அமெரிக்க அரசியல் விவகாரங்களுக்கான துணைச் செயலாளர் விக்டோரியா நுலாண்ட் இலங்கைக்கு  விஜயம் செய்யவுள்ளார்

அமெரிக்க அரசியல் விவகாரங்களுக்கான துணைச் செயலாளர் விக்டோரியா நுலாண்ட் இலங்கைக்கு  விஜயம் செய்யவுள்ளார்

அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் அரசியல் விவகாரங்களுக்கான துணைச்  செயலாளர் விக்டோரியா  நுலாண்ட் 2022 மார்ச் 22 முதல் 23 வரை இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார். அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தில் பிராந்திய மற்றும் இருதரப்புக் கொள்கை விவகாரங்களை துணைச் செயலாளர் நுலாண்ட் மேற்பார்வை செய்கின்றார்.

இந்த விஜயத்தின் போது, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் ஜி.எல். பீரிஸ் மற்றும் வெளிவிவகாரச் செயலாளர் ஜயநாத் கொலம்பகே ஆகியோரை  துணைச் செயலாளர் நுலாண்ட் சந்திக்கவுள்ளார். 2022 மார்ச் 23, புதன்கிழமை வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சில் நடைபெறவுள்ள இலங்கை - அமெரிக்கக் கூட்டாண்மை உரையாடலின் 4வது அமர்வுக்கு அமைச்சர் பீரிஸ் மற்றும் துணைச் செயலாளர் நுலாண்ட் ஆகியோர் இணைத்  தலைமை வகிக்கவுள்ளனர். அத்துடன், துணைச் செயலாளர் நூலன்ட் கொழும்புத் துறைமுகத்திற்கு விஜயம் செய்து, வர்த்தக மற்றும் சிவில் சமூகத்தினரை சந்திக்கவுள்ளார்.

இலங்கை - அமெரிக்கக் கூட்டாண்மை உரையாடல் கடந்த 2019ஆம் ஆண்டு வொஷிங்டன்  டி.சி. யில் நடைபெற்றது.  இருதரப்பு உறவுகளை மறுபரிசீலனை செய்வதற்கும், இலங்கைக்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான ஒத்துழைப்பையும் கூட்டாண்மையையும் மேலும் வலுப்படுத்துவதற்கான வழிகளை ஆராய்வதற்குமான ஒரு முக்கியமான தளமாக இந்தக் கூட்டு உரையாடல் விளங்குகின்றது.

அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான உதவிச் செயலாளர் டொனால்ட் லூ மற்றும் இந்தோ - பசிபிக் பாதுகாப்பு விவகாரங்களுக்கான கொள்கைத் துணைப் பாதுகாப்புச்  செயலாளர் அமண்டா டோரி ஆகியோர் துணைச் செயலாளர் நுலாண்டுடன் விஜயம் செய்யவுள்ளனர்.

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு

கொழும்பு

2022 மார்ச் 21

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close