இந்தியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட, இந்தியாவின் நிதி மற்றும் பெருநிறுவன விவகார அமைச்சர் ஸ்ரீமதி நிர்மலா சீதாராமன் இன்று (11) புது டில்லியில் சந்தித்தார்.
இந்த இக்கட்டான நேரத்தில் இலங்கைக்கு ஆதரவளிப்பதில் இந்திய நிதியமைச்சர் மேற்கொண்ட தனிப்பட்ட அக்கறைக்கு உயர்ஸ்தானிகர் மொரகொட நன்றி தெரிவித்தார். கடந்த ஆண்டு டிசம்பரில் இலங்கை நிதியமைச்சர் பசில் ராஜபக்சவின் இந்திய விஜயத்தின் போது ஒப்புக் கொள்ளப்பட்ட ஒத்துழைப்புக்கான நான்கு தூண்களின் கீழ் இந்தியா இலங்கைக்கு வழங்கிய உதவிகளுக்கு அவர் நன்றிகளைத் தெரிவித்தார்.
நான்கு தூண்கள் கொண்ட இருதரப்பு பொருளாதார ஒத்துழைப்புக் கருத்தின் ஒரு பகுதியான அத்தியாவசியப் பொருட்களை கொள்வனவு செய்வதற்கான 1 பில்லியன் அமெரிக்க டொலர் கடன் வரியை முன்கூட்டியே இறுதி செய்வது குறித்தும் உயர்ஸ்தானிகர் அமைச்சர் சீதாராமனைப் பின்தொடர்ந்தார். 2022 ஜனவரி 18ஆந் திகதி நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்கும் இந்திய வெளியுறவு அமைச்சர் கலாநிதி. எஸ். ஜெய்சங்கருக்கும் இடையே நடந்த மெய்நிகர் சந்திப்பில் இது தொடர்பான முன்னேற்றம் கடைசியாக மீளாய்வு செய்யப்பட்டது.
இந்த சந்திப்பின் போது, இலங்கை நிதியமைச்சர் பசில் ராஜபக்சவின் புது டில்லி விஜயத்திற்கான ஏற்பாடுகள் குறித்தும் அமைச்சர் சீதாராமனுடன் உயர்ஸ்தானிகர் மொரகொட கலந்துரையாடினார்.
ஸ்ரீமதி நிர்மலா சீதாராமன் மே 2019 முதல் இந்தியாவின் நிதி மற்றும் பெருநிறுவன விவகார அமைச்சராக செயற்பட்டு வருகின்றார். அதற்கு முன்னர் அவர் 2017 முதல் 2019 வரை பாதுகாப்பு அமைச்சராக செயற்பட்டார். ஸ்ரீமதி சீதாராமன் நிதி மாநில அமைச்சராகவும், வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சின் மாநில அமைச்சராகவும் (சுயாதீனப் பொறுப்பு) பணியாற்றியுள்ளார்.
இலங்கை உயர்ஸ்தானிகராலயம்,
புது டில்லி
2022 பிப்ரவரி 14