இலங்கையின் கோவிட்-19 நிலைமை மற்றும் நிலைமையை சமாளிக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் மன்னர் கேட்டறிந்தார்.
மலேசியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் வாழ்த்துக்களை மலேஷிய மன்னருக்கு தெரிவித்ததுடன், இலங்கையின் தற்போதைய நிலைமை மற்றும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தலைமையில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விளக்கினார். வர்த்தக உறவுகளை மேலும் வலுப்படுத்துவதற்கும், இரு நாடுகளுக்கும் உகந்த துறைகளில் ஒத்துழைப்பின் புதிய எல்லைகளைத் திறப்பதற்கும் அவர் ஆர்வம் காட்டினார்.
மேலும் மனித வளத்துறையில் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ள வாய்ப்புகளை அதிகரிப்பதற்கு உயர்ஸ்தானிகர் விருப்பம் தெரிவித்தார்.
மலேசியாவுக்கான இலங்கைத் தூதுவராக நியமிக்கப்படுவதற்கு முன்னர், எயார் சீஃப் மார்ஷல் சுமங்கல டயஸ் இலங்கை விமானப்படையின் 17வது தளபதியாக இருந்தார்.
இலங்கை உயர்ஸ்தானிகராலயம்,
கோலா லம்பூர்
2022 ஏப்ரல் 27