இலங்கை - அமெரிக்க கூட்டாண்மை உரையாடலின் நான்காவது அமர்வு

 இலங்கை – அமெரிக்க கூட்டாண்மை உரையாடலின் நான்காவது அமர்வு

2022 மார்ச் 23ஆந் திகதி கொழும்பில் நடைபெற்ற நான்காவது இலங்கை - அமெரிக்க கூட்டாண்மை உரையாடலின் போது பின்வரும் அறிக்கை இலங்கை மற்றும் அமெரிக்க அரசாங்கங்களால்  வெளியிடப்பட்டது.

ஆரம்ப வாசகம்:

பொருளாதார செழுமை, நிலையான அபிவிருத்தி, ஜனநாயகம், மனித உரிமைகள் மற்றும் சட்டத்தின் ஆட்சி ஆகியவற்றுக்கான தமது பகிரப்பட்ட அர்ப்பணிப்பைப் புதுப்பித்து, இலங்கை - அமெரிக்க கூட்டாண்மை உரையாடலின் நான்காவது அமர்வை இலங்கையும், ஐக்கிய அமெரிக்காவும் 2022 மார்ச் 23ஆந் திகதி இலங்கையின் கொழும்பில் கூட்டின. இலங்கையின் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் மற்றும் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் அரசியல் விவகாரங்களுக்கான பிரதிச் செயலாளர் விக்டோரியா நுலாண்ட் ஆகியோரின் தலைமையில்  இந்த சந்திப்பு இடம்பெற்றது.

சக ஜனநாயக நாடுகளாக பகிரப்பட்ட மதிப்புக்களில் உறுதியாக வேரூன்றி, கூட்டாண்மையை  மேலும் வலுப்படுத்துவதற்காக ஒன்றிணைந்து செயங்படும் தமது நோக்கின் அடிப்படையில், இருதரப்பு உறவுகளுக்கான தமது உறுதிப்பாட்டை இரண்டு பிரதிநிதிகளும் மீண்டும் உறுதிப்படுத்தினர்.

கோவெக்ஸ் உடன் இணைந்து 3.4 மில்லியன் தடுப்பூசிகளையும், மற்றும் கடந்த ஆண்டில் கோவிட்-19 தொற்றுநோய்க்குத் தீர்வு காண்பதற்காக 18 மில்லியன் டொலருக்கும் அதிகமான சுகாதார உபகரணங்கள் மற்றும் ஏனைய நிவாரணங்களையும் வழங்கியமைக்காக ஐக்கிய அமெரிக்காவிற்கு  இலங்கை தனது ஆழ்ந்த பாராட்டுக்களை வெளிப்படுத்தியது.

ஏற்கனவே இலங்கை உற்பத்திகளின் ஏற்றுமதிக்கான மிகப்பெரிய சந்தையாக ஐக்கிய அமெரிக்கா உள்ளது என்பதை ஒப்புக்கொண்ட இரண்டு பிரதிநிதிகளும் சந்தை அணுகல், இருதரப்பு வர்த்தகம், முதலீடு மற்றும் சுற்றுலாவை மேம்படுத்துவதற்கான புதிய வாய்ப்புக்களை ஆராய்வதற்கான  தமது நோக்கத்தை மீண்டும் வலியுறுத்தினர். பெண்களின் பொருளாதார மேம்பாட்டிற்கான வாய்ப்புக்களை ஊக்குவிப்பதற்கான தனது உறுதிப்பாட்டை ஐக்கிய அமெரிக்கா வெளிப்படுத்தியது. அந்த நோக்கத்திற்காக, இலங்கையின் சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு, குறிப்பாக பெண்களுக்குச் சொந்தமான வணிகங்களுக்கு ஆதரவளிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட கடன் வசதியை 265 மில்லியன் டொலர்களாக அதிகரித்துள்ள ஐக்கிய அமெரிக்க சர்வதேச அபிவிருத்தி நிதிக் கூட்டுத்தாபனத்தின் பங்கை இலங்கை வரவேற்றது. குறிப்பாக பெண் தொழில்முயற்சியாளர்களை இலக்காகக் கொண்டு இலங்கையில் முதலாவது வர்த்தக முடுக்கியை அறிமுகப்படுத்துவதற்கு அமெரிக்க நிதியுதவியை இலங்கை பாராட்டியுள்ளது.

காலநிலை மாற்றம் மற்றும் ஏனைய சுற்றுச்சூழல் சவால்களை எதிர்கொள்வதற்காக  இரு நாடுகளும் இணைந்து செயற்படுவதற்கு உறுதிபூண்டுள்ளன. 2030ஆம் ஆண்டளவில் புதுப்பிக்கத்தக்க ஆற்றலில் இருந்து 70 வீத மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கும், 2050ஆம் ஆண்டளவில் காபன் நடுநிலையை அடைந்து கொள்வதற்குமான இலங்கையின் இலக்கை ஐக்கிய அமெரிக்கா வரவேற்றுள்ளது. ஐந்தாண்டு 19 மில்லியன் டொலர் இலங்கை எரிசக்தித் திட்டம் மற்றும் மிதக்கும் சூரிய ஆலைக்கான ஆதரவு உட்பட, இந்த இலக்குகளை அடைந்து கொள்வதற்கு உதவியாக நடைபெற்று வரும் ஐக்கிய அமெரிக்க மானிய உதவி ஆகியவை பாராட்டுக்களுடன் குறிப்பிடப்பட்டன.

சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க முகவரமைப்பின் ஊடாக இலங்கையின் நிலையான அபிவிருத்திக்கு தொடர்ந்தும் ஆதரவளிப்பதற்கான தனது நோக்கத்தை ஐக்கிய அமெரிக்கா வெளிப்படுத்தியது. இலங்கை அரசாங்கத்துடன் கலந்தாலோசித்து, இலங்கைச் சிறார்கள் மத்தியில் பாடசாலை சார்ந்த போஷாக்கு மற்றும் எழுத்தறிவை மேம்படுத்துவதற்கான தமது உறுதிப்பாட்டை ஐக்கிய அமெரிக்கப் பிரதிநிதிகள் மீண்டும் உறுதிப்படுத்தினர். 106,000 க்கும் மேற்பட்ட ஆரம்பத் தர மாணவர்கள் பயனடைந்த சேவ் த சில்ட்ரன் இன் மூலம் 2021  இல் முன்னெடுக்கப்பட்ட வெற்றிகரமான ஊட்டச்சத்துப் பிரச்சாரத்தை இலங்கை பாராட்டியது.

இலங்கையும் ஐக்கிய அமெரிக்காவும் கடல்சார் பாதுகாப்பு தொடர்பான ஒத்துழைப்பைத் தொடரவும், விதிகளின் அடிப்படையிலான சர்வதேச ஒழுங்கின் மூலம் இந்து சமுத்திரத்தில் பாதுகாப்பான  கடல்சார் களத்தை உறுதிப்படுத்துவதற்காக ஒன்றாகச் செயற்படவும் தீர்மானித்தன. இந்த சூழலில், சுதந்திரமான, திறந்த மற்றும் வளமான இந்தோ-பசிபிக் பிராந்தியத்தை நோக்கிய ஐக்கிய அமெரிக்க உத்தியானது, வழிசெலுத்துதல் மற்றும் அதிக விமானப் பயணத்தின் சுதந்திரத்தை ஊக்குவிப்பதுடன், இது ஒரு முக்கியமான முன்முயற்சியாகக் குறிப்பிடப்பட்டது. அமெரிக்காவின் மிகையான பாதுகாப்புத் திட்டத்தின் மூலம் மாற்றப்பட்ட மூன்றாவது உயர் தாங்குதிறன் கொண்ட ஐக்கிய அமெரிக்க கடலோரப் பாதுகாப்பு அமைப்பின் எதிர்வரும் விஜயத்தைஇலங்கை வரவேற்றது. இலங்கையின் கடல்சார் கண்காணிப்புத் திறனை வலுப்படுத்துவதற்கும், மனிதாபிமான மற்றும் அனர்த்தத்திற்குப் பின்னரான தேவைகளுக்குப் பதிலளிப்பதற்கும் அண்மையில் அறிவிக்கப்பட்ட கிங் எயார் திட்டத்தை ஐக்கிய அமெரிக்கா சுட்டிக்காட்டியது. ஆட்கடத்தல் மற்றும் ஏனைய சட்டவிரோத நடவடிக்கைகளைத் தடுப்பதில் ஐக்கிய அமெரிக்காவின் ஆதரவை இலங்கை வரவேற்றது.

மனிதாபிமான கண்ணிவெடி அகற்றல் மற்றும் இடர் நிவாரணம், கூட்டு இராணுவ ஈடுபாடுகள், இலங்கை அதிகாரிகளுக்கான மனித உரிமைகள் பயிற்சி மற்றும் அமெரிக்க கப்பல்கள் மற்றும் இராணுவ அதிகாரிகளின் விஜயங்களின் பரிமாற்றம் உட்பட தற்போது நடைபெற்று வரும் இருதரப்பு காவல் மற்றும் பாதுகாப்புத் துறை ஒத்துழைப்பை இரு பிரதிநிதிகளும் வரவேற்றனர். இலங்கையுடனான பயங்கரவாத எதிர்ப்பு ஒத்துழைப்பை மேலும் விரிவுபடுத்துவதற்கான வாய்ப்புக்களை ஆராய்வதற்கு ஐக்கிய அமெரிக்கா தீர்மானித்துள்ளது.

அபிவிருத்தி மற்றும் செழுமைக்காக நல்லிணக்கம் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்துவதற்காக இலங்கை முன்னெடுத்துள்ள நடவடிக்கையை ஐக்கிய அமெரிக்கா வரவேற்றுள்ளது. நல்லிணக்கம், மனித உரிமைகளை மேம்படுத்துதல் மற்றும் பாதுகாத்தல், ஜனநாயகம், ஜனநாயக நிறுவனங்கள் மற்றும் நடைமுறைகளை வலுப்படுத்துதல், நல்லாட்சி, நீதி மற்றும் சட்டத்தின் ஆட்சி ஆகியவற்றில் இலங்கை தனது முன்னேற்றத்தை சுட்டிக் காட்டியது. பயங்கரவாதத் தடைச் சட்டத்தை  சீர்திருத்துவதற்கான முயற்சிகள், நீண்டகால பயங்கரவாதத் தடைச் சட்டக் கைதிகளை விடுவித்தல், நீதி சீர்திருத்த நிகழ்ச்சி நிரல் மற்றும் சிவில் சமூகப் பிரதிநிதிகளுடனான ஈடுபாடு உள்ளிட்ட இந்தப் பகுதிகளில் முன்னேற்றத்தை அமெரிக்கா ஒப்புக்கொண்டது. நல்லிணக்கம் மற்றும் மனித உரிமைகளுக்கான கடப்பாடுகளில் தொடர்ந்தும் முன்னேறுமாறு இலங்கையை ஐக்கிய அமெரிக்கா ஊக்குவித்தது.

கல்வி மற்றும் கலாச்சாரத்தில் இரு நாடுகளுக்கும் இடையே நடைபெற்று வரும் ஒத்துழைப்பிற்கு இரு பிரதிநிதிகளும் வலுவான ஆதரவை தெரிவித்தனர். ஐக்கிய அமெரிக்கா - இலங்கை ஃபுல்பிரைட் திட்டத்தின் 70வது ஆண்டு நிறைவையும், இலங்கையின் அபிவிருத்திக்கான அதன் பங்களிப்பையும் எடுத்துரைத்து, கல்விப் பரிமாற்றங்களின் மதிப்பை ஐக்கிய அமெரிக்கா வலியுறுத்தியது. இரு நாடுகளுக்கும் பயனளிக்கும் வகையில் இலங்கை மாணவர்களுக்கான பல்கலைக்கழக பங்காளித்துவம் மற்றும் வெளிநாட்டுக் கல்விக்கான வாய்ப்புக்களை மேலும் விரிவுபடுத்துவதற்கு ஒன்றிணைந்து செயற்படுவதற்கு அமெரிக்கா விருப்பம் தெரிவித்தது. கடந்த 17 வருடங்களாக அமெரிக்காவிடமிருந்து பெறப்பட்ட கலாச்சாரப் பாரம்பரிய நிதியுதவியின் ஊடாக இலங்கையின் செழுமையான கலாச்சாரப் பாரம்பரியத்தைப் பாதுகாத்துக் கொண்டாடுவதற்கு மேற்கொள்ளப்பட்டு வரும்  முயற்சிகளை இரு பிரதிநிதிகளும் வரவேற்றனர். இலங்கையின் கல்வித் துறையை வலுப்படுத்துவதற்காக ஆங்கில மொழியைக் கற்பித்தல், ஆசிரியர் பயிற்சி, பாடத்திட்ட அபிவிருத்தி மற்றும் ஏனைய ஆதரவை வழங்குவதற்கு தொடர்ந்தும் ஒத்துழைப்பை வழங்குவதற்கு பிரதிநிதிகள் தீர்மானித்தனர்.

இலங்கையும் ஐக்கிய அமெரிக்காவும் இருதரப்பு உறவின் முக்கியத்துவத்தை வலியுறுத்தியதுடன், பரஸ்பர நலனுக்கான பங்காளித்துவத்தை மேலும் வலுப்படுத்துவதற்காக பரந்த அளவிலான  துறைகளில் ஒத்துழைப்பைத் தொடருவதற்குத் தீர்மானித்தன.

நிறைவு வாசகம்.

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close