புதுடில்லிக்கான தனது இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை நிறைவு செய்யும் முகமாக, இந்திய அரச வங்கியினூடாக இந்திய அரசாங்கத்தினால் இலங்கை அரசாங்கத்திற்கு வழங்கப்பட்ட 1 பில்லியன் அமெரிக்க டொலர் குறுகிய கால சலுகைக் கடன் வசதி தொடர்பான உடன்படிக்கையில் இன்று (17) கைச்சாத்திடப்பட்ட நிகழ்வில் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ கலந்து கொண்டார்.
கடந்த ஆண்டு டிசம்பரில் அமைச்சர் ராஜபக்ஷவின் புதுடில்லிக்கான விஜயத்தின் போது இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே ஒப்பந்தம் செய்யப்பட்ட நான்கு தூண் பொருளாதார ஒத்துழைப்பு ஏற்பாட்டின் முக்கிய அங்கமாக அமைந்த 1 பில்லியன் டொலர் கடன் வசதி, உணவு, மருந்துகள் மற்றும் ஏனைய அத்தியாவசியப் பொருட்களைக் கொள்வனவு செய்வதற்காக இலங்கை அரசாங்கத்திற்கு நீட்டிக்கப்பட்டது.
நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ, இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர் மற்றும் இந்திய நிதி அமைச்சர் ஸ்ரீமதி நிர்மலா சீதாராமன் ஆகியோரின் முன்னிலையில் இன்று பிற்பகல் புதுடில்லியில் உள்ள நிதி அமைச்சில் வைத்து கைச்சாத்திடும் நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் இந்திய அரச வங்கியின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ஸ்ரீ அஸ்வினி குமார் திவாரி, வங்கியின் பொது முகாமையாளர் ஸ்ரீ வினோத் குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இலங்கை அரசாங்கத்தின் சார்பாக நிதி அமைச்சின் செயலாளர் எஸ்.ஆர். ஆட்டிகல அவர்களும், இந்திய அரச வங்கியின் சார்பாக பிரதிப் பொது முகாமையாளர் ஸ்ரீ புஷ்கர் ஜா அவர்களும் உடன்படிக்கையில் கைச்சாத்திட்டனர்.
கைச்சாத்திடும் நிகழ்விற்கு முன்னதாக, நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவை இந்திய நிதி மற்றும் வெளிவிவகார அமைச்சர்கள் வடக்குத் தொகுதியிலுள்ள நிதியமைச்சில் இருதரப்புக் கலந்துரையாடலுக்காக கூட்டாக வரவேற்றனர்.
இருதரப்புக் கலந்துரையாடலின் போது, இலங்கையின் தற்போதைய பொருளாதார சவால்களை எதிர்கொள்ளும் நோக்கில் இரு நாடுகளுக்கும் இடையில் குறுகிய, நடுத்தர மற்றும் நீண்ட கால பொருளாதார ஒத்துழைப்புக்கான கட்டமைப்பை அமைப்பதற்கு இரு தரப்பினரும் ஒப்புக்கொண்டனர்.
இந்த நோக்கத்துடன், மூன்று அமைச்சர்களும் வழக்கமான தொடர்பில் இருப்பதற்கு ஒப்புக்கொண்டதுடன், வழக்கமான உரையாடலைப் பேணுவதற்காக இரு நாடுகளினதும் சிரேஷ்ட அதிகாரிகளைக் கொண்ட ஒருங்கிணைப்புப் பொறிமுறையொன்று அமைக்கப்பட்டது.
இந்த சந்திப்பில் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவுடன் இந்தியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட, நிதி அமைச்சின் செயலாளர் எஸ்.ஆர். ஆட்டிகல மற்றும் இந்தியாவுக்கான இலங்கையின் பிரதி உயர்ஸ்தானிகர் நிலூக கதுருகமுவ ஆகியோர் கலந்துகொண்டனர்.
முந்தைய நாள், அமைச்சர் ராஜபக்ஷ இந்தியாவின் மின்சாரம், புத்தாக்கம் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சர் ஸ்ரீ ராஜ் குமார் சிங்கைச் சந்தித்து, மின்சாரம் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறையில் இருதரப்பு ஒத்துழைப்பை மேலும் ஆழப்படுத்தி, விரிவுபடுத்துவதற்கான வழிகள் மற்றும் வழிமுறைகள் குறித்து கலந்துரையாடினார். இந்திய அரசின் தலைமைப் பொருளாதார ஆலோசகர் பேராசிரியர் ஏ. நாகேஸ்வரனும் நிதியமைச்சர் ராஜபக்ஷவை சந்தித்துக் கலந்துரையாடினார்.
இலங்கை உயர்ஸ்தானிகராலயம்,
புதுடில்லி
2022 மார்ச் 24