இலங்கைக்கு விஜயம் செய்துள்ள சவூதி அரேபியாவின் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் மாண்புமிகு இளவரசர் பைசல் பின் ஃபர்ஹான் பின் அப்துல்லா அல் சௌத் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரை சந்தித்ததுடன், அதனைத் தொடர்ந்து வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸை 2022 மார்ச் 14ஆந் திகதி வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சில் வைத்து சந்தித்தார்.
சவூதி அரேபிய வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சரை வரவேற்ற அமைச்சர் பீரிஸ், இலங்கை - சவூதி அரேபிய இருதரப்பு உறவுகளை முடிவுகள் சார்ந்த, பன்முகக் கூட்டாண்மையாக மாற்றுவதற்கான இலங்கையின் ஆர்வத்தை வெளிப்படுத்தினார்.
தற்போதைய உலகளாவிய சூழலில், பரஸ்பர நலனுக்காக இருதரப்பு ஆர்வமுள்ள பல துறைகளில் வலுவான உறவுக்கு இரு அமைச்சர்களும் ஒப்புக்கொண்டனர்.
ஐ.நா.வில், குறிப்பாக ஜெனிவாவில் மனித உரிமைகள் பேரவையின் 49வது அமர்வின் போது, இலங்கைக்கு சவூதி அரேபியா நல்கிய வலுவான ஆதரவையும் அனுதாப அணுகுமுறையையும் அமைச்சர் பீரிஸ் பாராட்டினார்.
கொழும்புத் துறைமுகம், ஹம்பாந்தோட்டை துறைமுகம், ஹம்பாந்தோட்டையில் பிரத்தியேகமான மருந்து வலயங்கள், புதிதாக அடையாளம் காணப்பட்ட சர்வதேச தகவல் தொழில்நுட்பப் பூங்காக்கள், மட்டக்களப்பில் துணி / ஆடை வலயம் ஆகியவற்றில் சவூதி அரேபியாவின் முதலீடுகளை ஊக்குவித்த வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் பீரிஸ், சவூதி அரேபிய தொழில் சந்தையில் இலங்கையர்களுக்கான அதிகமான வேலை வாய்ப்புக்களை எதிர்பார்ப்பதாகக் குறிப்பிட்டார்.
அபிவிருத்தி ஒத்துழைப்பு என்பது இருதரப்பு பங்காளித்துவத்தின் முக்கிய அங்கம் எனக் குறிப்பிட்ட அமைச்சர் பீரிஸ், இலங்கைக்கு உட்கட்டமைப்பு அபிவிருத்தி உதவிகளை வழங்கியமைக்காக சவுதி அரேபியாவிற்கு இலங்கையின் பாராட்டுக்களைத் தெரிவித்தார்.
பேச்சுவார்த்தையின் போது, இரு நாடுகளுக்கும் இடையே ஏற்கனவே நிலவுகின்ற உற்சாகமான இருதரப்பு உறவுகளை மேலும் ஆழப்படுத்துவதற்கான சவூதி அரேபிய அரசாங்கத்தின் உறுதிப்பாட்டையும், பொருளாதார ஒத்துழைப்பையும் சவூதி அரேபிய வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் மீண்டும் வலியுறுத்தியனார். சவூதி அரேபியாவை தற்போதைய எண்ணெய் சார்ந்த நிலையில் இருந்து மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் டிஜிட்டல் பொருளாதாரத்திற்கு மாற்றுவதற்கான வழிமுறையாக, சவூதி அரேபியா 2030 இன் இலக்கை அவர் சுட்டிக் காட்டினார்.
பிராந்திய ஒத்துழைப்புக்கான இராஜாங்க அமைச்சர் தாரக்க பாலசூரிய, வெளியுறவுச் செயலாளர் அட்மிரல் பேராசிரியர் ஜயநாத் கொலம்பகே மற்றும் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகள் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சில் இடம்பெற்ற இருதரப்பு சந்திப்பில் கலந்து கொண்டனர். இலங்கைக்கான சவூதி அரேபியாவின் தூதுவர் அப்துல்னாசர் பின் ஹூசைன் அல்-ஹர்தி, மாண்புமிகு வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் அலுவலகத்தின் தலைமைப் பணிப்பாளர் அப்துல்ரஹ்மான் அர்கான் ஐ. அல்தாவூத், இரண்டாவது செயலாளர் தாயிஃப் அப்துல்காலிக் எஸ். கடாசா மற்றும் அரசியல் விவகாரங்களுக்கான பொறுப்பதிகாரி அஃப்னான் ஃபஹத் ஏ.அல் ஹூமைதான் ஆகியோருடன் சவூதி அரேபிய வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் மாண்புமிகு இளவரசர் பைசல் பின் ஃபர்ஹான் பின் அப்துல்லா அல்-சௌத் இந்தக் கலந்துரையாடல்களில் இணைந்திருந்தார்.
வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு,
கொழும்பு
2022 மார்ச் 14