ஈரானின் தேயிலை சங்கம், இலங்கைத் தேயிலை ஏற்றுமதியாளர்கள் சங்கம் மற்றும் இலங்கை தேயிலை சபை ஆகியவற்றுடன் இணைந்து தெஹ்ரானில் உள்ள இலங்கைத் தூதரகம் 'ஈரான் மற்றும் அண்டை நாடுகளில் இலங்கைத் தேயிலை சந்தையை விரிவுபடுத்துதல்' என்ற தலைப்பில் 2022 மார்ச் 02ஆந் திகதி சான்சரி வளாகத்தில் ஒரு கலந்துரையாடலை ஏற்பாடு செய்தது. தேயிலை சங்கங்கள், உணவு மொத்த விற்பனை சங்கங்கள், தேயிலை இறக்குமதியாளர்கள் மற்றும் பிரபல வர்த்தகர்கள் உட்பட 30க்கும் மேற்பட்ட அழைப்பாளர்கள் கலந்து கொண்டனர். இலங்கை தேயிலை தொழில்துறை குறித்து பங்கேற்பாளர்களுக்கு விளக்கமளிப்பதும், மேற்கு ஆசிய பிராந்தியத்தில் இலங்கைத் தேயிலை சந்தையை பாதுகாப்பதும் இந்த கலந்துரையாடலின் நோக்கங்களாகும்.
கலந்துரையாடலை ஆரம்பித்து வைத்து உரையாற்றிய ஈரானுக்கான இலங்கைத் தூதுவர் விபுலதேஜா விஸ்வநாத் அபோன்சு, கொவிட்-19 நெருக்கடியின் போது குறையாத இலங்கையின் ஏற்றுமதிகளில் ஒன்றாக தேயிலை உள்ளது எனத் தெரிவித்தார். சிலோன் தேயிலையின் சுவை மற்றும் பல ஆரோக்கிய நன்மைகள் காரணமாக இலங்கைத் தேயிலைக்கான அதிகரித்த தேவையை எடுத்துரைத்த அவர், இலங்கைத் தேயிலை ஈரான் இஸ்லாமியக் குடியரசில் தனது பிரபலத்தைத் தக்கவைத்து, அண்டை நாடுகளில் ஒரு இடத்தைப் பாதுகாக்கும் வகையில் தயாரிப்பை மீண்டும் அறிமுகப்படுத்துமாறு தேயிலை பங்குதாரர்களிடம் கேட்டுக்கொண்டார். இலங்கைத் தேயிலைக்கான நான்காவது பெரிய ஏற்றுமதி நாடாக ஈரான் இருப்பதால், அது ஒரு முக்கியமான சந்தையாகும் என்றும் தூதுவர் வலியுறுத்தினார்.
இலங்கைத் தேயிலை ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் சஞ்சய ஹேரத் இலங்கைத் தேயிலை தொழிற்துறையின் ஒட்டுமொத்த பார்வை, இலங்கைத் தேயிலை சபையினால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள கடுமையான தர நடவடிக்கைகள், இலங்கைத் தேயிலை ஏற்றுமதி சந்தையின் தற்போதைய போக்குகள் மற்றும் ஈரான் மற்றும் அண்டை நாடுகளில் நடந்துவரும் மற்றும் எதிர்கால சந்தைப்படுத்தல் பிரச்சாரங்களை முன்வைத்தார். மேலும், பசுமை விவசாய பெருந்தோட்ட பொருளாதாரத்தை நடைமுறைப்படுத்துவதன் கீழ், இலங்கைத் தேயிலை கைத்தொழில் நிலையான மற்றும் ஆரோக்கிய காரணிகளுக்கு முன்னுரிமை வழங்கியுள்ளதாக அவர் வலியுறுத்தினார்.
ஈரான் இஸ்லாமிய குடியரசில் உள்ள தேயிலை சந்தையை விளக்கிய ஈரான் தேயிலை சங்கத்தின் சார்பில், ஃபேன் நிறுவனத்தின் தலைமை நிறைவேற்று அதிகாரி அலிரேசா பர்டாய், கொவிட்-19 தொற்று நிலைமை காரணமாக ஈரானில் இலங்கை தேயிலை சந்தை வீழ்ச்சியடைந்து வரும் போக்கைக் காட்டியுள்ளதாகவும், அதிக விலைகள் மற்றும் விநியோகச் சங்கிலி உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்தும் குறிப்பிட்டார். மேற்கு ஆசிய பிராந்தியத்தில் இலங்கைத் தேயிலை ஏற்றுமதியாளர்களுக்கு கிடைக்கக்கூடிய வாய்ப்புக்களை சுட்டிக்காட்டிய பர்தாய், ஈரானில் இலங்கைத் தேயிலை சந்தையை தக்கவைத்துக்கொள்வதற்கான தனது முழுமையான ஆதரவை உறுதியளித்தார்.
இதற்கு பதிலளித்த தூதுவர் அபோன்சு, மனிதாபிமான வர்த்தக பொறிமுறையின் கீழ், இலங்கை மற்றும் ஈரான் இஸ்லாமிய குடியரசின் சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் ஈரானிய தேயிலை சந்தையின் கோரிக்கைகளை இலங்கைத் தூதரகம் தொடர்ந்தும் பூர்த்தி செய்து வருவதாகத் தெரிவித்தார். கலந்துரையாடலுக்கான அழைப்பை வழங்கிய இலங்கைத் தூதுவர் மற்றும் அவரது ஊழியர்களுக்கு ஈரான் தேயிலை சங்கம் நன்றிகளைத் தெரிவித்தது.
இந்த நிகழ்வானது ஈரானிய தேயிலை இறக்குமதியாளர்களுக்கு இலங்கைத் தேயிலை ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் தலைவருடன் தமது தொடர்புகளைப் பரிமாறிக் கொள்ள ஒரு தளத்தை உருவாக்கியது. ஈரானில் உள்ள இலங்கைத் தேயிலை இறக்குமதியாளர்களுக்கு எந்தவொரு பிரச்சினையையும் தீர்த்துக்கொள்ள இது ஒரு வாய்ப்பை வழங்கியது.
பங்கேற்பாளர்களுக்கு தூதரகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட உயர் தேநீர் விருந்து வழங்கப்பட்டதுடன் இலங்கைத் தேயிலை பற்றிய ஆவணப்படமும் திரையிடப்பட்டது.
இலங்கைத் தூதரகம்,
தெஹ்ரான்
2022 மார்ச் 07